சிறியவரும் பெரியவரும்
'நீரில் அடித்துச் செல்லப்படும் படகு போல வாழ்க்கை என்பதை ஞானியர் சொல்லி நாங்கள் உணர்ந்ததால், மாட்சியில் பெரியவர்களாக இருப்பவர்களைக் கண்டு நாங்கள் வியப்பதில்லை. சிறியோரைக் கண்டு இகழ்தலும் இல்லை' – 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில், பெருமையும் சிறுமையும் கண்டு வியப்பதுமில்லை, இகழ்வதுமில்லை என மொழிகிறார் கணியன் பூங்குன்றனார்.
'பெரிதும் சிறிதும்' என்பது இறைவனால் நிர்ணயம் செய்யப்படுவது என்றும், நினைத்த நேரத்தில் பெரியதைச் சிறியதாகவும், சிறியதைப் பெரியதாகவும் மாற்றும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்றும், நாம் செய்ய வேண்டியதெல்லாம் வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது மட்டுமே என்றும் நமக்கு முன்மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
முதல் வாசகத்தில் (எசா 41:13-20), 'யாக்கோபு என்னும் புழுவே,' 'இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே' எனத் தன் மக்களை அழைக்கின்ற ஆண்டவராகிய கடவுள், 'அஞ்சாதே! நான் உனக்குத் துணையாய் இருப்பேன்!' என மொழிகின்றார். இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனம் அவர்களை இந்த நிலைக்குத் தள்ளுகிறது. மற்றவர்களின் இரக்கத்தில் நாம் வாழ்கின்ற போது, ஒரு புழு போலவும், பொடிப்பூச்சி போலவும் நாம் உணர்கின்றோம். ஒரு புழு தானே எழுந்து நிற்க இயலாது. ஒருவர் புழுவை எடுத்து ஒரு குச்சியில் அல்லது கம்பியில் நிறுத்தினால்தான் அது நேராக நிற்க முடியும். நிற்கவும் இயலாத வலுவற்ற நிலையில் இருக்கும் இஸ்ரயேலை, போரடிக்கும் கருவியாக மாற்றுகின்றார் ஆண்டவர். அதாவது, வலிமை மிக்க இரும்பாக, தானே உயர்ந்து நிற்கும் ஒரு கருவியாக மாற்றுகின்றார். மலைகளையும், குன்றுகளையும் அடித்துத் தவிடுபொடியாக்கும் அளவுக்கு அது வலிமை மிக்கதாக இருக்கும்.
நற்செய்தி வாசகத்தில் (மத் 11:11-15), திருமுழுக்கு யோவானின் மேன்மையை எடுத்துரைக்கின்ற இயேசு, தொடர்ந்து, விண்ணரசில் சிறியவர்கள் அவரைவிட மேன்மையானவர்கள் என்று மொழிகின்றார். மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை நற்செய்தியின் பல பாடங்களிலிருந்து நாம் ஊகிக்க முடிகிறது. மேலும், புதிதாகக் கிறிஸ்தவம் தழுவியவர்கள், தங்கள் நிலை என்ன? என்றும், தங்களின் தகுதி என்ன? என்றும் குழப்பத்தில் இருந்தனர். அவர்களுக்கு விடையளிக்கின்ற மத்தேயு நற்செய்தியாளர், திருமுழுக்கு யோவான் பற்றிய இந்தப் பதிவை எழுதுகின்றார். மேலோட்டமாகப் பார்த்தால், இயேசுவின் சீடர்கள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர்கள் என்று இயேசுவே சொல்வது போல இருக்கும். திருமுழுக்கு யோவானின் 'பெரியவர் நிலை' கடவுளுடைய அருளாலும், யோவானின் பணிகளாலும் அவருக்குக் கிடைக்கிறது. அது போல, நம்பிக்கையாளர் நிலையும் கடவுளின் அருளால் விளைவது. மேலும், அந்தப் பெரியவர் நிலையை ஒவ்வொருவரும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கும் சொல்வது என்ன?
பெருமை மற்றும் சிறுமை என்பவை சார்பியல் சொற்கள். இதுதான் பெருமை, அது சிறுமை என்று நாம் எதையும் நேரடியாக வரையறுக்க இயலாது. இறைவனின் உடனிருப்பு நம் நிலையை உயர்த்துகிறது. பெருமை-சிறுமை பாராட்டி நமக்குள்ளேயே வேற்றுமைகள் வளர்ப்பது சால்பன்று.
பெரிதும்,சிறிதும் இறைவனால் நிர்ணயம் செய்யப்படுவதால் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென இயம்புகிறது இன்றைய இறைவார்த்தை.” யாக்கோபு எனும் புழுவே!”, “ இஸ்ரேல் எனும் பொடிப்பூச்சியே!” என்று நம் இழிநிலையை எடுத்துக்கூறும் அவர்தான் “ அஞ்சாதே! நான் உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று நமக்குத்துணையாய் வருகிறார்.வலுவற்ற நிலையில் இருக்கும் தன்மக்களை வலுவுள்ள இரும்பாக மாற்றுகிறார் நம் இறைவன்! நற்செய்தி வாசகத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான திருமுழுக்கு யோவானைத் தாழ்த்திப்பேசுவது போல் உயர்த்துகிறார்.யாருக்குமே “ பெரியவர்” எனும் நிலை தானாக வருவதல்ல…இறைவன் மனம் வைக்கவேண்டும்..அது திருமுழுக்கு யோவானேயானாலும் கூட. நம்மால் வரையறுக்க இயலாத பெருமையையும்,சிறுமையையும் ஓரங்கட்டி அவரவர் போக்கில் அனைவரையும் ஏற்றுக்கொள்ளலாமே!
ReplyDeleteபதிவின் ஆரம்பத்தில் வரும் கணியன் பூங்குன்றனாரின் பெருமையும்,சிறுமையும் கண்டு வியப்பதுமில்லை; இகழ்வதுமில்லை….” யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் வரிகள்
“இறைவனின் உடனிருப்பு மட்டுமே நம்மை உயர்த்த வல்லது”….எனும் தந்தையின் வரிகளுக்கு உரமேற்றுகிறது. “பொன்னும் உருகலாம்; பூவும் கருகலாம்” எனும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வருகின்றன. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!