Monday, February 24, 2014

அன்பு மணமக்களே

'உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்.
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவராக!'
(திருப்பாடல் 128)

அன்று ஒரு தம்பதியினரின் திருமண ஆண்டு விழா. காலையிலேயே கோவிலுக்குச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மாலையில் தங்களின் ஆண்டுவிழா நினைவாக ஒரு மோதிரம் வாங்கலாம் என எண்ணியவர்களாய் நகைக் கடைக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு மோதிரமாக எடுத்துப் பார்த்துக்கொண்டேயிருக்க ஒரு மோதிரம் திடீரென்று பேசத் தொடங்கியதாம். தம்பதியினருக்கு அதிர்ச்சி. அந்த மோதிரம் பேசியதையே கூர்ந்து கேட்டார்கள்.

அந்த மோதிரம் என்ன பேசியதாம்? அது பேசியதை நான் இங்கு அப்படியே பதிவு செய்கிறேன்.

அன்பு மணமக்களே,

வாழ்த்துக்கள்.

என்னை பக்குவமாக கைகளில் ஏந்தியிருக்கிறீர்களே! ஆச்சர்யமாய் இருக்கிறதா? நான் அழகாய் இருக்கிறேன் என்று வியக்கிறீர்களா? ஒரு காலத்தில் நான் இவ்வளவு அழகாய் இல்லை. என்னை உருவாக்கியவர் என்னை மண்ணிலிருந்து எடுத்தார். அப்போது எனக்கு வலித்தது. 'ஐயோ வலிக்கிறது! விட்டுவிடுங்கள்!' என்றேன். அவர் சொன்னார், 'இன்னும் முடியவில்லை!'. பின் என்னை அப்படியே நெருப்பில் போட்டார். என்னால் அந்தச் சூட்டைத் தாங்க முடியவில்லை. 'ஐயோ! சாகப் போகிறேன்!' என்று கத்தினேன். 'இன்னும் முடியவில்லை!' என்றார் அவர். நெருப்பிலிருந்து என்னைத் தூக்கிய அவர் அப்படியே என்னை வளைத்தார். என் முதுகுத் தண்டே ஒடிந்து விடும் போல இருந்தது. 'ஐயோ! போதும்!' என்றேன். அவர், 'இன்னும் முடியவில்லை!' என்றார். பின் என்மேல் மெருகேற்றினார். அந்த வாடையே எனக்குப் பிடிக்கவில்லை. 'ஐயோ! இதற்கு மேல் தாங்க முடியாது!' எனக் கதறிறேன். என்னை அவர் அப்படியே தூக்கி ஒரு கண்ணாடியின் முன் நிறுத்தினார். எனக்கே ஆச்சரியம். 'இது நானா?' என்றேன். 'எனக்கா இவ்வளவு அழகு!' என்று வியந்தேன். 

அவர் சொன்னார்: 'நான் உன்னை மண்ணோடு மண்ணாக விட்டிருந்தால் நீ மக்கிப் போயிருப்பாய். உன்னை நெருப்பிலிடாவிட்டால் நீ பொலிவு பெற்றிருக்க மாட்டாய். நான் உன்னை வளைக்காவிட்டால் நீ உருப் பெற்றிருக்க மாட்டாய். நான் உனக்கு மெருகேற்றாவிடில் நீ மின்ன மாட்டாய்! நான் செய்ததெல்லாம் உன் நன்மைக்கே!'

மணமக்களே!

உங்கள் மணவாழ்க்கை இன்று போல் என்றும் சுகமாக இருக்க நீங்கள் என்னைப் போல இருங்கள். புரியவில்லையா? என்னைப் பாருங்கள்.

1. எனக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. நான் ஒரு வட்டம். உங்கள் அன்பும் அப்படித்தான் இருக்க வேண்டும். தொடக்கமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் முழுவதுமாக ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்.

2. எனக்கு அழகு வந்தது என் கஷ்டங்களிலிருந்து. உங்கள் வியர்வைத் துளிகள் தாம் உங்கள் உழைப்பின் கனிகள். வியர்வை சிந்தினால் தான் வாழ்க்கை என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள். ஒவ்வொரு முறை வாழ்வில் வலிகள் வரும்போதும் துவண்டுவிட வேண்டாம். அப்போதெல்லாம் நீங்கள் இன்னும் அழகு பெறுகிறீர்கள்.

3. மோதிரத்தின் அழகு கைகளில் இருக்கும்போதுதான். நகைப்பெட்டியில் வைப்பதற்கல்ல மோதிரம். நீங்கள் ஒருவர் மற்றவரின் கைகளிலும், நீங்கள் இருவரும் இறைவனின் கைகளில் இருக்கும் போதுதான் அழகிய மணிமகுடமாகத் திகழ்வீர்கள்.

வாழ்க வளமுடன், நலமுடன். இன்றும், என்றும்.

திருமண ஆண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ...

நான் பெற்றெடுத்த என் அம்மா - அப்பாவிற்கு...!


1 comment:

  1. Anonymous2/25/2014

    பல அழகான விஷயங்களைச சொல்லியிருக்கிறார்கள் மோதிரத்தின் வழியாக.வாழ்க்கையில் இணைந்துள்ள எந்த ஆணும் பெண்ணும் இறுதி வரை இவற்றைப் பின்பற்றினால் மண்ணிலே விண்ணில் காணலாம்.நீங்கள் பெற்றெடுத்த அப்பா அம்மா உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.நிச்சயம் அவர்கள் வளமுடன்...நலமுடன் வாழ்வார்கள் தங்களின் ஆசிகளோடும் வாழ்த்துக்களோடும்.

    ReplyDelete