Sunday, February 23, 2014

பதினோராவது கட்டளை: நீங்கள் அந்நியப்படுத்துங்கள்!

நேற்றைய தினம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றை வாசித்தேன். கட்டுரையின் தலைப்பு: பதினோராவது கட்டளை: நீங்கள் அந்நியப்படுத்துங்கள்! (The Eleventh Commandment: Thou Shalt Defamilarize) இதன் இரண்டாம் பகுதிக்கான தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக வரவில்லை. 'familiarize' என்பதை 'பழக்கப்படுத்துதல்' என்று சொல்லலாம். 'Defamiliarize' என்றால் 'பழக்கப்படுத்தாதே' என்று மொழிபெயர்த்தால் எதிர்மறை அர்த்தமாக மாறிவிடுகிறது. இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்தபின் அதில் ஆசிரியர் சொல்ல வரும் கருத்துக்களைப் பார்த்தபின் 'அந்நியப்படுத்துங்கள்' என்று அர்த்தம் எடுக்க முடிந்தது. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் வேறு யாருமல்ல. நேற்றைக்கு முன் தினம் யோபு புத்தகம் பற்றி உரையாற்றிய பேராசிரியர் பீட்டர் மெசினிஸ்ட் அவர்களே. இந்த பதினோராவது கட்டளையை அவர்கள் விவிலியம் படிக்கும் அனைவருக்கும் கொடுக்கின்றார். இந்தக் கட்டளையின் பொருள் என்ன? இதன் உள்ளர்த்தங்கள் எவை?

கட்டளையின் பொருள். எடுத்துக்காட்டிற்கு, மோசேவுக்கு சீனாய் மலையில் யாவே இறைவன் காட்சி கொடுத்த நிகழ்வை எடுத்துக்கொள்வோம். இந்த நிகழ்வை நாம் எங்காவது வாசிக்கக் கேட்டவுடன் நம் மனக்கண் என்ன வரும்? முட்செடி, எரியும் முட்செடி, பாலைவனம், மலை, ஆடு மேய்க்கும் மோசே, ஆடுகள், மோசேயின் கைத்தடி, அவரின் காலணிகள், யாவேயின் கனத்த குரல், பாலைவன வெயில். இப்படி நிறையவற்றை நம் மனம் கற்பனை செய்யும். நம் காதுகளில் கூட மோசேயின், கடவுளின் குரல் கேட்பது போன்று தோன்றும். ஆனால் இவை மட்டும்தான் இந்த நிகழ்வு நமக்குச் சொல்ல வருவதா? ஒரு விவிலியப் பகுதிக்கு நம் மனம் 'பழக்கப்பட்டு' விட்டால் நம் அர்த்தம் குறுகி விடுகிறது. இந்தப் பகுதி சொல்லும் இன்னும் பல நம் மனதிற்கு தட்டுப்படுவதே இல்லை.

எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் படும் துன்பம், அதைப் பற்றிய இறைவனின் அக்கறை என இன்னும் பலவற்றை நாம் கண்டுகொள்வதேயில்லை. மேலும் இறைவன் தன் பெயரை இங்கேதான் 'யாவே', அதாவது 'ஆண்டவர்' என வெளிப்படுத்துகின்றார். ஆனால் தொடக்கநூல் 4:26ல் ஏற்கனவே மக்களுக்கு 'யாவே' என்னும் பெயர் தெரிந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வைப் பற்றி புதிய ஏற்பாட்டில் உரையாடுகின்ற ஸ்தேவான் (முடியப்பர்) 'மோசேக்கு ஆண்டவர் மலையில் தோன்றவில்லை, பாலைவனத்தில் தோன்றினார்' எனவும் 'தோன்றியது ஆண்டவர் இல்லை, ஆண்டவரின் தூதர்' எனவும் பெரிய கூட்டத்தின் முன் அறிக்கையிடுகின்றார். முடியப்பரிடம் வேறு விவிலியம் இருந்ததா? மோசேயின் முட்புதர் நிகழ்வு பற்றி எழுதப்பட்ட வேறு நூல்கள் இருந்தனவா? இன்னும் இருக்கின்றனவா? என்பவை கேள்விகள். இந்தப் பின்புலத்தில் விடுதலைப்பயணம் 3:4 (மோசேக்குக் காட்சி) பகுதியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்நியப்படுத்த வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும். 'இதுதான் இதன் அர்த்தம்' என்று நாம் எழுதும் தீர்ப்பை அழித்து விட்டு திறந்த மனத்தோடு காத்திருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் அர்த்தங்கள் எப்படி வருகின்றன? 'பழக்கத்தால்' வருகின்றன. நாம் புதிதாக ஒருவரைச் சந்திக்கும் போது ஒருவர் மேல் நாம் கொள்ளும் அபிப்பிராயத்திற்கும், கொஞ்ச நாள்கள் பழகிய பின் அவர் மேல் கொள்ளும் அபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதே நபர் தான்? ஆனால் 'அவர் நல்லவர்' என்றும் 'அவர் கெட்டவர்' என்றும் நாம் சொல்லி விடுகின்றோம். அதற்குக் காரணம் 'பழக்கம்'. நாம் அவரோடு பழகிய சில நாட்கள் அவரது அந்நியம் மறைந்து நெருக்கம் வந்து விடுகிறது. நெருக்கம் வந்துவிட்டால் 'அதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று ஆகிவிடுகிறது. 'அந்நியமாய்' ஒருவர் இருக்கும் போது அவரைப் பற்றிய நம் பார்வை objective ஆக இருக்கும். நெருக்கம் வந்துவிட்டால் அது subjective ஆக மாறிவிடுகிறது. அதே நபரைப் பற்றிய மற்றவரின் கருத்து நம் கருத்துக்கு எதிர்மாறானதாக இருக்கலாம். ஏன் இந்த வித்தியாசம்? ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசம். ஆகையால் விவிலியம் படிக்கும் போது எந்தப் பகுதியையும் புதிதாகப் படிப்பது போல படியுங்கள். 'அடுத்தவர்கள் சொன்னார்கள், அதுதான் சரி!' என நீங்களே நினைத்து முடிவெடுத்து விடாதீர்கள். விவிலியம் உங்களிடமும் பேசும். அதை அந்நியப்படுத்துங்கள். அந்த அந்நியத்தைக் கண்டு பயந்து விடாதீர்கள். 

இதுதான் கட்டுரையின் சுருக்கம்.

இதைப் பற்றிய எனது புரிதல்கள் என்ன?

1. 'அந்நியப்படுத்துதல்' என்பது விவிலியப் படிப்பைப் பொறுத்தவரையில் ஒரு புதிய கருத்து என்றாலும், மெய்யியலில் இது பழைமையானதுதான். டெரிடா என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் இதே கருத்தை 'deconstruction' என்று அழைக்கின்றார். நாம் ஒவ்வொரு முறையும் கருத்துக்களை கட்டிக் கொண்டே போகிறோம் (construction). ஆனால் எந்த ஒரு பொருளின் அர்த்தமும் நாம் கட்டுக்களை உடைக்கும்  (de-construct) போதே தெளிவாக விளங்குகிறது என்று குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை நம் ஒளவையாரும் ஆத்திசூடியில் குறிப்பிடுகிறார். அகர வர்க்கத்தில் வரும் 13வது ஆத்திசூடி இதுதான்: 'அஃகஞ் சுருக்கேல்'. இதன் பொருள் ரேசன் கடை சம்பந்தப்பட்டது என்பர். அதாவது ஒரு படி அளவு எவ்வளவோ அதை அப்படியே கொடு. சுருக்காதே. ஆனால் மொழியியல் பின்புலத்தில் பார்த்தால் ஒளவையின் அர்த்தம் 'ஒரு அர்த்தத்தை இருப்பது போல எடுத்துக் கொள். அதை உனக்கு ஏற்றது போல சுருக்கிவிடாதே' என்று இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

2. விவிலியத்தை ஆராய்ச்சி செய்யும் போது அடுக்கடி இரண்டு வார்த்தைகள் வரும்: text மற்றொன்று context எந்த ஒரு பாடமும் (text) உருவானது ஒரு சூழலில்தான் (context). வானத்திலிருந்து எந்த டெக்ஸ்டும் நம் மேல் விழவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலில் உருவானதுதான் பைபிள். ஒரு டெக்ஸ்டை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் கான்டெக்ஸ்டை நாம் புரிய வேண்டும். அந்தக் கான்டெக்ஸ்டை நாம் புரிய வேண்டுமென்றால் அதற்கு ஒரு தடையாக இருப்பது நம் கான்டெக்ஸ்ட். உதாரணத்திற்கு இத்தாலிய மொழியின் முக்கிய இலக்கிவாதி மற்றும் பாடலாசிரியர் என அழைக்கப்படும் 'டான்டே' என்பவரின் இலக்கியங்களை நான் பலமுறை வாசித்திருக்கின்றேன். ஆனால் இன்னும் என்னால் அதன் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் என் கான்டெக்ஸ்ட். தமிழ் மொழி, இந்தியக் கலாச்சாரம், கிறிஸ்தவ மதம் என்ற பின்னணியில் நான் இதை அணுகும்போது டெக்ஸ்ட் நழுவி ஓடுகிறது. இந்தத் தடை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மனிதரும் ஒரு டெக்ஸ்ட். அவருக்கென்று ஒரு கான்டெக்ஸ்ட் இருக்கும். பல நேரங்களில் 'என்னால் அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை' எனப் புலம்புவோம். ஏன் இந்தப் புலம்பல்? கான்டெக்ஸ்ட் மாறுவதுதான். வேறு என்ன தான் வழி? யாரையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு முடிந்த வரை 'அந்நியத்தை' ரசிக்கக் கற்றுக்கொள்வதுதான்.

3. மொழி நம் மனக்கருத்தை வெளிப்படுத்தும் என்கிறோம். ஆனால் மொழியினால் மனக்கருத்தை மறைக்கவும் முடியும். மொழியால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது. மொழிக்கும் நிறைய ஊனங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, நீங்கள் என்னிடம் 'தலை வலிக்கிறது!' எனச் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு வார்த்தைகளால் நீங்கள் உணரும் வலியை ஒருபோதும் அப்படியே என்னிடம் உணர்த்திவிட முடியாது. இதை வாசிக்கும் போது எனக்கு என்றாவது வந்த தலைவலியை வைத்து நானாகவே 'ஓ...இதுதான் தலைவலியோ!' எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு வார்த்தைகள் உங்கள் வலியை எனக்கு உணர்த்துவதில்லையே. அப்படியென்றால் மொழி ஊனம்தானே!

1 comment:

  1. Anonymous2/24/2014

    பல புதிய வார்த்தைகள்.பதிய அணுகுமுறை...என் போன்ற சாமான்யர்களுக்கு எல்லாமே அந்நியமாகத்தான் பட்டது.படித்து முடித்து இறுதியாகப் புரிந்ததெல்லாம் இதுதான்....நாம் எந்த ஒரு சூழ்நிலை/ மனிதரை அணுகும்போது எவ்வளவுதான் அந்த சூழ்நிலையும்/ மனிதர்களும் நமக்குப் பரிட்சையமாயிருப்பினும் நமது அணுகுமுறையும்,மனமும் துடைத்துவிட்ட எழுதும் பலகை( slate) ஆக இருப்பது அவசியம்.என் புரிதல் சரியா என்று தெரியவில்லை.ஆனால் இது மட்டும் நம்மால் சாத்தியமென்றால் நாம் புனிதர்களே.முயற்சி செய்வோம்....

    ReplyDelete