Thursday, December 23, 2021

ஆண்டவர் உம்மோடு

 

கிறிஸ்து பிறப்பு முன்நாள் (24 டிசம்பர் 2021)

இன்றைய முதல் வாசகத்தில் (2 சாமு 7:1-5,8-12, 16) ஆண்டவராகிய கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசருடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

(அ) 'ஆண்டவர் அளிக்கும் ஓய்வு'

'தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறிய பின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்' என்கிறார் ஆசிரியர். 'ஓய்வு' என்பது இறைவன் அளிக்கும் கொடை. படைப்பின் ஆறு நாள்களும் ஓய்வு நாளாகிய ஏழாம் நாளை நோக்கியே இருக்கின்றன. வெறும் உழைப்பு மட்டுமே இருந்தால் மனித குலம் வறண்டுவிடும். நம் வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால், 'மழலைப் பருவம்' என்னும் ஓய்வில் தொடங்கி, 'முதுமைப் பருவம்' என்னும் ஓய்வில் நிறைவு செய்கின்றோம். ஓய்வுக்கும் ஓய்வுக்கும் இடையே தேவையற்ற பரபரப்பு. 40 மற்றும் 45 வயதுகளில் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவது நல்லது இன்று பலர் அறியத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவர் தரும் ஓய்வே நமக்கு நீடித்த அமைதியைத் தருகிறது.

(ஆ) 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'

'நீர் விரும்பியது அனைத்தையும் செய்து விடும். ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று நாத்தான் தாவீதிடம் கூறுகின்றார். ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது, அனைத்தையும் செய்துவிடும் துணிச்சல் நம்மில் பிறக்கிறது. ஆண்டவருடன் இணைந்த 'கூட்டியக்கம்' நம் ஆற்றலை அதிகரிக்கிறது.

(இ) 'ஆடு மேய்த்த நாள் முதல்'

'என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்' என்று தாவீதிடம் மொழிகிறார் ஆண்டவராகிய கடவுள். தாவீது தன்னிறைவு கொள்கின்றார். இதை ஆண்டவர் தீமையாகப் பார்க்கிறார். அதாவது, 'எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. நான் ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று தாவீது மமதை அடையும்போது, 'தம்பி! நீ இன்று இருப்பது போல முன்னர் இருந்ததில்லை' என்று அவருடைய எளிய பின்புலத்தை நினைவூட்டுகின்றார். மேலும், இந்த இடத்தில் எளிய பின்புலத்திலிருந்த தாவீதை ஆண்டவர் தேர்ந்துகொண்டார் என்பதையும் அவருக்கு நினைவூட்டுகின்றார். ஆக, நம் உயர்வு ஆண்டவரிடமிருந்தே வருகிறது.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:67-79) சக்கரியாவின் பாடலை நாம் வாசிக்கின்றோம். 'இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' என்று தன் கண்களை உயர்த்திப் பார்க்கின்றார் சக்கரியா. 'ஓர் ஊமையனின் பாடல்' என்றழைக்கப்படும் இப்பாடலின் கதாநாயகராக இருப்பவர் கடவுளே.

இன்று, 'தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்கிறார்' ஆண்டவர். அந்த மீட்பர் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறக்க நம்மைத் தயாரிப்போம்.

1 comment:

  1. நாத்தான் வழியாக இறைவன், தாவீது அரசரோடு செய்துகொள்ளும் உடன் படிக்கையை முன் மொழிகிறது இன்றையப்பதிவு.
    ஆண்டவரின் கொடைகள் தேவையான நேரங்களில் தேவையான அளவுக்குக் கிடைக்கிறது. இதில் ஒன்றான “ ஓய்வு” ம், அவர் செய்ய நினைத்த அனைத்துக் காரியங்களுக்கான ‘துணிச்சலும்’,இன்று நான் உயர்விலிருக்கிறேன் என்ற எண்ணம் தாவீதில் எட்டிப்பார்க்க…”உன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் நானே” என்ற உண்மையையும் உணர்த்துகிறார்.
    நற்செய்தி வாசகத்தின் கதாநாயகன் சக்கரியா. அவர் பாடல்” இருளிலும்,இறப்பின் பிடியிலும்….. இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”…. இவ்வரிகள் கூட கதாநாயகனாக இருப்பவர் கடவுளே என்பதை நமக்கு உணர்த்துகிறது.
    தாவீதின் குடும்பத்தில் தோன்றிய அந்த ‘இளந்தளிர்’ இன்று நம் ஒவ்வொரு உள்ளங்களிலும் பிறக்கட்டும்! இயேசு பிறப்பிற்கு அழகானதொரு தயாரிப்பை நமதாக்கிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete