Tuesday, May 28, 2019

அரயோபாகு

இன்றைய (29 மே 2019) முதல் வாசகம் (திப 17:15, 22 - 18:1)

அரயோபாகு

நாம் எந்த தர்மத்தை ஏற்றுக்கொள்கிறோமா அந்த தர்மத்தின்படி வாழ்வது ரொம்ப எளிது. ஏனெனில், நாம் வாழ்வது அந்த தர்மத்தின்படிதான் என நாம் நம்மையே உறுதியாக்கிக்கொள்ள முடியும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடெங்கும் ஒரே ஒரு தேசியக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இவர்களுடைய முயற்சிகள் அனைத்திலும் இவர்கள் கைக்கொண்டது 'மகாபாரதம்' சொல்லும் தர்மம். மகாபாரதம் ஒரு போர்க்கள நிகழ்வு. அந்த போர்க்களத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே அடுத்தவர்களை ஏமாற்றியே வெற்றி பெற்றனர். இதற்கு அவர்களின் கடவுள் கிருஷ்ண பரமாத்மாவும் துணை நிற்கிறார். இவரும் சேர்ந்து ஏமாற்றுகிறார். ஆக, 'வெற்றி பெறுவது' என்பது தர்மம். அதற்காக, 'ஏமாற்றுவது தவறில்லை' என்பது ஷத்ரிய தர்மம்.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு (இல்லை! கொலைக்குப் பின்!) பின் அவர்களுடைய கழகத் தொண்டர்கள் தொடங்கியதும் 'தர்ம யுத்தம்'.

இதன் பொருள் ரொம்ப சிம்பிள்: 'ஏமாற்று வேலை'

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரத்தில் உள்ள அரயோபாகு மன்றத்தில் உரையாற்றுகிறார். ஏதென்ஸ் நகரத்தார் அறிவாளிகள். புதிய கருத்துக்களை வரவேற்றுக் கேட்பவர்கள். ஆக, உடல் தாண்டி இவர்கள் மூளைக்கு அன்றே கடந்து சென்றவர்கள். இவர்கள் ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். கட்டியவர்கள் நிறைய கடவுளர்களுக்கு அதை அர்ப்பணித்துவிட்டு, 'யாரும் அறியாத கடவுளுக்கு' என்று அந்தக் கடவுளுக்கும் பீடம் வைத்த புத்திசாலிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள்.

என் நண்பர் ஒருவர் தன் நண்பர்களுக்கு கிஃப் வாங்கப் போகும்போதெல்லாம், 'இது இப்ப இருக்கிற ப்ரண்டுக்கு. இது அடுத்து வர்றவருக்கு' என்று வாட்ச், பெர்ஃப்யூம் என எல்லாமே இரண்டாக வாங்குவார். அவர் கொடுக்கும் ராசியோ என்னவோ, கிப்ட் கொடுத்த சில நாள்களில் சண்டை போட்டு பிரிந்துவிடுவார். புதிய நண்பர் பார்க்கத் தொடங்குவார்.

வரப் போகிற நண்பருக்கு இப்பயே கிஃப்ட் வாங்கும் இவர் போல, ஒருவேளை இருக்கலாம் என்று நினைக்கிற கடவுளுக்கு பீடம் கட்டுகிறார்கள் ஏதென்ஸ் மக்கள்.

இதைக் காண்கிற பவுல், இதையே தன்னுடைய கருத்துரைக்கான பொருளாக எடுக்கின்றார். 'அந்தக் கடவுளைப் பற்றி நான் பேசுகிறேன்' என பவுல் தொடங்குவது, பவுலின் அறிவுத்திறனுக்குச் சான்று.

இறுதியில், 'இறந்தவர் உயிர்த்தல்' பற்றிப் பேசியதால் சிலர் பவுலைக் கிண்டல் செய்கின்றனர். சிலர், 'அடுத்த வாரமும் வந்து பேசுங்கள்' என அழைப்பு விடுக்கின்றனர்.

இறந்தவர்கள் உயிர்ப்பு இல்லை என்று நம்பியவர்கள் கிரேக்கர்கள். அந்த தர்மத்தையே அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் பவுல் இயேசுவின் உயிர்ப்பு பற்றி பேசியது அவர்களுக்கு நகைப்பைத் தந்தது.

ஆக, நாம் வாழ்கின்ற ஒரு தர்மம் அடுத்தவருக்கு நகைப்பைத் தரலாம்.

எனக்கு அடிக்கடி தோன்றும்: 'நான் பிரமாணிக்கம் என நினைப்பது அடுத்தவருக்கு பிடிவாதமாகத் தோன்றலாம்.'

எங்கிருந்து நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் அடுத்தவர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பது இருக்கிறது.

பவுலின் மறைத்தூதுப் பணி ஆர்வம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இருந்தாலும், தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதைக் கண்டுகொள்ளாமல் அடுத்த இடத்திற்கு நகரும் அவரின் மனப்பக்குவமும் பிடித்திருக்கிறது.

1 comment:

  1. நடைமுறைக்கு ஒத்த விஷயங்களை நாட்டுக்கு உரக்கச்சொல்லும் ஒரு பதிவு. உண்மைதான்...”தந்தைக்குப் பிரமாணிக்கம் எனத் தோன்றுவது அடுத்தவருக்குப் பிடிவாதமாகத் தோன்றலாம்”..... நம் பிள்ளையைப் பார்த்து “சமத்து” என்று கொஞ்சும் நாம், எதிர்வீட்டுப் பிள்ளையைப்பார்த்து “ ரொம்ப வெவரம்” என்று வயிற்றெரிச்சலோடு சொல்கிறோம் இல்லையா? அது போலத்தான்.நாம் பார்க்கும் இடத்தையும்,பார்க்கும் விதத்தையும் பொறுத்தே பார்க்கும் பொருளின் மதிப்பு கூடவோ,குறையவோ செய்கிறது என்பதும் உண்மையே! ‘இப்பொழுது நீ பேசுவதே பிடிக்கவில்லை என்று சொல்ல ஒரு கும்பல்’ எனில் ‘அடுத்தவாரமும் வந்து பேசுங்கள்’ என்கிறது வேறொரு கும்பல். இதில் யார் சரி? யார் தப்பு? இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேற்றுகிரகத்து மனிதர்களும் இருக்கிறார்கள்.. ...நம் பவுலடியார் போல.தன்னையே முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்,அதைக்கண்டுகொள்ளாமல் அடுத்த இடத்திற்கு நகரும் அவரின் மனப்பக்குவம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதே! மற்றபடி..இந்த தர்மம்,நியாயம் என்பதெல்லாம் “ கொன்றால் பாவம்; தின்றால் போச்சு” எனும் சித்தாந்தத்தை சேர்ந்தவையே! தந்தை கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் அந்த subtle ஆன கேலியும் கிண்டலும் அவரிலிருந்து பீறிட்டு வரவே செய்கின்றன என்பதைக் காட்டும் ஒரு பதிவு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete