Friday, December 3, 2021

அவர் குரல்

நாளின் (4 டிசம்பர் 2021) நல்வாக்கு

அவர் குரல்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 30:19-21,23-26), ஆண்டவராகிய கடவுள், எருசலேம்வாழ் மக்கள் பெறப்போகின்ற நல்வாழ்க்கையை இறைவாக்காக உரைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கிடைத்தது. ஆனால், ஆண்டவராகிய கடவுள் அவர்களோடு இல்லை. ஆண்டவராகிய கடவுள் தங்களோடு இல்லை என்ற உணர்வே அவர்களுக்குப் பெரிய துன்பமாக இருந்தது. 'என் தலைவராகிய போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும் இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்' என மொழிகிறார் எசாயா. இங்கே கடவுளுக்கு, 'போதகர்' என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. போதகர் என்பது கடவுளின் குரலைக் குறிக்கிறது. பாபிலோனியாவில் அடிமைகளாக இருந்த மக்கள் ஆண்டவருடைய குரலைக் கேட்க இயலாமல் இருந்தனர். ஆனால், இப்போதோ, 'உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' எனும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' என்கிறார் எசாயா. மேலும், இஸ்ரயேல் மக்கள் பெறுகின்ற வளமையும் இறைவாக்காக முன்னுரைக்கப்படுகின்றது.

ஆக, ஆண்டவர் மறைந்திருக்கும் வரை துன்பத்தில் வாடிய மக்கள், ஆண்டவரின் குரலைக் கேட்டவுடன் வளம் பெறுகின்றனர்.

நற்செய்தி வாசகத்தில் இரு கருத்துருக்கள் உள்ளன: ஒன்று, ஆண்டவராகிய இயேசு மக்கள் கூட்டத்தின்மேல் பரிவு கொண்டு அவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களிடையே உள்ள நோய்களை நீக்கவும் செய்கின்றார். இரண்டு, தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புமுன் அறுவடையின் ஆண்டவரை மன்றாடுமாறு பணிக்கின்றார். 'ஆயனில்லாத ஆடுகள்' என்னும் உருவகம் மேய்ப்பர் தொழில் உருவகமாகவும், 'அறுவடை' என்பது விவசாயத் தொழில் உருவகமாகவும் உள்ளது. பரிவு என்பது இயேசுவைப் பொருத்தவரையில் ஓர் உணர்வு அல்ல. மாறாக, செயல்பாடு. அந்தச் செயல்பாடு போதனையாகவும் வல்ல செயலாகவும் வெளிப்படுகிறது.

ஆக, ஆண்டவராகிய கடவுள் பரிவு காட்டத் தொடங்கியவுடன் மக்கள் நலம் பெறுகின்றனர்.

பரிவு காட்டும் கடவுள் காட்சியாகவும், குரலாகவும் நம் முன் வருகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் நம் உள்ளத்தில் ஒலிக்கும் குரலாக உள் உறைகின்றார். அவரைக் கண்டுகொள்தல் மாற்றத்தைத் தருகின்றது நமக்கு!

1 comment:

  1. “ அவர் குரல்”…. என்னதான் இஸ்ரேல் மக்களுக்கு உணவும்,நீரும் கிடைத்தபோதிலும் ‘அவர்’ தங்களோடு இல்லை என்பது பட்டினிக்குச் சமமாகவே இருந்துள்ளது.ஆனால் இப்போது மக்களின் நிலமை வேறு. இப்போதோ “ உங்கள் போதகரைக்கண்ணால் காண்பீர்கள்; நீங்கள் வலப்புறமோ,இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் இதுதான் வழி; இதில் நடந்து செல்லுங்கள் எனும் குரல் ஒலிக்கும்” என்கிறார் எசாயா.
    “ ஆயனில்லா ஆடுகள்” எனத்தன் மக்களை வாஞ்சையோடு…பரிவோடு பார்க்கிறார் இயேசு. தந்தை சொல்வது போல் “ பரிவு” என்பது உணர்வு மட்டும் இல்லை.அது செயல்பாடாக உருவம் எடுக்க வேண்டும்.நெஞ்சில் உணர்வாகத் தோண்றி, நம் வாய் வார்த்தைகளாக….கரங்களின் கொடுத்தலாக…கால்களின் தேடிப்போதலாக நீளும் போது மட்டுமே பரிவு முழு உருவம் பெறுகிறது.
    பரிவு காட்டும் கடவுள் நமக்குக் காட்சியாகவும்….உள்ளத்தின் குரலாகவும் உறையும் போது மட்டுமே நம்மால் அவரைக் கண்டு கொள்ள முடிகிறது; வாழ்க்கையும் மாற்றம் பெறுகிறது.
    கடவுளின் பரிவு….ஏசாயாவின் பரிவு…தந்தையின் பரிவு என, பரிவு மயமாக…வடிவமாக கிடைத்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete