Saturday, February 1, 2014

நாங்கள் பயனற்ற ஊழியர்கள்

ஒருமுறை நானும் என் நண்பனும் உரோம் நகரின் கொலோசியத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். என் நண்பர் ஆப்பிரிக்க கண்டத்தின் கென்யா நாட்டுக்காரர். கொலோசியத்திற்கு வெளியில் டிக்கெட் வாங்க பெரிய க்யூ நின்றது. நாங்களும் அங்கே சென்று நின்றோம். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு அதிகாரியை நோக்கி என் நண்பர், 'எங்கள் முன்னோர் அடிமைகளாய் வேலை பார்த்துக் கட்டிய இந்தக் கொலோசியத்திற்கு நீங்கள் கட்டணம் வசூலிக்கிறீர்கள். நாங்கள் இங்கே வரிசையில் நிற்கின்றோம். என்ன உலகம்!' என்று வியந்தார். அதைக் கேட்ட அந்த வெள்ளை அதிகாரி புன்னகை செய்தார். அந்தப் புன்னகைக்கு ஆயிரம் அர்த்தங்கள் தெரிந்தன.

இன்றைய நமது உலகம் ஆட்டோகிராஃப் உலகம். நாம் செய்யும் அனைத்திலும் நம் பெயர் வர வேண்டும் என விரும்புகிறோம். நாம் வாங்கிய நிலம், நாம் கட்டிய கட்டடம், நம் வங்கிக் கணக்கு, நாம் உபயம் செய்த ஒரு பொருள் என எல்லாவற்றிலும் நம் பெயரை எதிர்பார்க்கின்றோம். இன்றும் உயர்ந்து நிற்கும் கொலோசியத்தில் அதைக் கட்டியவர்களின் பெயர் இல்லை. இன்றும் நம் தஞ்சாவூரில் கம்பீரமாய் நிற்கும் பெரிய கோவிலில் அதைக் கட்டியவரின் பெயர் இல்லை. வரலாற்றில் முத்திரை பதித்த கட்டிடங்களிலெல்லாம் பெயர்கள் இல்லை. விளம்பரங்கள் இல்லை. 

ஆண்டான் - அடிமைச் சூழலில் ஆண்டான்களை மட்டுமே முன்னிறுத்துகின்றது வரலாறு. அலெக்சாண்டர் உலகையே வெல்ல முயற்சி செய்தார் என எழுதுகிற வரலாறு அவருக்கு முன்சென்று தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சாதாரண படைவீரர்களைப் பற்றிப் பேச மறுக்கின்றது. எகிபத்தில் உயர்ந்து நிற்கும் பிரமிடுகள் பாரவோன்களின் பெயர்களைச் சொல்கின்றனவே தவிர அவை உயரக் காரணமான சாதாரண அடிமைகளைப் பற்றிப் பேச மறுக்கின்றது. 'வேலை பார்த்தவர் ஒருவர். அதற்காகப் பெயர் பெற்றவர் மற்றொருவர்'. 

இன்றும் நம் அலுவலகங்களில் இதைப் பார்க்கலாம். மாய்ந்து மாய்ந்து வேலை பார்ப்பவர்கள் சிலர். அதற்கான பெயரை எடுத்துச் செல்பவர்கள் மற்றவர்கள். இன்றைய நாளில் இயேசு நமக்குக் கற்றுப்கொடுப்பது என்னவென்றால், 'அடுத்தவர்கள் செய்த வேலைக்கு மட்டுமல்ல, நாம் செய்த வேலைக்கே நாம் உரிமை கொண்டாட முடியாது' என்பதுதான்.

இயேசுவின் இந்தப் போதனை நம் இந்தியச் சிந்தனைக்கு ஒன்றும் புதிதல்ல: பகவத் கீதை போதிக்கும் 'நிஷ்காமகர்மா' என்பதும் இதற்கு ஒத்ததுதான். 'நாம் செய்கின்ற வேலையே வேலைக்காக மட்டுமே செய்வது'. நாம் செய்வது அனைத்துமே மற்றொன்றிற்காகத்தான். நாம் படிப்பது வேலை பார்ப்பதற்காக. வேலை பார்ப்பது சம்பளத்திற்காக. திருமணம் செய்வது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நம் கனவுகளை அவர்கள் மேல் சுமத்துவதற்காக. யோகா கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரிடம் வருகின்ற அவருடைய சீடர் கேட்டாராம்: 'நான் யோகா செய்தால் என்ன நடக்கும்? யோகா செய்தால் என் சுகர் சரியாகுமா? என் பிரஷர் குறையுமா?' நாம் ஒன்றைச் செய்தால் அதன் பலன் இப்படி இருக்குமா என எதிர்பார்த்தே செய்கின்றோம். 'இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தால் என் குழந்தை ஒழுக்கமாக வளருமா, நல்ல கல்வியைப் பெறுமா?' என்ற நிலையில் சிந்திப்பதற்குப் பதில் 'என் குழந்தை இவ்வளவு மதிப்பெண்கள் பெறுமா?' என்றுதான் சிந்திக்கின்றோம். நாம் செய்த வேலையைப் பற்றி நாம் பேசக் கூடாது என்றால் எப்படி? எனக் கேட்கலாம்.

இயேசுவின் இந்தப் போதனை நாம் அனைவரும் நம் வாழ்வின் கண்காணிப்பாளர்கள் மட்டும்தான், உரிமையாளர்கள் அல்ல என்ற சிந்தனையைத் தருகின்றது. 'என் வாழ்விற்கு நான்தான் பொறுப்பு' என உரிமை கொண்டாடுவது பல நேரங்களில் நமக்கு விரக்தியையே தருகின்றது. 'நம் வாழ்விற்கு நாம்தான் உரிமையாளர்கள்' என்று நாம் சொன்னாலும் நம்மால் பல நிகழ்வுகளை கண்ட்ரோல் செய்ய இயல்வதில்லை. நாம் என்னதான் நன்றாக இருந்தாலும் நம்மையறியாமலே ஏதோ வகையில் உடல்நலமில்லாமல் போய் விடுகிறோம். வாழ்வில் நடக்கும் எண்ணற்றவைகளுக்கு நம்மால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால், இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும், நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்ற கவலைகள் மறைந்து விடுகின்றன.

No comments:

Post a Comment