Thursday, May 16, 2019

இடமும் வழியும்

இன்றைய (17 மே 2019) நற்செய்தி (யோவா 14:1-6)

இடமும் வழியும்

மதுரை விரகனூரில் இருந்த இளங்குருமடத்தில் நான் கெஸ்ட் மாஸ்டராக இருந்தேன். கெஸ்ட் மாஸ்டராக இருக்கும் வேலை எனக்கு ரொம்ப பிடித்தது. என்னுடைய வேலை விருந்தினர் அறையைத் தயார் செய்வது: கூட்டிப் பெருக்கி, தண்ணீர் விட்டுக் கழுவி, கட்டில், மேசை, நாற்காலி துடைத்து, புதிய படுக்கை விரித்து, தலையணை மாற்றி, துண்டு வைத்து, கழிவறையைச் சுத்தம் செய்து, சாம்பிள் சோப், குட்டி எண்ணெய் டப்பா, சீப்பு வைப்பது, வாளியில் தண்ணீர் பிடித்து வைப்பது. மேலும், விருந்தினர் வந்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு அறைக்குப் போவது, அறையைத் திறந்துவிடுவது, தண்ணீர் எடுத்து வருவது, குருமடத்தின் சாப்பாடு மற்றும் செப நேரங்களைச் சொல்வது.

அறையைத் தயாரிக்கும் நாம் இதே வேலைகளைச் செய்திருப்போம்.

அறையைத் தயாரிக்க நாம் ஏன் அக்கறை காட்டுகிறோம்?

ஒன்று, தாராள உள்ளம். அதாவது, நம்மிடம் இடம் இருந்தாலும் அதை அடுத்தவரோடு பகிரத் தயாராக இருக்கும் தாராள உள்ளம்.

இரண்டு, துன்பங்கள் ஏற்றல். அறையை ஒதுக்குவது என்பது துன்பமானது. அங்கு உள்ளவற்றை வேறு ஒரு அறைக்கு மாற்ற வேண்டும். அந்த அறை அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். விருந்தினர் வந்து போகும் வரை சில அசௌகரியங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை வரும். அவர் லைட்டை அப்படியே போட்டுவிடவார். இப்படி நிறைய இருக்கும். இவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று, மதித்தல். நாம் மதிப்புக்குரியவர் அல்லது அன்புக்குரியவர் என்று கருதுபவருக்கே நம் வீட்டில் தங்க இடம் தருகிறோம்.

நான்கு, காத்திருத்தல். அறை தயாராகும் நேரம் தொடங்கி விருந்தினர் வரும்வரை நம் உள்ளத்தில் ஒரு காத்திருத்தலும் எதிர்நோக்கும் இருக்கும். வருபவருக்கு இந்த இடம் பிடிக்க வேண்டுமே என்று நாம் என்னவெல்லாமோ செய்வோம்.

இந்த நான்கு செயல்களையும் தான் தன் சீடர்களுக்குச் செய்வதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்கிறார் இயேசு: 'என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துச் செல்வேன்.' ஆக, முழுக்க முழுக்க ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யச் செல்கிறார் இயேசு. ஏன் இப்படிச் செய்கிறார்? தான் இருக்கும் இடத்தில் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்ற ஆசைதான். வேறொன்றுமில்லை. தான் தந்தையிடம் நெருக்கமாக இருப்பதுபோல தன்னுடன் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்று முனைகின்றார்.

இரண்டாவதாக, அந்த இடத்திற்குச் செல்லும் வழியுமாக தன்னையே முன்வைக்கிறார்: 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே'

ஆக, அவரிடம் (தந்தையிடம்) செல்வதற்கு அவர் (மகன்) வழியாகவே செல்ல வேண்டும்.

இவ்வார்த்தைகளை நாம் எப்படி வாழ்வது?

'இடம் ஏற்பாடு செய்வது' என்று இயேசு சொல்வதை நாம் மோட்சம் அல்லது விண்ணகம் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது வெறும் சாதாரணமாக அவர் நமக்குத் தயாரிக்கும் ஒரு நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் அவரை வழியாக எடுத்துக்கொள்வது.

'வழி' என்பதை 'தீர்வு,' 'துணை' என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம். நம் வாழ்வின் கதவுகள் தாமாக அடைபடும் நேரங்களில் எல்லாம் வழியாக அவர் நின்றால் அவரின் உறைவிடத்திற்குள் நாமும் நுழையலாம்.


2 comments:

  1. இயேசுவின் கூற்று எனக்கொன்றும் புதிதாகப்படவில்லை. நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் இருக்கிறார் எனில்,நமக்குப்பிடித்த அனைவருக்குமே ‘அந்த’ ஒருவரை பிடிக்கவேண்டுமென நம் மனம் விரும்புவது இயற்கைதானே! அதையே தான் செய்துள்ளார் இயேசு.....தமக்குப்பிடித்த தம் தந்தையை தம் சீடர்களுக்கும் பிடிக்கவேண்டுமென அவர் நினைத்த போது.அதில் இருப்பது சுயநலமே!....தந்தையிடம் போகிறவர்கள் தன் வழியாகத்தான் போகவேண்டுமெனும் தந்தை யேசுவின் கூற்றுப்படி ‘வழி’ ’ என்பதை ‘தீர்வு’, ‘துணை’ எனும் பொருட்களில் எடுத்துக்கொள்ளும்போதுதான் இதன் முக்கியத்துவம் பூதாகாரமாகத்தெரிகிறது. ஆம்! “நம் வாழ்வின் கதவுகள் தாமாக அடைபடும் நேரங்களில் ‘வழியாக’ அவர் நின்றால், அவரின் உறைவிடத்திற்குள் நாமும் நுழையலாம்.” தந்தையிடம் போக வழிசொல்வதில் மட்டுமின்றி வாழ்க்கைப்பயணத்திற்கும் எத்துணை அழகாக வழி சொல்கிறார் தந்தை.ஆம்! அவர் விரகனூர் இளங்குருமடத்தில் ‘கெஸ்ட் மாஸ்டராக’ வேலை செய்த நேர்த்தியை வர்ணிப்பதை பார்க்கும் யாராவது இந்த வேலைக்கு மனுப்போட்டால் ஆச்சரியமில்லை.அந்த வேலையோடு நின்றுவிடாமல் அத்துடன் இணைந்த விழுமியங்களான தாராள உள்ளம்,துன்பம்’ ஏற்றல்,மதித்தல்,காத்திருத்தல் போன்றவற்றையும் சேர்த்தே கொடுத்திருப்பது “ கெஸ்ட் மாஸ்டர்” வேலைக்கு இன்னும் டிமான்டைக் கூட்டுகிறது.” செய்வனத் திருந்தச் செய்”.... இதுதான் தந்தையின் மறுபெயரோ!. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete