Saturday, February 1, 2014

நன்றி சொல்லக் காரணம் வேண்டும்!

ஆராம் நாட்டு அரசனின் படைத்தலைவர் நாமான் இன்றைய முதல்வாசகத்தின் கதாநாயகன். கடவுளுக்கு எல்லா ஊரிலும் நண்பர்கள் உண்டு, எல்லா மதத்திலும் நண்பர்கள் உண்டு. படைத்தலைவராய் இருப்பது ஒரு பெரிய அந்தஸ்து. நல்ல உடற்கட்டும், அழகிய தோற்றமும் கொண்டிருந்திருப்பார் நாமான். சொன்ன வேலைகளைச் செய்ய பணியாட்கள். உடன் வர வீரர்கள். என்ன நடந்தாலும் எதிர்த்து நிற்கின்ற துணிச்சல். இத்தனை நல்லவைகளுக்கு மத்தியில் அவருக்கு முள்ளாய்க் குத்திக்கொண்டிருந்தது தொழுநோய். அந்த நேரத்தில்தான் அரமேயர்கள் கூட்டி வரும் ஒரு இஸ்ராயேல் இனப் பெண் நாமானின் மனைவியின் பணிப்பெண்ணாக வருகிறாள். கடவுள் விந்தையான நிகழ்வுகளில் நம்மைச் சந்திப்பதுடன், விந்தையான மனிதர்கள் வழியாகத் தம் திட்டத்தை வெளிப்படுத்தவும் செய்கின்றார். தன் தலைவியிடம்; 'என் தலைவர் சமாரியாவின் இறைவாக்கினரிடம் சென்றால் போதும் நலமடைவார்' என்கின்றார். சொல் கேட்டுப் புறப்படுகின்றார் நாமான். தன் உடல்நலத்தை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்து பத்து தாலந்து வெள்ளி, 6000 செக்கேல்கள் தங்கம் மற்றும் பத்து விலையுயர்ந்த ஆடைகள் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றார். பாவம் அவருக்குத் தெரிய வில்லை கடவுளின் இரக்கத்திற்கு விலைபேச முடியாது என்பது. தன் படை மற்றும் ஆரவாரத்தோடு புறப்பட்டு இறைவாக்கினரின் எலிசாவின் கதவருகில் நிற்கின்றார். இறைவாக்கினர் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. 'சென்று யோர்தான் நதியில் குளியும்' என அனுப்புகின்றார். 'நம்பு! கீழ்ப்படி!' இதுதான் கடவுளின் நலமளித்தலின் இரகசியம். ஆனால் நாமான் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றார்: இறைவாக்கினர் தன்னை மதிக்க வேண்டும், தன்னுடன் நேரம் செலவழிக்க வேண்டும், தன்னைத் தனிப்பட்ட முறையில் குணப்படுத்த வேண்டும், தன்மேல் மந்திரங்கள் சொல்ல வேண்டும், எண்ணெய் பூச வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் கட்டளை மட்டும்தான். நம்புவதும், கீழ்ப்படிவதும் அவருக்குப் புரியவே இல்லை. ஆகையால்தான் எலிசாவின் கட்டளையைக் குறித்து எரிச்சல் படுகின்றார். ஆனால் உடன் வந்தவர்கள் அவரின் மனதை மாற்றுகின்றனர். எலிசாவின் கட்டளையை நிறைவேற்ற யோர்தான் செல்கின்றார். நலம் பெறுகின்றார். நன்றி கூற விரைகின்றார். இஸ்ராயேலின் இறைவனைத் தன் இறைவனாக அறிக்கையிடுகின்றார்.

No comments:

Post a Comment