Sunday, December 5, 2021

புதுமையானவை

நாளின் (6 டிசம்பர் 2021) நல்வாக்கு

புதுமையானவை

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் நடத்தவிருந்து புதுமையானவற்றை அவர்கள்முன் பட்டியலிடுகின்றார் இறைவாக்கினர் எசாயா. ஆண்டவர் நடத்தும் புதுமையானவை மூன்று: (அ) பாலைநிலத்தில் ஏற்படும் மாற்றம். (ஆ) மனிதர்களில் ஏற்படும் மாற்றம். (இ) நாட்டில் ஏற்படும் மாற்றும். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டுச் சென்ற போது, அவர்களுடைய விவசாய நிலம், செழுமையான திராட்சைத் தோட்டங்கள், வளமையான ஒலிவத் தோட்டங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. அல்லது மக்கள் கொல்லப்பட்டதால் அவை கேட்பாரின்றிக் கிடந்து காலப் போக்கில் அழிந்து போயின. வளம் கொழிக்கும் நிலம் பாலைநிலம் போல மாறிவிட்டது. இரண்டாவதாக, அடிமைகளாக அழைத்துச் சென்றவர்கள் மற்றும் அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களைக் கண்டவர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளில் அழிக்க முடியாத அச்சம் படிந்துவிடுகிறது. உள்ளத்தில் அச்சமும், கவலையும் எழுந்தால் நம்மை அறியாமலேயே உடலும் வலுவிழந்துவிடுகிறது. கைகளும் கால்களும் தளர்ந்துவிடுகின்றன. வயது ஆக, ஆக, நமக்குக் கைகால் தளர்ச்சி வருவதற்குக் காரணமும் இதுதான். ஆண்டுகள் கூடக்கூட அச்சங்களும் கவலைகளும் கூடிக்கொண்டே இருக்கின்றன நமக்கு. மூன்றாவதாக, நாட்டில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகளில் புதர்மண்டிப் போகின்றன. வழியறிந்தவர்களும் வழிமறந்து இங்குமங்கும் அலைகின்றனர். மேலும், ஊர்கள் எந்தவொரு இணைப்பும் இல்லாமல் பிரிந்து கிடக்கின்றன. இந்தப் பின்புலத்தில், ஆண்டவராகிய கடவுள் ஒரு தலைகீழ் மாற்றத்தை முன்மொழிகின்றார். பாலைநிலம் மீண்டும் வளம்நிறை விவசாய நிலமாகவும், மனிதர்கள் திடம் பெற்றவர்களாகவும், நாடு மீண்டும் புதிய வழி என்னும் இணைப்பையும் பெறுகின்றது(ன). 

இந்தச் செயல் முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது. ஏனெனில், 'கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்' என மொழிகிறார் எசாயா.

நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவரை அவருடைய நண்பர்கள் நால்வர் தூக்கி வந்து, இயேசு நின்றுகொண்டிருந்த வீட்டின் கூரையைப் பிரித்து அவர்முன் இறக்குகின்றனர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு இயேசு அவருக்கு நலம் தருகின்றார். முடக்குவாதத்தை நேரிடையாகக் குணமாக்காமல், 'உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார் இயேசு. பாவமே நோய்க்குக் காரணம் என்பது அன்றைய புரிதலாக இருந்தது. இயேசுவின் இவ்வார்த்தைகள் அங்கே கூடியிருந்தவர்கள் நடுவே சலசலப்பை உருவாக்குகின்றன. 'கடவுளைத் தவிர வேறு யாரால் பாவத்தைக் களைய முடியும்?' என்று முணுமுணுக்கின்றனர். ஆனால், முடக்குவாதமுற்றவர் நடக்கிறார். இதைக் காண்கின்ற மக்கள் மெய்மறந்தவர்களாய்க் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர்: 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்கள் கண்ட புதுமையானவை எவை? (அ) ஊரில் உள்ள நால்வர் துணிச்சலோடு கட்டிலைத் தூக்கி வருகின்றனர், (ஆ) கட்டிலில் வந்தவர் கட்டிலைத் தூக்கிக் கொண்டு நடக்கிறார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, (இ) இயேசுவின் எதிரிகள் செய்வதறியாது நிற்கின்றனர். 

முதலில் மனிதர்கள் நால்வரின் முன்னெடுப்பாகவும், பின்னர் இயேசுவின் செயல்பாடாகவும் அமைகிறது இந்த நிகழ்வு.

நம் வாழ்வில் இறைவன் புதுமையானவற்றை அன்றாடம் நிகழ்த்துகின்றார்.

இன்று நாம் புனித நிக்கோலாவின் ('நிக்காவோ' என்றால் 'நான் வெல்வேன்' என்பது பொருள்) திருநாளைக் கொண்டாடுகின்றோம். கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நாம் நினைத்து மகிழும் 'சாந்த்தா க்ளாஸ்' ('கிறிஸ்துமஸ் தாத்தா') இவர்தான். தேவையிலிருப்பவர்களின் இல்லம் தேடி அவர்களுக்குரியதை அவர்கள் அறியாமல் கொடுத்துவிட்டு வருபவர். வியப்புகளையும் புதுமையானவற்றையும் அளித்த மனிதர். இன்று நாம் இவரை வெறும் அலங்காரப் பொருளாக மட்டும் வைக்காமல், இவர் செய்தது போல ஏதாவது செய்ய முயன்றால் நலம்.


2 comments:

  1. இஸ்ரேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது அவர்களுக்கு நேர்ந்த அவலங்களைப் பட்டியலிடுகிறார் தந்தை.அதில் என்னைத்தொட்ட ஒன்று. வயது கூடக்கூட அச்சமும்,கவலையும் கூடுவதால் உடல் வலுவிழந்து கைகால் தளர்ச்சி வந்து விடுகிறது. என் வயதில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடிய விஷயமே! புதிய வழி முன்னெடுக்க கடவுளே வந்து விடுவிக்க வேண்டும். உண்மைதான்!
    நற்செய்தியின் கூற்றுப்படி புதுமையானவற்றைக்காணவும்…பாவங்கள் மன்னிக்கப்படவும் நம்மவரின் முன்னெடுப்பு இருந்தால் மட்டுமே இயேசுவின் செயல்பாடும் அங்கே வேலை செய்யும் என்று புரிகிறது.
    “ சாந்த்தா க்ளாஸ்”…. அனைவருக்கும் பிடித்த கிறிஸ்துமஸ் தாத்தா! ஏன்…யாருக்கு என்று தெரியாமலே கொடுப்பவர். இவர் பின்னனி தெரியாமல் இவரை ஒரு ‘ கோமாளி’ என்று நினைப்பவர்களே அதிகம்! நாமும் இவரைப்பின்பற்றி நம் பண்டிகைக் காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்! தந்தைக்கு நன்றிகள்!!!

    நாள்( டிசம்பர் 6) தன் பிறந்த நாள் காணும் தந்தைக்கு வாசகர் அனைவரின் பேராலும் வாழ்த்துக்கள்! இறைவன் அவரின் கரங்களின் காரியங்களை ஆசீர்வதித்து, நல்ல உடல்,உள்ள உறுதி தந்து தன் கண்களின் கருவிழியாகக் காத்திடவும்…ஆன்மாக்களை இறைவன் பணியில் அழைத்துச்செல்வதில் பல உயரங்களைத் தொடவும் வாழ்த்துகிறேன்! வேண்டுகிறேன்!!. அன்புடன்!!!

    ReplyDelete
  2. இதயம் நிறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தந்தையே.அன்புடனும், செபங்களுடனும்.

    ReplyDelete