Tuesday, July 16, 2019

அப்பக்கமாகச் செல்வேன்

இன்றைய (17 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 3:1-6, 9-12)

அப்பக்கமாகச் செல்வேன்

பாரவோனின் அரண்மனையில் இளவரசர்களோடு இணைந்து நகரங்களைத் திட்டமிட்டுக் கட்டிக்கொண்டிருந்த மோசேயின் வாழ்க்கை ஓரிரவில் மாறிப்போகின்றது. தன் இனத்தானுக்கு நல்லது செய்யப்போய் அது அவருக்கே ஆபத்தாக முடிகிறது. தன் நிலையை நொந்துகொண்டு, தனக்குத் தெரியாத ஒருவரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயைத் தேடி வருகிறார் கடவுள்.

'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்தக் காட்சியைக் காண அப்பக்கமாய்ச் செல்வேன்!' என விரைகிறார் மோசே.

தனக்கு வித்தியாசமாகத் தெரிகிற அனைத்தின்மேலும் கண்களைப் பதிக்கின்றார் மோசே.

இதுவே இவருக்கு வெளிப்பாடாக அமைகிறது.

ஒன்றுமே செய்யாத மனது, அல்லது ஒரு வேலையும் இல்லாத மூளைதான் எல்லாவற்றையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும். தேர்வறையில் இது அடிக்கடி நடக்கும். விடை தெரிந்த மாணவர்கள் வினாக்களுக்கு விடைகள் எழுதிக்கொண்டிருப்பார்கள். விடை தெரியாதவர்கள்தாம் பேனா மூடி, பேனா, ஸ்கேல் என எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்துகொண்டு அவற்றில் இருக்கும் எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருப்பர்.

மோசேயின் கண்கள் முன் ஆடுகள் இருந்தாலும் அவருடைய மனம் ஏனோ அதில் இலயிக்கவில்லை.

தனக்குப் பிடிக்காத அல்லது தனக்குத் தெரியாத ஒரு வேலையை உடனடியாக விடத் தயாராக இருக்கின்றார்.

'சாதரணவைகளுக்காக அல்லது சாதாரணவைகளில் ஒருபோதும் இலயித்துவிடாதே' ('don't settle down for the ordinary') என்பார்கள். மோசே கண்களை உயர்த்திப் பார்க்கின்றார். கடவுளையே காண்கின்றார்.

இன்று நான் மேய்த்துக்கொண்டிருக்கும் ஆடுகள் எவை? அவற்றின் மேலிருந்து என் கண்களை உயர்த்த நான் தயாரா?

1 comment:

  1. தனக்குப் பிடிக்காத ஒரு வேலையை உடனடியாக விடத் தயாராயிருக்கிறார் மோசே என்பது செய்தி.மோசேயின் காலத்தில் சரியென உணரப்பட்ட இந்த விஷயத்தை இன்று நம் இளவல்கள் செய்திடின் நமது எதிர்வினை பாராட்டுதலாக இருக்குமா? இல்லை அவர்களைப் பைத்தியக்கார்ர்கள் என்று தூற்றுமா?ஆனாலும் கூட, “சாதாரணமானவைகளுக்காக அல்லது சாதாரணமானவைகளில் ஒருபோதும் இலயித்து விடாதே”..... அர்த்தம் பொதிந்த விஷயம் தான்.”கண்களை உயர்த்தி உயர்ந்த விஷயங்களைப் பார்க்க முயற்சிக்கும் நமக்கு கடவுளே இறங்கி வந்து காட்சி தருவார்” என்ற ஊக்கம் தரும் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete