Saturday, December 25, 2021

இறைவனில் உறையும் குடும்பம்

திருக்குடும்பத் திருவிழா

I. 1 சாமுவேல் 1:20-22,24-28 II. 1 யோவான் 3:1-2,21-24  III. லூக்கா 2:41-52

இறைவனில் உறையும் குடும்பம்

'குடும்பங்களை மனிதர்கள் உருவாக்கலாம். ஆனால், திருக்குடும்பத்தை இறைவனே உருவாக்குகின்றார்' என்பது நம் வாழ்வியல் அனுபவமாக இருக்கலாம். இந்த ஆண்டு நாம் கொண்டாடும் திருக்குடும்பத் திருவிழா மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) 'குடும்பமும் நற்செய்திப் பணியும்' என்ற தலைப்பில் நடந்த ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவாக வெளிவந்த 'அன்பின் மகிழ்ச்சி' (2015) என்னும் திருத்தூது ஊக்கவுரையின் ஐந்தாமாண்டு நிறைவில், இந்த ஊக்கவுரை முன்மொழிகின்ற இறையியல் மற்றும் மேய்ப்புப் பணிசார் அக்கறைகளை நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். (ஆ) இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நாம் தொடங்கிய கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றம், இணைந்து பயணித்தலை வலியுறுத்துகிறது. திருஅவையின் இணைந்து பயணித்தல் அதன் அடிப்படை அலகான குடும்பத்தில்தான் தொடங்குகின்றது. (இ) பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நாம் இந்த நாள்களில் குடும்பத்தின் இருத்தலைக் கொண்டாடத் தொடங்கியிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம், பெருந்தொற்றின் தாக்கம் நம் குடும்பங்களின்மேல் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சுமைகளையும், உறவு இழப்புகளையும் தாண்டி நம்பிக்கையை அணையாமல் காத்து வருகின்றோம்.

'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, 'ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள், 'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்'' என்று சொன்ன மனிதக் குடும்பம் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது, குடும்பம் என்ற நிறுவனம் இன்று தேவையற்ற சுமையாக, அல்லது தேவைக்கேற்ற சுகமாகப் பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது.

திருமணம் என்னும் அருளடையாளத்தை நாம் ஆலயத்தில் கொண்டாடுகின்றோம். மணமகனும் மணமகளும் அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்கள் என்றாலும், அங்கே அவர்களின் அன்பை முத்திரையிட்டுக் காத்தருள்பவர் ஆண்டவரே. ஆண்டவரின் இல்லத்தில் தொடங்குகின்ற குடும்பம் ஆண்டவர் தங்களுடைய இல்லத்தில் இருப்பதை மறக்கும்போது பிறழ்வுபடத் தொடங்குகின்றது. அல்லது ஆண்டவர் தங்களுடைய இல்லத்தில் இருப்பதை உணர்கின்ற குடும்பம் சிறப்புடன் திகழ்கிறது.

இறைவனில் உறையும் குடும்பமே திருக்குடும்பம் என்ற மையச்சிந்தனையில் சுழல்கின்றன இன்றைய நாளின் வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், அன்னா நீண்ட காலக் காத்திருத்தலுக்குப் பின்னர், தன் இறைவேண்டலின் பயனாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கின்றார். அந்தக் குழந்தைக்குப் பெயரிடுகின்றார். அந்தக் குழந்தையை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்கின்றார். அன்னாவின் இச்செயல் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. தவம்கிடந்து பெற்ற தன் குழந்தையைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கத் துணிகின்றார். கடவுள் கொடுத்ததை கடவுளுக்கே கொடுக்கின்றார். தன் கையில் உள்ள அனைத்துச் செப்புக்காசுகளையும் ஆலயத்தில் போட்ட கைம்பெண் போல, தன் குழந்தையைக் காணிக்கையாக்குகின்றார் அன்னா. அன்னாவின் இறைநம்பிக்கை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாக இருக்கிறது. தன்னையும் தன் இறைவனையும் பிரித்துப் பார்க்கவில்லை அவர். கடவுளையும் தன் இல்லத்தில் ஒரு நபராகவே பார்க்கின்றார். அல்லது தன் இல்லத்தை இறைவனின் இல்லத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றார். இதுதான் முழுமையான அர்ப்பணம். அதாவது, எதையும் திரும்ப எதிர்பார்க்காத அர்ப்பணம். இந்த அர்ப்பணம்தான் குடும்பத்தில் கணவனையும், மனைவிiயும் இணைக்கிறது.

இங்கே, எல்கானா மற்றும் அன்னா என்னும் தம்பதியினர் தங்களுடைய இல்லற வாழ்வில், இறைவனைத் தொழுவதை முதன்மையான பணியாகக் கொண்டிருக்கின்றனர். அன்னா தன் கையறுநிலையில் இறைவனையே தழுவிக்கொள்கின்றார். தன் குழந்தையும் இறைவனைத் தழுவிக்கொள்ளவும், இஸ்ரயேலின் பெரிய இறைவாக்கினராகவும் அருள்பணியாளராகவும் மாறும்படி இறைவனுக்கே அதை அர்ப்பணம் செய்கின்றார். எல்கானா-அன்னா-சாமுவேல் குடும்பம் இறைவனில் உறையும் குடும்பமாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-2, 21-24) கடவுளின் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படும் மக்கள், அந்த நிலையில் நிலைத்திருக்க, 'நம்பிக்கை,' 'அன்பு' என்ற இரண்டு பண்புகள் தேவைப்படுகின்றன. அல்லது, 'நம்பிக்கை' என்ற கணவனும், 'அன்பு' என்ற மனைவியும் இணைந்து 'கடவுளின் மக்களை' பெற்றெடுக்கின்றனர். இந்த இரண்டும் கடவுளின் மக்களை அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நிலைத்திருக்க உதவி செய்கின்றன.

திருத்தூதர் யோவான் அனைத்து நம்பிக்கையாளர்களையும் இறைவனின் குடும்ப உறுப்பினர்களாகப் பார்க்கின்றார். கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பினால் நாம் அவருடைய பிள்ளைகளாக மாறுகின்றோம். அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தல் வழியாக நாம் பதிலன்பு செலுத்துகிறோம்.

ஆக, யோவானைப் பொருத்தவரையில் நம்பிக்கை மற்றும் அன்பு வழியாக நாம் இறைமையில் பங்கேற்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 2:41-52) திருக்குடும்பம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கிறது. இளவல் இயேசுவைக் காணவில்லை. திருக்குடும்பம் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் செல்கிறது. அந்த நேரத்தில் இயேசுவுக்கு வயது 12. யூத சமூகத்தில், 12 வயதில்தான் ஒரு குழந்தை முழுப்பருவம் அடைகிறது. இந்த வயதிலிருந்து அக்குழந்தை யூதச் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவும், அவற்றின்படி நடக்கவும் வேண்டும் என்பது வழக்கம். அந்தச் சட்டங்களில் ஒன்றுதான் எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது. இந்த வழக்கப்படியே, இயேசுவை அழைத்துக்கொண்டு தங்களின் ஆண்டு ஆன்மிகக் கடமைகளை நிறைவேற்ற திருக்குடும்பம் எருசலேமுக்கு வருகிறது.

இங்கே நற்செய்தியாளர் லூக்காவின் நோக்கம் இயேசுவைக் கடவுளின் மகன் என்று முன்வைப்பதாகவும், இயேசு செய்ய வேண்டிய பணிக்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. தன் பெற்றோருடன் ஆலயம் வரும் இயேசு, அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் தந்தையின் இல்லத்தில் தங்கிவிடுகின்றார். அந்த இல்லத்தில்தான் அவர் மறைநூல் வல்லுநர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றிக் கேள்வியெழுப்புகின்றார். இளவலாய் இருந்தாலும், அவருக்குத் தன் பயணம் முழுவதும் இந்த ஆலயத்தை மையப்படுத்தியதே என்று அவர் அறிந்திருந்தார்.

இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது. இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இருந்தாலும், தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். முதன் முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து வந்து அவருக்கு அந்த நகரையும், ஆலயத்தையும் அறிமுகம் செய்கின்றனர்.

இந்த நிகழ்வைப் பற்றி, 'தந்தையின் இதயத்தோடு' என்னும் திருத்தூது மடலில் எழுதுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், புனித யோசேப்பு தன் பயனற்ற நிலையை இங்கே உணர்ந்தார் என எழுதுகின்றார். பயனற்ற நிலையை உணர்தல் என்பது, தான் இல்லாமலேயே இந்த உலகில் நிகழ்வுகள் நகரும் என்னும் மெய்ஞ்ஞானம் பெறுவது. ஏனெனில், அனைத்தையும் நடத்துபவர் கடவுளே. தன்னுடைமையாக்கும் அன்பு கொண்டிருக்கும் ஒருவர் தன்னால் மட்டுமே மற்றவர்களுக்குப் பயன் என்று சொல்லி, மற்றவர்களும் தன்னைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால், தற்கையளிப்பைக் கற்றுக்கொண்ட ஒருவர், கற்புநிறை அன்போடு தன் பயனற்ற நிலையை ஏற்றுக்கொள்வார்.

'என் தந்தையின் அலுவல்களில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும்' என்னும் இயேசுவின் வார்த்தைகள் யோசேப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். தந்தையின் அலுவல் தச்சுத்தொழில் இல்லையா! என்று ஒரு நொடி நினைத்திருப்பார். ஆனால், உடனடியாக இறைத்திட்டத்தை உணர்ந்தவராக மௌனம் காத்திருப்பார். மரியா அனைத்தையும் தன் உள்ளத்தில் பதித்து சிந்திக்கின்றார். இயேசு நாசரேத்து திரும்புகின்றார். ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து வாழ்கின்றார்.

சாமுவேல், மற்றும் இயேசுவின் குடும்பங்களைப் போல நம்பிக்கையாளர்களின் குடும்பங்களும் இறைநம்பிக்கையையும், இறையன்பையும் அடிப்படையாகக் கொண்டு அவரில் உறைதல் நலம்.

இறைவனில் குடும்பங்கள் உறைவது எப்படி?

(அ) பற்றுகளை விடுதல்

தன் குழந்தை தன் வழியாக வந்தாலும், அது தன்னுடையது அல்ல என்று உணர்கின்றார் அன்னா. தான் குழந்தையின் வளர்ப்புத் தந்தையே என்ற வரையறையை உணர்ந்து, நிழல்நில் தந்தையாக இயேசுவோடு வலம் வரத் துணிகின்றார் யோசேப்பு. தன் மகனுடைய செயல்கள் தனக்கு வியப்பைத் தந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கின்றார் மரியா. தங்கள் குழந்தைகள் தங்களுக்குரியவர்கள் அல்லர் என்ற மெய்யறிவு பெற்றவர்களாக இருத்தல் முதல் படி.

(ஆ) நம்பிக்கை வழி நீட்சி

நம் குடும்பத்தை இந்த உலகில் தனியொரு குடும்பமாகக் காணாமல், இறைநம்பிக்கையின் வழியாக கடவுளுக்குள் நீட்டித்துத் தங்கள் குடும்பங்களைக் காணுதல் இரண்டாம் படி. இரண்டாம் வாசகத்தில் யோவான் இத்தகைய நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றார். நம்பிக்கையின் வழியாக அனைவரும் கடவுளின் மக்களுக்குரிய நிலையை அடைகின்றனர்.

(இ) அகத் தேடல்

குழந்தையை அர்ப்பணித்தல் வழியாக அன்னா தன்னையே கடவுளுக்கு அர்ப்பணம் செய்கின்றார். இளவல் இயேசுவைத் தேடுவதன் வழியாக அவருடைய பெற்றோர் தங்களையே தேடத் தொடங்குகின்றனர். தாங்கள் யாரென்றும், தங்களுடைய பணி என்ன என்பதையும் தெளிவுறக் கற்றுக்கொள்கின்றனர்.

இறைவனில் உறையும் குடும்பங்களாக நம் குடும்பங்கள் இருந்தால், நம் குடும்பங்கள் திருக்குடும்பங்களே! அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும் குணம், சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல், மரியாளின் ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும் நம் குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக. இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவர்களே நம் ஒவ்வொருவரின் வேர்கள். இவர்களின் வேர்கள் இறைமையில் குடியிருக்கின்றன. இவர்கள் வழியாகவே நாம் 'ஆண்டவரின் இல்லத்தில் குடியிருக்கின்றோம்' (காண். திபா 84).

1 comment:

  1. திருக்குடும்பத் திருவிழாவிற்கான மறையுரை!திருஅவையின் “இணைந்து பயணித்தல்” அதன் அலகான குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது எனும் அழகான உண்மையை உரக்கச்சொல்லும் “ஆயர்கள் மாமன்றம்.” ஆண்மகன் ஒருவனைப்பெற்றுள்ளேன் என்று சொன்ன மனித குடும்பம் கடந்து வந்த பாதை குடும்பத்தைப் பற்றிச் சொல்வது சுகமென்றா? இல்லை சுமையென்றா? பதில் தேடும் கேள்வி.” இறைவனில் உறையும் குடும்பமே திருக்குடும்பம்” என்று சொல்ல வருகின்றன இன்றைய வாசகங்கள்.
    தான் தவமிருந்து பெற்ற ஆண்மகனை ஆண்டவருக்கே எந்த எதிர்பார்ப்புமின்றி அர்ப்பணிக்கும் “:எல்கானா- அன்னா”… இறைவனில் உறையும் குடும்பம் என்பது சந்தேகத்திற்கப்பாற்பட்ட செய்தி எனக்கூறும் முதல் வாசகம்…..
    கடவுளின் மக்கள் என நினைக்கப்பட வேண்டிய குடும்பத்தில் “ நம்பிக்கை” எனும் கணவனும்,” அன்பு” எனும் மனைவியும் சேர்ந்து படைப்பது “கடவுளின் மக்கள்”. இவர்கள் கடவுளை அன்பு செய்தலினாலும்,கட்டளைகளைக் கடைபிடிப்பதாலும் கடவுளின் அன்புக்குப் பதிலன்பு செய்ய முடியும் எனக்கூறும் இரண்டாம் வாசகம்….
    எருசலேமில் இயேசு தன் பெற்றோரை விட்டுப் பிரியும் நிகழ்வில் “தன் பயன்ற்ற நிலையை உண்ர்ந்தார் யோசேப்பு” என்கிறார் திருத்தந்தை. அன்னை மரியாளும் சேர்ந்து தானே அந்தத் துயரத்தை அனுபவித்திருக்க வேண்டும்? தன் தந்தையின் வேலை என்னவென்று தெளிவாகத்தெரியாத இயேசுவின் பெற்றோர்கள் அவரை அவர் போக்கிலேயே விட்டது பெரிய அர்ப்பணிப்பு என்று கூறும் நற்செய்தி.
    சாதாரண குடும்பங்கள் இறைவனின் குடும்பமென மாற சில வழிமுறைகளை முன் வைக்கிறார் தந்தை.
    தங்கள் குழந்தைகள் தங்கள் வழியாக வந்தாலும்,அவர்கள் தங்களுக்குரியவரல்லவர் எனும் மெய்யறிவைப் பெறுவது…
    தங்கள் குடும்பத்தைத் தனியொரு குடும்பத்தைப்பாராமல் மற்ற குடும்பங்களையும் தங்கள் குடும்பத்தின் நீட்சியாகப்பார்ப்பதும்…..
    அர்ப்பணித்தல் மட்டுமின்றி இயேசுவில் தங்களையும்,தங்கள் பணி யாதென்று தேடுவதும்….தான் அவை.
    இறைவன் உறையும் குடும்பங்களாக இருக்கும் குடும்பங்களே திருக்குடும்பங்கள் என உணரச்செய்யும் தந்தைக்கு நன்றிகள்! இந்நேரத்தில் இறைமையில் குடியிருக்கும் நம் வேர்களான முன்னோர்களை நினைவு கொள்ள, இவர்கள் வழியாகவே “நாம் ஆண்டவரின் இல்லத்தில் குடியிருக்கிறோம்” என்னும் விஷயங்களை நம்மில் விதைத்த தந்தைக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete