Sunday, May 12, 2019

தீட்டு

இன்றைய (13 மே 2019) முதல் வாசகம் (திப 11:1-10)

தீட்டு

'தூய்மை-தீட்டு' பற்றிய விவாதம் மனுக்குலம் தோன்றியது முதல் இருக்கிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகப் பொதுமறை சொன்னாலும், பிறப்பால் உயர்வு-தாழ்வு பாராட்டும் எண்ணம் இன்று வரை நடைமுறையில் இருக்கவே செய்கிறது: ஆண்-பெண், கறுப்பர்-வெள்ளையர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் எனத் தொடங்கி, உணவுப் பழக்கம், மொழி, இனம், நாடு, சமயம், கலாச்சாரம் என அனைத்திலும் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஒரு வட்டத்திற்குள் இருப்போர் அடுத்த வட்டத்திற்குள் இருப்பவரோடு இணைவது இங்கே தடைசெய்யப்படுகிறது.

தொடக்கத் திருஅவையில், 'விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் - செய்யப்படாதவர்கள்' என்ற பாகுபாடு இருப்பதையும், விருத்தசேதனம் செய்யாதவர்கள் தீட்டானவர்கள் என்பதால் அவர்களோடு உணவு அருந்துவது தவறு என்ற கருத்து இருப்பதையும் இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

'நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?' என்று பேதுருவை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டபோது, 'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே' என்று தனக்குச் சொல்லப்பட்டதை விடையாகத் தருகின்றார் பேதுரு.

மேலும், தன்னிடமிருந்த தயக்கத்தை விடுகின்றார்.

திருவிழா ஒன்றில் தப்பாட்டம் ஆடுபவர்கள் தீட்டானவர்கள் என்றும், மேளம் வாசிப்பவர்கள் தூய்மையானவர்கள் என்றும் கருதப்பட்டு, முந்தையவர்கள் ஆலயத்திற்கு வெளியேயும், பிந்தையவர்கள் ஆலயத்திற்கு உள்ளேயும் வைத்து உணவருந்தினர். இரண்டு தோல் கருவிகளும் செய்யப்பட்டது ஒரே வகை மாட்டுத் தோலில்தானே. அப்படி இருக்க அவற்றை வாசிப்பவர்கள் தீட்டானவர்கள்-தூய்மையானவர்கள் என்று பிரிக்கப்படுவது ஏன்?

'கடவுளைத் தடுக்க நான் யார்?' என்று பேதுரு கேட்கின்றார்.

கடவுளைப் போல பார்ப்பவர்கள் தூய்மை-தீட்டு பார்ப்பதில்லை என்று சொல்கிறது இன்றைய முதல் வாசகம்.


1 comment:

  1. இன்றைய காலகட்டத்திற்குமட்டுமல்ல; எந்தக்காலக்கட்டத்திற்குமே பொருந்தக்கூடியதொரு பதிவு. படித்தவர்- படிக்காதவர், இருப்பவர்- இல்லாதவர், இல்லறத்தார்- துறவறத்தாரென எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விடயம் தான் இந்தத் ‘தீட்டு’.பூனைக்கு யார் மணி கட்டுவது? இது அதையும் தாண்டியதொரு சமாச்சாரம். கட்டமுடியாதா இல்லை கட்ட யாருக்கும் துணிவில்லையா... ..தெரியவில்லை.நல்லோர் மேலும் தீயோர் மேலும் விழும் மழையாய், தன்னை வேண்டிக்கேட்போருக்கும்,கேளாதோருக்கும் கொடைகளைப் பொழியும் தூய ஆவியாய், நாமிருக்க அழைக்கப்படுகின்றோமென தன் அனுபவப் பாடத்தை நமக்கு எடுத்து வைக்கிறார் புனித பேதுரு. கடவுளைப்போல் பார்ப்பவர்கள் தூய்மை- தீட்டு பார்ப்பதில்லை எனில் நம் பார்வையும் “ கடவுள் பார்வையாய்” இருக்கட்டுமே! உடலையும்,உள்ளத்தையும் ஒரு சேர சலவை செய்யும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete