Sunday, February 2, 2014

இவற்றுள் அன்பே தலைசிறந்தது - 2

2. அன்பில் வளர இரண்டாம் வழி அன்பு செய்பவர்களோடு உணவருந்துவது. மனிதர்கள் உண்பதற்கும், தாவரங்கள், விலங்குகள் உண்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். மற்றவைகள் உடல் வளர்ச்சிக்காக மட்டும் உண்கின்றன. மனிதர்கள் மட்டுமே உறவு வளர்ச்சிக்காக உண்கின்றோம். 'ஒவ்வொரு உணவுப் பகிர்வும் ஒரு உடலுறவுக்குச் சமம்' என்பார் கலீல் கிப்ரான். ஏனெனில் இரண்டிலுமே உயிர்தான் பரிமாறப்படுகின்றது. ஆன்மீக நிகழ்வுகளில் எல்லாம் உணவும் முக்கியமானதாக இருக்கும்: இந்துமதத்தில் பிரசாதம், கிறித்தவ மதத்தில் நற்கருணை, இசுலாமிய மதத்தில் 'ஓகேல்' (அரேபிய மொழியில் 'உணவு') என மதங்கள் உணவுப் பகிர்தலை உறவுப் பகிர்தலாகவும், அடையாளமாகவும் வைத்திருக்கின்றன. ஒருவரின் உணவுப் பழக்கத்தை வைத்தே அவர் எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர் எனவும் நம் இந்திய மரபில் சொல்லிவிடுவர். திருமணங்களில் மற்றும் மற்ற இன்ப துன்ப நிகழ்வுகளில் ஏன் உறவு பரிமாறப்படுகிறது? நம் வீட்டில் உணவில்லை என்ற காரணமா? இல்லை. ஒரே பாத்திரத்தில் சமைக்கப்பட்ட சோற்றில் நாம் கையிடுகிறோம் என்றால் நம்மில் இருப்பது ஒரே உயிர் என்ற அர்த்தம்தான். நாம் யாருடன் சேர்ந்த உண்கின்றோமோ அவர்களோடு ஒரு உயிராக மட்டுமல்லாமல் ஒரே உடலாகவும் ஆகிவிடுகின்றோம். சேர்ந்து சாப்பிடாத குடும்பம் விரைவில் பிரிந்து விடுகிறது. இன்று வேலை, படிப்பு, தொலைக்காட்சி என தனித்தனியே சாப்பிட்டுப் பழகுவது நம் குடும்ப உறவுகளில் சீக்கிரமே பிரிவைக் கொண்டு வந்துவிடும். துறவற வாழ்வில் இதை எப்படி புரிந்து கொள்வது? முதல் உணவு நற்கருணை. நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஒரு அருட்பணியாளர் முழுமையாகப் பங்கேற்பதில்லையென்றாலோ, அதைத் தவிர்க்கிறார் என்றாலோ, நற்கருணையின் முன் அவரால் நேரம் செலவிட முடியவில்லை என்றாலோ, அவர் இறையன்பிலிருந்து பின்வாங்குகிறார் என்றே அர்த்தம். அடுத்ததாக, என் பங்கு மக்கள் 1000 குடும்பங்கள் இருக்கின்றார்கள். 1000 குடும்பங்களில் நான் எப்படிச் சாப்பிட முடியும்? என் பள்ளியில் 1000 குழந்தைகள் படிக்கிறார்கள். அனைவரின் வீட்டிலும் சாப்பிட்டால்தான் அன்பு வளர முடியுமா? ஆம். 1000 வீடுகளில் சாப்பிட்டுப் பாருங்களேன். உங்களைக் கொண்டாடத் தொடங்குவார்கள். 'அவர்கள் வீட்டில் சாப்பிட்டால் பின் என்னிடம் ஏதாவது உதவி கேட்பார்கள். என்ன செய்வது?' என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் ஒரு சிலர். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஃபாதர்: 'யாரும் உங்களை நம்பி இல்லை! உங்கள் உதவியை நம்பி இல்லை! நீங்கள் வருவதற்கு முன்னே இந்த உலகம் இருந்தது. நீங்கள் போன பின்னும் இந்த உலகம் இருக்கும். இருக்கும் வரை அன்பு செய்யுங்கள். உதவி கேட்டால் செய்யுங்களேன்!'

3. அன்பின் இயல்பு விரியக் கூடியது. மாரடைப்பு என்றால் என்ன? இதயத்தின் வால்வுகளோ, இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களோ சுருங்குவதால் தான் மாரடைப்பு வருகின்றது. அன்பு சுருங்குகிறது என்றால் அங்கே ஆபத்து வரப்போகிறது என அர்த்தம். காதல் எப்போது கள்ளக்காதலாக மாறுகின்றது? ஊருக்கே தெரிந்தால், ஊரறியச் செய்தால் அது காதல். அது திருமண உறவில் இயல்பாக இருக்கும். 'உனக்கும் - எனக்கும்' எனச் செய்தால் அது கள்ளக்காதல். அன்பின் இயல்பு விரிந்து கொடுப்பது. திருமண உறவில் கணவனும் மனைவியும் மட்டும் இணைவதில்லை. கணவன் சார்ந்த அனைவரும், மனைவி சார்ந்த அனைவரும் ஒருவர் மற்றவரோடு இணைகின்றனர். 'நீ எனக்கு மட்டும் - நான் உனக்கு மட்டும்' என்று இருப்பது அன்பன்று. உன்னைச் சார்ந்தவர்களும் என்னைச் சார்ந்தவர்கள் - என்னைச் சார்ந்தவர்களும் உன்னைச் சார்ந்தவர்கள் என்று விரித்துக் கொடுப்பதே அன்பு. நாம் அன்பு செய்பவர்களைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், பிடித்தவை, பிடிக்காதவை, அவர்களின் ரசனை, அவர்களின் ஆர்வம், அவர்களின் பொழுதுபோக்கு என அனைத்தையும் தெரிந்துகொள்ளும்போது அவர்களைப் பற்றிய பார்வையும் விரிகின்றது. அன்பும் அகலமாகிக் கொண்டே போகின்றது. 'எனக்குப் பிடிப்பதுதான் உனக்குப் பிடிக்க வேண்டும்' என்று நினைப்பதன் பெயர் ஆதிக்கம். ஆதிக்கம் இருக்கும் இடத்தில் பயம்தான் இருக்கும். அன்பு இருக்காது. திருமண உறவில் அன்பு கணவன் - மனைவி, மாமனார் - மாமியார், கொழுந்தனர் - கொழுந்தியா என விரிகின்றது. துறவற உறவில் எப்படி விரியும்? ஒரு பங்கு அருட்பணியாளர் பங்கு மக்களை அன்பு செய்கிறார் என்றால் அவர்களை முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பங்கு மக்களுக்கு 15 நிமிடங்களுக்கு மேல் மறையுரை வைத்தால் பிடிக்காது என்பதைக் கூடப் பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில் எந்த ஒரு தனிநபரோடு கொள்ளும் நெருக்கம் 'இது நமக்குள்ளே இருக்கட்டும்' என்று மாறுகிறதோ அன்றே அருட்பணி நிலை ஆட்டம் காணத் தொடங்குகிறது. சந்திப்புக்கள், பரிசுப்பொருட்கள் என இலைமறை காயாக வளர்ந்து பின் ஒரு கட்டத்தில் மற்றவர்களையும், இந்த உறவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் பகையாளர்களாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. இங்கே அன்பு விரிவதில்லை. சுருங்குகிறது. சுருக்குகிறது. 

4. நம் அன்பிற்குரியவர்களுக்குப் பிடிக்காததை நாம் செய்வதில்லை. புதிதாக வரும் உளவியல் ஆய்வுகள் சொல்வது என்னவென்றால் ஒருவரின் குடிப்பழக்கத்திற்கும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்குக் காரணம் அவர் தன்னை யாரும் அன்பு செய்வதில்லை என்று நினைப்பதுதான் என்கிறார்கள். ஒரு அருட்பணியாளர் சரியாகக் குளிக்க மாட்டார். நேரத்திற்குத் தூங்க மாட்டார். சரியாக முகச்சவரம் செய்ய மாட்டார். நல்ல ஆடைகள் அணிய மாட்டார். அறை எப்போதும் குப்பையாக இருக்கும். அடிக்கடி சுருட்டு குடிப்பார். நிறைய மது அருந்துவார். அவரின் நண்பர் ஒருமுறை, 'ஏன் இப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டபோது சொன்னார்: 'எனக்கென்று யார் இருக்கிறார்? யார் என்னைப் பார்க்க வருகிறார்? நான் யாருக்காக நல்லா ஆடை அணிய வேண்டும்? நான் ஷேவ் செய்தால் யார் பார்க்கப் போகிறார்?' தனக்கென்று யாரும் இல்லை என்ற உணர்வுதான் மிகவும் கொடிய உணர்வு. நாம் அன்பு செய்பவர்கள் விரும்புவதை மட்டுமே நாம் செய்கின்றோம். அல்லது அவர்களுக்குப் பிடிக்காததை நாம் செய்வதில்லை. இதையேதான் நற்செய்தி நூல்கள் மனமாற்றம் என அழைக்கின்றன. மனமாற்றம் என்பது நாம் அன்பு செய்பவர்களின் பக்கம் மனத்தைத் திருப்புவது. ஒரு சில வீடுகளில் சில அம்மாக்கள், 'என் மகன் கல்யாணத்திற்கு அப்புறம் ரொம்ப மாறிட்டான்' என்பார்கள். 'மாறிட்டான்' என்றால் 'பெரிய வீடு கட்டிவிட்டான்' என்றோ, 'நிறைய பணம் சேர்க்கிறான்' என்றோ பொருள் அல்ல. 'மனைவி பக்கம் மனதைத் திருப்பிவிட்டான்' என்றுதான் அர்த்தம். நாம் அன்பு செய்பவர் பக்கம் நோக்கி நம்மை முழுமையாகத் திருப்புகிறோம். திருமண உறவிலும், துறவற உறவிலும் இந்த இயல்பு முக்கியமான ஒன்று. 'நான் என்ன செய்தாலும் என் பங்கு மக்கள் குறை சொல்கிறார்கள்' என்று ஒரு சில அருட்பணியாளர்கள் புலம்புவார்கள். இதற்குக் காரணம் மக்கள் அல்ல. நாம்தான். நம் அன்பிற்குரிய அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நாம்தான் அறியத் தவறிவிடுகிறோம்.

5. அன்பின் இயல்பு தன்னையே அழிக்கக் கூடியது. 'இனி நான் அல்ல - நீதான் எல்லாம்' என நினைப்பதே அன்பின் உச்சகட்ட குணம் - தற்கையளிப்பு. இதற்குமேல் கொடுக்க ஒன்றுமில்லை என்று கைகளை விரித்து சிலுவையில் இறந்து போகின்றார் இயேசு. என் அப்பா அம்மாவின் மேல் சின்ன வயசில் நிறையக் கோபப்பட்டிருக்கிறேன். என்னுடன் உடன் பயிலும் குருமாணவர்களைப் பார்க்க வரும் அவர்களின் அப்பா அம்மாக்கள் அவர்களுக்கு 100 ரூபாய், 500 ரூபாய் எனக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். என் அப்பா 5 அல்லது 10 ரூபாய் மட்டுமே கொடுப்பார்கள். நான் மற்றவர்களோடு ஒப்பிட்டு உடனே அழுவேன். இப்போது நினைத்துப் பார்க்கிறேன் - அந்த 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் அவர்கள் எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள். தினமும் வேலை பார்த்தால் தான் வீட்டில் அடுப்பெரியும். என்னைப் பார்க்க வந்தால் அன்று அவர்கள் வேலைக்குப் போக முடியாது. பேருந்து கட்டணம். எனக்கான மாத உணவுக் கட்டணம். பள்ளிக் கட்டணம். இவ்வளவையும் எப்படிச் சமாளித்திருப்பார்கள் என்று இப்போது நினைத்தாலும் கண்களில் வியர்த்து விடுகிறது. நாம் பல நேரங்களில் அன்னை தெரசாவின் தியாகத்தையும், அப்துல் கலாமின் தியாகத்தையும் நினைக்கும் அளவிற்கு நம் அப்பா - அம்மாவின் தியாகத்தை நினைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாம் அன்பு செய்பவர்களுக்காக நம்மை ஒரு நிமிடமாவது தியாகம் செய்திருக்கிறோமா? நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டும் மற்றவர்களைத் தேடுவது அன்பு அல்ல. பொழுதுபோக்கு. நமக்குத் தேவைக்குப் போக நாம் அன்ப செய்பவர்களுக்குக் கொடுப்பதும் அன்பு அல்ல. பிச்சை. ஒரு அருட்பணியாளர் தனக்குரிய நேரம் போக மற்றவர்களுக்குக் கொடுக்கிறார் என்றால் அவர் அன்பு செய்யவில்லை. மக்களுக்கு நேரப் பிச்சை போடுகின்றார்.

6. அன்பின் இயல்பு கனிவு. 'கனிந்த உங்கள் உள்ளம் எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்' என கலாத்திய திருச்சபைக்கு எழுதுகின்றார் தூய பவுல். இன்று நாம் அன்பு செய்பவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் படிப்பும், நம் ஆலோசனையும், நம் பணமும், நம் அறிவும் அல்ல. நம் கனிவான வார்த்தைகள் தாம். நேற்று மதுரையில் ஒரு அச்சகத்தில் வேலை பார்க்கும் ஒரு அக்காவிற்கு தொலைபேசி அழைப்பு செய்தேன். பேசிக் கொண்டேயிருந்தபோது, 'ஃபாதர் நீங்க என்ன படிக்கிறீங்க?' என்று கேட்டார்கள். 'பைபிள்' என்றேன். அவர் ஒரு இந்து சகோதரி. 'அதைப் படித்தால் என்ன பயன்?' என்று கேட்டார்கள். நான் சற்று நேரம் அமைதியாக இருந்தேன். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அவர்களே பேசினார்கள், 'திருச்சபையின் சட்டம் படித்தால் பேராயர் இல்லத்தில் பணி செய்யலாம். பைபிள் படிச்சு என்ன செய்வீங்க?' 'இல்லக்கா...இங்க நாங்க பைபிள கிரேக்க மொழியிலயும், எபிரேய மொழியிலயும் படிக்கிறேன்' என்று சொன்னேன். 'என்னதான் எந்த மொழியில படிச்சாலும் நீங்க 'நல்லா இருக்கீங்களான்னு' கேட்கிற இரண்டு வார்த்தைகள்தான் உங்களை யாருன்னு எங்களுக்குச் சொல்லுது' என்றார்கள். இன்று மக்கள் ஒரு அருட்பணியாளரிடம் விரும்புவது அவர்களின் படிப்பையோ, அறிவுரையையோ, நகைச்சுவைகளையோ, மறையுரைகளையோ, ஏன் செப வழிபாடுகளையோ அல்ல. கனிவான நாலு வார்த்தைகளைத்தான். மற்ற அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிவிடலாம். நம்மைவிட ஆங்கிலம் தெரிந்த, கம்ப்யூட்டர் தெரிந்த, சட்டம் தெரிந்த, நிதிநிர்வாகம் தெரிந்த, அறிவியல் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர். ஆனால் கனிவான வார்த்தைகளைப் பேசுவது நம்மால் மட்டும்தான் சாத்தியம். அன்பின் இயல்பு கனிவது. 'யார் எனக்கென்று இல்லையென்றாலும், அவர் எனக்காக இருக்கிறார்' என்று நம் அன்பிற்குரியவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு நம் கனிந்த உள்ளத்தைக் காட்டுகிறோமா?

7. அன்பு தன்னில் புறப்பட வேண்டும். 'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்று சொல்வார்கள். நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் ஒருக்காலும் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. தன்னை அன்பு செய்யும் ஒருவரால் தான் மற்றவரை அன்பு செய்ய முடியும். தன்னை அறிந்தவர் மட்டுமே மற்றவரையும் அறிய முடியும். எனக்கே என்ன பிடிக்கும் என்று தெரியாத போது மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும் என எனக்கு எப்படித் தெரியும்? திருமண அன்போ, துறவற அன்போ அது நம்மில் தொடங்க வேண்டும். 'நிறைவாழ்வு என்றால் என்ன?' இறந்தபின் வானதூதர் வந்து நம்மைத் தூக்கிக் கொண்டு சென்று தூயவர் கூட்டத்தில் அமர்த்தி 'தூயவர்! தூயவர்!' என்று பாடுவதா நிறைவாழ்வா? இல்லை. நன்றாகக் குளிப்பதும், சுத்தமான ஆடை அணிவதும், அவசரமில்லாமல் உண்பதும், மற்றவர்களைப் பார்த்து புன்னகை செய்வதும், நம் அன்பிற்கினியாளின் உள்ளங்கைச் சூட்டின் இதத்தை உணர்வதுமே நிறைவாழ்வு.

2 comments:

  1. Anonymous2/03/2014

    இன்றையப் பகுதியின் பலவிஷயங்கள் அருட்பணியாளர்களை நோக்கி விரல் சுட்டுவது போல் இருப்பினும் நாம் அனைவருமே பின்பற்றக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன.ஒருகுடும்பத்தில் தந்தையாக,தாயாக,சகோதரனாக,சகோதரியாக...ஒரு கல்வித்தளத்தில் ஆசிரியராக,மாணவனாக...ஒரு பணித்தளத்தில் மேலதிகாரியாக,அலுவலராக...ஏன் தெருக்கோடியின் ஒரு சாமான்யனாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள நிறையவே உள்ளன.இப்படி பிறருக்காக இத்துணை சிரத்தை எடுக்கும் தங்களையும்
    தங்களின் அனைத்து முயற்சிகளையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. " நாம் பல நேரங்களில் அன்னை தெரசாவின் தியாகத்தையும், அப்துல் கலாமின் தியாகத்தையும் நினைக்கும் அளவிற்கு நம் அப்பா - அம்மாவின் தியாகத்தை நினைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாம் அன்பு செய்பவர்களுக்காக நம்மை ஒரு நிமிடமாவது தியாகம் செய்திருக்கிறோமா?" - எனது மனதை தொட்ட வரிகள்..!

    மிக முக்கியமான பல நல்ல விசயங்களை சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும் விதமாக எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும்...வாழ்த்துக்கள்..!

    ReplyDelete