Friday, December 10, 2021

கற்றல்

நாளின் (10 டிசம்பர் 2021) நல்வாக்கு

கற்றல்

மேற்கத்தேய மற்றும் கீழைத்தேயு மெய்யியல் மரபுகள், 'அறிதல்' மற்றும் 'மெய்யறிவு' ஆகியவற்றை பெரிதும் வலியுறுத்துகின்றன. 'அறிதல்' என்பது பற்றி எழுதுகின்ற பிளேட்டோ, 'அறியாதவரை விட அறிந்தவர் எப்போதும் மேன்மையானவர்' என மொழிகின்றார். இசைக்கருவி ஒன்று இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இசைக்கருவியை மீட்டத் தெரிந்த ஒருவர் இசைக்கருவியை மீட்டத் தெரியாதவரை விட அறிந்தவராக இருக்கிறார். இந்த அறிதல் அவருக்கும் கருவிக்கும் இடையே ஓர் உறவை ஏற்படுத்துகின்றது. 'அறியாமை' என்பது 'இருள்' என்றும், 'அறிவு' என்பதே 'ஒளி' என்றும் நாம் வாழ்வில் உணர்கின்றோம். 

'ஞானம்' என்பது 'மெய்யறிவு' என்றும், 'செயல்பாடுகளில் வெளிப்படும் அறிவு' என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றது. 

மெய்யறிவு தவறுவதால் ஏற்படும் பிறழ்வுகளை நமக்குச் சுட்டிக்காட்டி, ஆண்டவர் தரும் மெய்யறிவைப் பெற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் வாசகத்தில், 'பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும், செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!' என்றும் முன்மொழியும் ஆண்டவராகிய கடவுள், தன்னிடமிருந்து இஸ்ரயேல் கற்றிருந்தால் அதற்கு அழிவு நேரிட்டிருக்காது என்று சொல்கின்றார். அதாவது, இஸ்ரயேல் அழிந்து போனதற்குக் காரணம் அது கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை, அல்லது கற்றதைச் செயல்படுத்தவில்லை, அல்லது கற்றதை மறந்துவிட்டது. 

நற்செய்தி வாசகத்தில், 'இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்?' என்ற கேள்வியை எழுப்புகின்ற இயேசு, தன் சமகாலத்தில் வழக்கத்தில் இருந்த குழந்தைகளின் விளையாட்டு ஒன்றை எடுத்துக்காட்டி. தன் சமகாலத்தவர்கள் தங்கள் அறியாமையால் திருமுழுக்கு யோவானையும், தன்னையும் ஏற்றுக்கொள்வதற்கு இடறல் பட்டதை எடுத்துரைக்கின்றார். இறுதியில், 'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று' என்கிறார்.

நாம் இன்று கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் எவை?

(அ) 'அறிவு', 'மெய்யறிவு,' மற்றும் 'ஞானம்' என்னும் கொடைகளை இறைவனிடமிருந்து நாம் வலிந்து பெற்றுக்கொள்தல் வேண்டும்.

(ஆ) அறிவு என்பது செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, 'நெருப்பு சுடும்' என்னும் என் அறிவு, 'நெருப்புக்கு அருகில் என் விரலை நான் கொண்டுபோகக் கூடாது' என்ற செயலாக மாற வேண்டும்.

(இ) பயனுள்ளவற்றைக் கற்றுத் தருபவராக வருகின்றார் கடவுள். சில நேரங்களில் நாம் பயனற்றவற்றின்மேல் நம் நேரத்தையும் ஆற்றலையும் செலவழிக்கின்றோம். அப்படிச் செய்வதால் ஆற்றல் இழப்பு அல்லது கசிவு நேரிடுகிறது. பயனுள்ளவற்றைச் செய்வதற்கான நேரத்தையும் ஆற்றலையும் நாம் இழந்துவிடுகிறோம்.


1 comment:

  1. “ அறிவு” குறித்த ஒரு விழிப்புணர்வு.அறிவு என்பது ‘ ஒளி’ என்றும், அறியாமைஎன்பது ‘இருள்’ என்றும் ஒரு புரிதலெனில் மனிதன் அறிவைத்தேடி ஓடுவது இயற்கையே! பல நேரங்களில் மனிதனுக்கு இது குறித்த புரிதல் சரியாக இராத காரணத்தால் பல தவறுகள் நிகழ்கின்றன என்பது நாம் அன்றாடம் காணும் விஷயம்.
    கற்பதைக் கற்க வேண்டியவரிடமிருந்தே கற்க வேண்டும் எனும் பாடத்தை இஸ்ரேல் மக்கள் பற்றிய முதல் வாசகத்திலிருந்தும்,” ஞானம் மெய்யானது” என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று” என்பதை நற்செய்தி வாசகத்திலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
    நமக்கு கற்றுத தர ‘நான்’, ‘நீ’ என எத்தனை பேர் போட்டி போட்டுக்கொண்டு வந்தாலும் “ ஞானமோ”, ‘’ மெய்யறிவோ” இதை அனைத்து அறிவுக்கும் ‘ மூலமாம்’ இறைவனிடமிருந்து பெற்றுத் தெளிதலே சிறப்பு.பல சமயங்களில் “ஆற்றல் இழப்பு” அல்லது “கசிவு” போன்ற எதிர்மறையான விஷயங்களிலிருந்தும் கற்றுக்கொள்வது உண்டு. ஒரு முறை செய்த தவறை மறுமுறை தள்ளி வைப்பதற்கு அது நமக்கு உதவுகிறது.
    புத்தகப் படிப்பு மட்டுமே உண்மையான படிப்பு என்ற காலம் மாறி “பயனுள்ளவற்றைக்கற்பிப்பவரும், செல்ல வேண்டிய வழியில் நம்மை நடத்துவருமான”
    இறைவனிடமிருந்து பெறுவதே உண்மையான அறிவு…. என மார்தட்டிச்சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete