மரியின் அமல உற்பவம்
இன்று அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். கடந்த ஆண்டு நாம் தொடங்கிய, 'புனித வளனார் ஆண்டு' இன்றுடன் நிறைவு பெறுகிறது. 'அன்னை கன்னி மரியா அமல உற்பவி' என்னும் வழுவாநிலைக் கோட்பாடு, 'இன்எஃபாபிலிஸ் தேயுஸ்' என்னும் கொள்கைத் திரட்டின் வழியாக, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் தோன்றிய அன்னை கன்னி மரியா, 'நாமே அமல உற்பவம்' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார்.
அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவத்தை நான் மூன்று சொற்களில் புரிந்துகொள்கிறேன்: (அ) தாய்மை, (ஆ) தகுதிப்படுத்துதல், மற்றும் (இ) தாழ்ச்சி.
அ. தாய்மை
இன்றைய முதல் வாசகத்தின் (தொநூ 3:9-15,20) இறுதியில், 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' என்று வாசிக்கின்றோம். நம் தொடக்கத்தாய் இரு பெயர்களைப் பெறுகிறாள்: ஒன்று, 'பெண்' (தொநூ 2:23). 'பெண்' (எபிரேயத்தில் 'ஈஷ்ஷா') என்னும் பெயர் படைப்பின் தொடக்கத்தில், இரண்டாம் கதையாடலின்படி, 'ஆண்' (எபிரேயத்தில் 'ஈஷ்') வழங்குவதாக உள்ளது. 'ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொருந்தக்கூடிய தன்மையை இந்தப் பெயர் எடுத்துரைக்கின்றது. இரண்டாவது பெயர், 'தாய்' (தொநூ 3:20). 'தாய்' (எபிரேயத்தில், 'ஹவ்வா') என்னும் பெயர், நம் முதற்பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியை உண்டதால் கடவுள் அவர்களைச் சபித்ததற்குப் பின்னர் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்வு வரை ஆதாம்-ஏவா என்னும் இருவரும் தங்கள்மையம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இப்போது அடுத்த தலைமுறை தொடங்குகின்றது. ஏன் தொடங்க வேண்டும்? பெண்ணை ஏமாற்றிய பாம்பைச் சபிக்கின்ற கடவுள், 'உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' என்கிறார். 'வித்து' என்பது ஆணுக்கு உரியது. பெண் என்பவர் வித்தை ஏற்பவர் என்பதே உடலியல் எதார்த்தம். இங்கே 'பெண்ணின் வித்து' எனக் குறிப்பிடப்படுவதால், இது 'முன்நற்செய்தி' (அதாவது, மரியா ஆணின் உறவு இன்றி குழந்தை பெறுவது முன்னறிவிக்கப்படுதல்) என்று திருஅவைத் தந்தையர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. 'பெண்ணின் வித்து' என்பதைப் பெண்ணின் வழிமரபு என்றும் எடுக்கலாம். அந்த வழியில், மரியா என்னும் பெண்ணின் வழிவரக்கூடிய இயேசு தன் சிலுவையைக் கொண்டு பாம்பின் தலையை நசுக்குவார் என்றும் புரிந்துகொள்ளலாம். இயேசு பிறப்பில் மரியா தாய்மை ஏற்கின்றார். மரியாவின் தாய்மை வழியாகவே தீமை அழித்தல் நிகழ்வு தொடங்குகிறது. ஆக, 'அமல உற்பவம்' என்பது மரியாவின் 'தாய்மை' நிலையைக் குறிக்கிறது. தாய்மை ஏற்பதற்காகவே மரியா பாவ மாசின்றி பிறக்கின்றார்.
ஆ. தகுதிப்படுத்துதல்
இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12), எபேசு நகர இறைமக்களை, 'தூயவர்கள்' என அழைக்கின்ற பவுல், தூய்மை நிலை என்பது கடவுள் அளித்த தகுதியால் வந்தது என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார். கடவுள் மனிதர்களைத் தகுதிப்படுத்தும் நிலை மூன்று தளங்களில் நடந்தேறுகிறது: ஒன்று, 'உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்.' இரண்டு, 'அன்பினால் அவர்களை முன்குறித்து வைக்கின்றார்.' மூன்று, 'கிறிஸ்து வழியாக உரிமைப்பேற்றை வழங்குகின்றார்.' அதாவது, ஒரு தெருவில் பெரிய பணக்காரர் ஒருவரின் வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் வழியாக இளவல் ஒருவர் தினமும் சைக்கிளில் பயணம் செய்து தன் பணிக்குச் செல்கிறார். அவரைக் காண்கின்ற பணக்காரர், அவர்பால் ஈர்க்கப்பெற்று, அவருக்குத் தன் சொத்தின் பெரும்பகுதியை அளிக்கின்றார். 'அவர் மகனாகத் தத்தெடுக்கப்பட்டால்தான் சொத்தைப் பகிர முடியும்' என அவருடைய வழக்கறிஞர் சொல்கின்றார். பணக்காரரும் உடனே, அவரைத் தன் மகனாக ஏற்றுக்கொள்வதாக பத்திரம் பதிவு செய்கின்றார். சட்ட அடிப்படையில் அவர் மகனாக மாறியவுடன், தனக்கு உரிமைப்பேறாக இருக்கின்ற சொத்தில் அந்த புதிய மகனுக்குப் பங்களிக்கிறார் பணக்காரர். இப்படித்தான் கடவுள் நமக்குத் தன் உரிமைப் பேற்றை அளிக்கின்றார். ஆக, கடவுளின் இரக்கம் அல்ல இது. மாறாக, அவருடைய கொடை. நம்மைத் தகுதிப்படுத்துதல் என்னும் கொடை. அமல உற்பவ நிகழ்வில் அன்னை கன்னி மரியா தகுதிப்படுத்தப்படுகின்றார். இச்செயலைக் கடவுளே நிகழ்த்துகின்றார்.
இ. தாழ்ச்சி
நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38), இயேசு பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று வானதூதர் கபிரியேல் மொழிந்தவுடன், 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று சரணாகதி அடைகின்றார் மரியா. தொடர்ந்து, எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வில் அவர் பாடும் புகழ்ச்சிப் பாடலிலும், 'ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' எனப் பாடுகின்றார். தாழ்ச்சி என்பது அடையாளங்களை இழக்கின்ற நிலை. தன் இருத்தல் நிலை ('களிமண்' நிலை) இதுதான் என்று உணர்கின்ற நிலை. தன் கையறுநிலையை ஏற்றலே தாழ்ச்சி. 'நீர் என்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்' என்று களிமண் தன்னை உருவாக்குபவரிடம் தன்னைக் கையளிப்பது போல மரியா தன்னை இறைத்திட்டத்திற்குக் கையளிக்கின்றார்.
இன்றைய திருவிழா நமக்கு வைக்கும் சவால்கள் எவை?
(அ) தாய்மை என்பது நாம் இந்த உலகில் செய்ய வேண்டிய பணியைக் குறிக்கிறது. தந்தைமை அல்லது தாய்மை என்ற அடிப்படையில் நான் இந்த உலகில் செய்ய வேண்டிய எனக்குரிய பணி என்ன? என்பதை அறிதல்.
(ஆ) கடவுள் என்னை, 'தூயவர்' என்ற நிலைக்குத் தகுதிப்படுத்தியுள்ளார் எனில், அத்தகுதியை நான் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
(இ) தாழ்ச்சி என்னும் மதிப்பீட்டை நான் வாழ்வாக்கத் தடையாக உள்ள காரணிகள் எவை?
அமல உற்பவத் திருநாள் வாழ்த்துகள்!
“ மரியின் அமல உற்பவம்!” பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை கன்னி மரியா “நாமே அமல உற்பவம்! “ என்று தன்னைத்தானே வெளிப்படுத்திய நிகழ்வே இன்றைய தினத்தின் கருப்பொருள்.தந்தை போற்றும் மரியாவின் தாய்மை…தகுதிப்படுத்துதல் மற்றும் தாழ்ச்சி…நமக்கும் இணக்கமாகவே இருக்கிறது.
ReplyDeleteகடவுள் பாம்பை சபிக்கின்ற வார்த்தைகளில் ‘பெண்ணின் வித்து’ எனும் வார்த்தை ‘பெண்ணின் வழிமரபு’ எனும் பொருள் கொண்டது என்பதும், தீமையை அழிக்கவே மரியா தாய்மையை ஏற்றார் என்பதும், ‘அமல உற்பவம்’ என்பது மரியாவின் தாய்மையைக் குறிக்கிறது என்பதும், இந்த தாய்மை நிலையை ஏற்கவே பாவ மாசின்றி பிறக்கிறார் என்பதும் ….இத்தனையும் மரியாவின் “ நாமே அமல உற்பவம்” எனும் வார்த்தைகளில் பொதிந்து கிடக்கிறது.
மரியா இயேசுவைப்பெற்றெடுக்க இறைவன் அவருக்குக் காட்டியது இரக்கம் அல்ல..ஆனால் ‘கொடை’ என்கிறார் தந்தை.அவர் மகனை சுமக்கத் தகுதியாகும் பொருட்டு ‘மாசுமறுவற்ற’ ஒரு கொடையை அவருக்கு உவந்து அளிக்கிறார் விண்ணகத்தந்தை.
தன்னை நோக்கி வந்து செய்தி சொன்ன வானதூதருக்கு மரியாவின் பதில் “ உம் சொற்படியே ஆகட்டும்!” என்பது. தன்னைக் குயவன் கைகளில் களிமண் என அவரை உணரவைத்தது அவருடைய தாழ்ச்சியே என்பது வெள்ளிடை மலை.
இறுதியில் தாய்மை…..தகுதி….தாழ்ச்சி குறித்து தந்தை முன்னெடுக்கும் கேள்விகள்.நம் நடத்தை இக்கள்விகளுக்கு சாதகமானதா இல்லை பாதகமானதா? ஒருவருக்கொருவர் வேறுபடும் விஷயமிது. மரியாவின் வழியில் முந்தைய இரு விஷயங்களை இல்லையெனினும் அந்த “ தாழ்ச்சியை” மட்டுமேனும் நான் வாழ்வில் ஏற்று நடக்க இறையருள் என் மேல் இறங்குவதாக!
பல விஷயங்களுக்காக இன்றையத் திருவிழா எனக்கு நெருக்கமானது. அதில் ஒன்று என் ஏழு வயதில் இறைஇயேசுவை முதன் முறையாக என் உள்ளத்தில் ஏற்ற நாள்.அன்றைய நாளின் குழந்தைத்தனம் என்னில் உள்ளதா? தந்தையின் கேள்விகளின் பின்னனியில் விடை தேடுகிறேன்.
தந்தைக்கும், அனைவருக்கும்” அமல உற்பவத் திருநாள் வாழ்த்துக்கள்!”