Sunday, December 19, 2021

தாவீதின் திறவுகோலே வாரும்!


கிறிஸ்து பிறப்பு நவநாள் - 4 (20 டிசம்பர் 2021)

தாவீதின் திறவுகோலே வாரும்!

நம் கிறிஸ்து பெருமானை இன்று நாம், 'தாவீதின் திறவுகோலே!' என அழைக்கின்றோம். இதன் பின்புலத்தில் இரு விவிலிய வாக்கியங்கள் இருக்கின்றன:

'அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான். எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான். எவனும் திறக்க மாட்டான்.' (எசாயா 22:22)

'தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்துவிடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும் கூறுவது இதுவே.' (திவெ 3:7)

எசாயா இறைவாக்கினர் வரப்போகும் அரசர் பற்றி முன்னுரைத்ததை, யோவான், இயேசுவில் நிறைவேறியதாக எழுதுகின்றார். இயேசுவே தாவீதின் திறவுகோல். திறவுகோல் என்பது அதிகாரம் அல்லது உரிமையின் அடையாளம். எடுத்துக்காட்டாக, வீட்டு உரிமையாளர் வீட்டின் கதவுகளைத் திறவுகோல் கொண்டு திறக்கின்றார். ஆனால், திருடரோ கதவுகளை உடைத்து உள்ளே செல்கின்றார். ஒருவரிடம் இல்லத்தின் பொறுப்பை நாம் ஒப்படைக்கும்போது, அவரிடம் திறவுகோலைக் கொடுக்கின்றறோம். திறவுகோலைக் கொண்டிருப்பதால் அவர் அவ்வில்லத்திற்குள் நுழையும் ஆற்றல் பெற்றவராக இருக்கின்றார். 'திறவுகோல்' என்பது மூன்று விடயங்களைக் குறிக்கிறது: (அ) நகரத்தின் திறவுகோல். அதாவது, ஓர் அரசன் ஒட்டுமொத்த நகரத்தின்மேல் அதிகாரம் கொண்டிருக்கிறார். அவருடைய அனுமதியின்றி, யாரும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் இயலாது. (ஆ) கருவூலத்தின் திறவுகோல். ஒரு நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்கின்ற கருவூலத்தின் திறவுகோல் அரசரிடமே இருக்கின்றது. (இ) ஆலயத்தின் திறவுகோல். எருசலேமில் ஒரு கதவு மூடப்பட்டே இருக்கும். அதாவது, அந்தக் கதவை மெசியாவால் மட்டுமே திறக்க முடியும் என்பது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை. மெசியா மட்டுமே அந்தக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியும்.

ஆக, இன்றைய நாளில் நாம் கிறிஸ்து பெருமானை, 'திறவுகோலே' என அழைத்து, அவர் நம்மேல் உரிமையும் அதிகாரமும் கொண்டவர் என்பதை அறிக்கையிடுகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 7:10-14), ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக ஆகாசு அரசருக்கு ஓர் அடையாளம் வழங்குகின்றார். எதிரிகளுடன் கைகோர்ப்பதா, அல்லது ஆண்டவரைப் பற்றிக்கொள்வதா என்று முடிவெடுக்க இயலாமல் அல்லாடிக் கொண்டிருந்த ஆகாசுக்கு, 'இம்மானுவேல்' அடையாளத்தை வழங்குகின்றார் கடவுள். அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற செய்தியை அந்த அடையாளம் தாங்கியுள்ளது. இது வாக்குறுதியின் அடையாளமாக இருக்கிறது.

குழப்பத்திலிருந்து ஆகாசு அரசரைத் தெளிவுக்கு நடத்திச் செல்கிறது ஆண்டவரின் திறவுகோல்.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:26-38), கிறிஸ்து பெருமானின் பிறப்பு மரியாவுக்கு முன்னறிவிக்கப்படுகின்றது. 'இது எங்ஙனம் ஆகும்?' என்ற மரியாவின் கேள்விக்கு, 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று பதிலுரைக்கின்றார் வானதூதர். மரியாவின் தெரிவு முதல் அனைத்தையும் வழிநடத்துபவர் கடவுளே. 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அடிமை நிலைக்குத் தாழ்த்திய மரியா, தன் தாழ்ச்சியின் வழியாகவே தாவீதின் திறவுகோலின் தாயாக மாறுகின்றார்.

வாழ்வின் குழப்பங்கள் மற்றும் தெளிவின்மைக்கு இறைவன் திடீரென தீர்வைக் கொண்டு வருகின்றார். நம் வலுவற்ற நிலையில் நம்மைத் தெரிவு செய்து, அருளை நம்மேல் அள்ளிப் பொழிகின்றார். வாழ்வின் வழியைக் காட்டும் அவரே, வாழ்வின் கதவுகளை நமக்குத் திறந்துவிடுவாராக!

'தாவீதின் திறவுகோலே வாரும்!'

1 comment:

  1. தந்தையின் ஆரம்பவரிகள் நான் சிறுபிள்ளையாக….குடும்த்தினரோடு அமர்ந்து…பக்தியும்,இராகமும் சேர்ந்த கலவையாக உதிர்த்த இந்த செபங்களை ஞாபத்திற்குக் கொணர்கின்றன. ஆம்! ஒரு திறவுகோலைக் கைகளில் வைத்திருக்கும் ஒருவர் ஏதோ ஒரு அதிகாரத்திற்கோ, வீடு,கோவில்,கருவூலம் போன்ற உடமைகளுக்கோ அதிகாரியாகக் கருதப்படுகிறார்.”நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” எனத்தன்னை அடிமை நிலைக்குத் தாழ்த்திய மரியாவும் கூட தாவீதின் திறவுகோலான இயேசுவின் தாயாக உயர்த்தப்படுகிறார்.
    குழப்பத்திலிருந்த ஆகாசு அரசனை தெளிவிற்கு நடத்திச்சென்ற ஆண்டவரின் திறவுகோல், நம் வாழ்வின் குழப்பங்களிலும்…தெளிவற்ற சூழல்களிலும் நம் வாழ்வின் வழிகாட்டவும்…வாழ்வின் கதவுகளைத் திறந்து விடவும் துணைவருவாராக! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete