Friday, May 24, 2019

இணைப்பு

இன்றைய (25 மே 2019) முதல் வாசகம் (திப 16:1-10)

இணைப்பு

ஒரு தாய் தன் குழந்தையோடு இணைந்திருத்தலுக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருகிறார். ஒரு தாயும் அவருடைய கைக்குழந்தையும் அருகருகே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தாயை எழுப்ப வேண்டும். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் சத்தமாக அழைக்கிறீர்கள். அவர் எழுவதாக இல்லை. அவர் மேல் சிறிய காகிதத்தை அல்லது பென்சிலை தூக்கிப் போட்டு எழுப்புகிறீர்கள். ஆனால் ஒரு பயனும் இல்லை. இப்போது அதே காகிதத்தை அருகிருக்கும் குழந்தையின்மேலோ அல்லது மெதுவாக அந்தக் குழந்தையின் கையை அல்லது காலைத் தொட்டாலோ உடனடியாக தாய் விழித்துக்கொள்வார். கருவறைக்குள் தொப்புள்கொடி வழியாக இணைந்திருந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வந்தாலும் தாயோடு ஒருவகையான பிணைப்பில் இணைந்திருக்கிறது. ஆகையால்தான், குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் அந்த 'கம்பியில்லாத் தொடர்பு' இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியாருக்கும் திருத்தூதர்களுக்கும் அத்தகைய இணைப்பு இருப்பதைப் பார்க்கின்றோம். திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும், இப்போது திமொத்தேயுவும் இணைந்து தூய ஆவியாரோடு இணைந்திருக்கின்றனர். ஆகையால்தான், ஆசியாவில் நற்செய்தி அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுத்தார் என்றும், தூய ஆவியார் தங்களைப் பித்தினியாவுக்குப் போகவிடவில்லை என்றும், காட்சியில் ஒருவர் வந்து தங்களை அழைத்தார் என்றும் அறிந்துகொள்கின்றனர்.

'கடவுள் நினைப்பது இதுதான்' என்று மிகச் சிலருக்கு மட்டுமே இன்ட்யூஷன் இருக்கும். சிலர் இந்த இணைப்பு நிலையில் நன்றாக இருப்பர். எடுத்துக்காட்டாக, 'இன்று இதைச் செய்யலாம்' என்று அவர்கள் மனத்தில் பட்டால் பட்டுமே அதைச் செய்வார்கள்.

கடவுளைக் கொஞ்சம் அகற்றிவிட்டு, இதையே பவுலோ கொயலோ பிரபஞ்சத்தின் மனம் என்கிறார். நம் மனம் பிரபஞ்சத்தின் மனத்தோடு இணைந்திருக்கிறபோது நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறோம். இந்த இணைப்பை வளர்த்துக்கொள்ளலாம். எப்படி? முதலில் நம்மை முழுமையாக அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நேர்முக எண்ணங்களை நிறையக் கொண்டிருக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும். உடல் மற்றும் மூளையின் செயல்களைக் குறைக்க வேண்டும்.

சீராக்கின் ஞானநூல் ஆசிரியரும் இதையொட்டியே,

'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது வேறெதுவுமில்லை.
காவல் மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.' (சீஞா 37:13-15)

2 comments:

  1. 🙏

    Intuition

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக உன்னத இறைவனிடம் மன்றாடு...
    அவர் நம்மை உண்மையின் வழியில் நடத்துவார்...

    நன்றி!🙏

    ReplyDelete
  2. தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள ‘கம்பியில்லா தொடர்பு’....ஒரு தாயை விட அழகாகப் புரிந்து வைத்துள்ளதுள்ளார் தந்தை.இயற்கையான இன்ட்யூஷன் என்றாலும் சரி,பவுலோ கொயலோவின் ‘பிரபஞ்த்தின் மனம்’ என்றாலும் சரி...அதனோடு இணைந்திருத்தலே விவேகம்.இதை சாதகமாக்க இயற்கையோடு இணைந்துவாழும் வழிமுறைகளைச் சொல்லும் தந்தை அதற்கு இணக்கமான சீராக்கின் வரிகளையும் மறந்துவிடவில்லை.
    “உன் உள்ளத்தின் அறிவுரையில்......அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.” உன்னத இறைவனிடம் மன்றாடுவோம்; அவர் நம்மை உண்மையின் வழியில் நடத்துவார்.....மனித உள்ளத்தின் மேன்மையை இத்துணை அழகாக எடுத்துச்சொல்லும் தந்தையின் ஞானம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது....வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete