Thursday, May 23, 2019

சீலா

இன்றைய (24 மே 2019) முதல் வாசகம் (திப 15:22-31)

சீலா

திருத்தூதர் பணிகள் நூலில் வரும் 'சீலாவை' நான் நிறைய நாள்கள் பெண் என்றே நினைத்தேன். ஆனால், 'சைலஸ்' என்ற கிரேக்கப் பெயர் கொண்ட இவர் ஓர் ஆண்.

எருசலேம் திருச்சங்கம் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்கு விடை கண்டபின் அதை உடனடியாக கடிதம் வழியாக திருச்சபையாருக்கு அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் முறை அந்தக் காலத்தில் இருந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகின்றது.

ஒரு கடிதம் எழுதுகின்றனர். கடிதத்தை பவுல் மற்றும் பர்னபாவின் கைகளில் கொடுத்தனுப்பியிருக்கலாம். ஆனால், 'பவுலும் பர்னபாவும்தான் இதை எழுதினார்கள்' என்று யாராவது குற்றம் சுமத்தக்கூடும் என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து, தங்கள் திருச்சபையிலிருந்த இருவரை - யூதா மற்றும் சீலா - அனுப்புகின்றனர். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? 'இருவரின் சாட்சியம் செல்லும்' என்பதற்காகவும், வழியில் ஏதாவது ஒரு விபத்து நேரிட்டு ஒருவர் இறக்க நேரிட்டாலும் மற்றவர் இருப்பார் என்ற எண்ணத்திலும் இருவர் அனுப்பப்படுகின்றனர்.

தூது அனுப்புப்படுபவர் தன்னை யார் அனுப்பினாரோ அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். ஆகையால்தான் ஞானநூல்கள் தூது அனுப்புதலைப் பற்றி அதிகம் பேசுகின்றன.

சீலா தான் அனுப்பப்பட்ட தூதுக்கு உண்மையானவராக இருக்கிறார்.

தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராக, எந்தவொரு உடனடி இன்பத்தையும் விரும்பாதவராக இருக்க வேண்டும்.

இன்று நாம் எல்லாருமே நற்செய்தியின் அல்லது இயேசுவின் நற்செய்தியின் தூதுவர்களே. சீலாவிடம் துலங்கிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 15:12-17) இயேசு தன் சீடர்களிடம், 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். நண்பர்கள் என்றேன்' என்கிறார்.

பணியாளர் உறவில், 'கடமைக்குச் செய்தல்' மற்றும் 'பலனை எதிர்பார்த்துச் செய்தல்' இருக்கும். ஆனால், நட்பில் இப்படி இருப்பதில்லை.

சீலா ஒரு பணியாளர் போல அல்லாமல், நண்பர் நிலையில் பிரமாணிக்கமாக இருக்கின்றார். ஆகையால்தான் அவருடைய பிரசன்னம் திருச்சபையாருக்கு ஊக்கம் தருகிறது.


1 comment:

  1. தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாகவும்,நல்ல உடல் நலத்தோடும் மட்டுமில்லாமல் எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராகவும்,எந்த உடனடி இன்பத்தையும் விரும்பாதவராகவும் இருக்க வேண்டுமென்கிறது இன்றைய வாசகம். ‘சீலா’ மாதிரி ஒரு தூது எடுத்துச்செல்லும் சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.ஆயினும் நாம் இயேசுவின் நற்செய்தியின் தூதுவர்களாகவும்,சமாதானத்தின் தூதுவர்களாகவும் இருக்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது நம் திருமுழுக்கின் வழியாக! இந்த அழைத்தலுக்கு உண்மையாக, நாம் ஒருவர் மற்றொருவருக்கு ‘ நல்ல நண்பர்காளக’ இருப்போமெனில் உங்களையும் என்னையும் கூடப் பார்த்து இயேசு “ நண்பர்களே!” என விளிப்பார்.”சகோதர்ர் அனைவரும் அன்பில் ஒன்றுபட்டிருத்தல் எத்துணை நலம்!” எனும் வசனமும் உண்மை வடிவம் பெறும்.எப்படி வாழ்ந்திடின் இயேசுவின் நண்பராகலாம்? தந்தை சொல்லும் வழி நடப்போம்.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete