Wednesday, December 22, 2021

இம்மானுவேலே வாரும்

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 7 (23 டிசம்பர் 2021)

இம்மானுவேலே வாரும்

'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்னும் இறைவாக்கு ஆகாசு அரசருக்கு வழங்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியாளர், இந்த இறைவாக்கு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுவதாகப் பதிவு செய்கின்றார். 'கடவுள் நம்மோடு' என்பது முதல் ஏற்பாட்டில் வாழ்த்தொலியாகவும் வாக்குறுதியாகவும் இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், மலாக்கி இறைவாக்கினர் முன்மொழியும் 'தூதர்' பற்றி வாசிக்கின்றோம். எபிரேய விவிலியத்தின் இறுதி நூலாக இருக்கின்ற இந்தப் புத்தகத்தில், மெசியாவின் வருகைக்கு முன்னர், 'தூதர்' ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார் என்னும் செய்தி தரப்படுகின்றது. இவர் யார்? இவர் படைகளின் ஆண்டவரால் அனுப்பப்படுபவர். இவர் என்ன செய்வார்? தலைவருக்கு முன் சென்று வழியை ஆயத்தம் செய்வார். அவர், 'உடன்படிக்கையின் தூதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் 'பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புகிறார்.'

இத்தூதர் திருமுழுக்கு யோவானையே குறிக்கிறது என்பது நற்செய்தியாளர்களின் கருத்தாக இருக்கின்றது. ஏனெனில், திருமுழுக்கு யோவான் தன்னை, 'தூதர்' என்றே முன்மொழிகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானின் பிறப்பு செய்தியை வாசிக்கின்றோம். நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: முதலில், எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்கின்றார். இரண்டாவதாக, எலிசபெத்தின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மூன்றாவதாக, குழந்தைக்குப் பெயர் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்குப் பெயரிடும் உரிமை தந்தைக்கே உரித்தானதாக இருந்தது. மத்தேயு நற்செய்தியில், யோசேப்புக்குக் கனவில் தோன்றுகின்ற வானதூதர், 'அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்!' என்று, பெயரிடும் உரிமையைக் கொடுக்கின்றார். பெயரிடுகின்ற அந்த நொடியிலிருந்து இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாறுகிறார் யோசேப்பு.

'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சக்கரியா எழுதத் தொடங்கியவுடன் அவருடைய நா கட்டவிழ்கிறது. ஆண்டவருடைய குரலாக யோவான் ஒலிக்கப் போகிறார் என்பதை இந்நிகழ்வு அடையாளப்படுத்துகிறது.

'அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது' என்ற ஒற்றை வரியில் திருமுழுக்கு யோவானைப் பற்றிச் சொல்கிறார் லூக்கா.

வயது முதிர்ந்த பெற்றோர். எளிய குடும்பப் பின்புலம். உறவினர்களின் பலத்த எதிர்பார்ப்பு. இவற்றை எதிர்கொள்ள ஆண்டவரின் கைவன்மை மிகவே அவசியம்.

இன்று மாலை முதல், 'இம்மானுவேலே, வாரும்!' அழைக்கத் தொடங்குகிற நாம், ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து வாழ்தல் நலம்.

1 comment:

  1. “ கடவுள் நம்மோடு! வாழ்த்தொலி மட்டுமில்லை; வாக்குறுதியும் கூட”. மனத்தை மகிழ்விக்கும் வார்த்தைகள்.மெசியாவின் வருகைக்கு முன்னர் அனுப்பப்படும் தூதர்….அவர் யோவானாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.” பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும்,பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புகிறார்”…… இதற்குமேல் நல்லெண்ணத்தூதர் யாராவது இருக்க முடியுமா? என்று கேட்கிறது மனம்.குழந்தைக்குப் பெயரிடும் உரிமை தந்தைக்கே உரியது…..புது செய்தியாக இருக்கிறது.ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்த “ யோவான்” எனும் நாமம் அவர் தந்தையின் நாவைக்கூடக் கட்டவிழ்க்கிறது. இவ்விஷயத்தில் ‘இயேசு’ எனும் நாமத்தைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது ‘ யோவான்’ எனும் நாமம்.
    வாழ்க்கையின் இறுதி மற்றும் எளிமையின் கைப்பிடியில் இருப்பவர்கள் கூவியழைக்க வேண்டியது ஆண்டவரின் கைவன்மையை!
    அவருடைய கைவன்மை நம்முடன் இருப்பதாலேயே நம்மாலும் “ இம்மானுவேலே வாரும்!” என்று அழைக்க முடிகிறது. நாம் எத்தனை கொடுத்துவைத்தவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் தந்தை….வாழ்த்துக்குரியவர்!!!

    ReplyDelete