Monday, December 13, 2021

சொல்லும் செயலும்

நாளின் (14 டிசம்பர் 2021) நல்வாக்கு

சொல்லும் செயலும்

ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறைவதில்தான் மனித வாழ்க்கையின் முதிர்ச்சி இருக்கிறது என்பதை நான் சில மாதங்களாக உணர்கிறேன். சிறிய வயதில், இளவலாக இருக்கும்போது நாம் நிறைய பேசுகிறோம். நாம் பேசுபவை பல நேரங்களில் சொற்களாக நின்றுவிடுகின்றன. ஆண்டுகள் கடக்கக் கடக்க, நேரம் குறைவாக இருக்கிறது என்ற நிலையோ என்னவோ, நம்மை அறியாமலேயே நாம் சொற்களைக் குறைக்கிறோம். அல்லது நிறுத்திக் கொள்கிறோம். செயல்களை அதிகரிக்கிறோம். ஏனெனில், நம் செயல்களே நம் சொற்கள் என்பதை அறியும் முதிர்ச்சி வரத் தொடங்குகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் எருசலேமை நோக்கிப் புலம்புகின்றார். அவரின் சொற்கள் திடீரென நிற்க, இரக்கச் செயல்கள் பிறக்கத் தொடங்குகின்றன. ஆண்டவருடைய சொற்கள் கண்டிப்பானவையாக இருக்கின்றன. அவர் இஸ்ரயேல் மக்களைத் தண்டிக்கின்றார். ஆனால், அவர் அவர்களுக்காக ஆற்றும் இரக்கச் செயல்கள் வியப்புக்குரியவையாக இருக்கின்றன.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து ஓர் உவமை கூறுகின்றார். இரு மகன்கள் உவமையில், மூத்தவர் தந்தையின் சொல் கேட்டு திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குப் போக விருப்பம் இல்லை. ஆனால், சற்று நேரம் கழித்து போகின்றார். ஆனால், இளையவர், 'இதோ! செல்கின்றேன்!' என்று வார்த்தையால் சொல்கிறார். ஆனால், செல்லவில்லை. மூத்தவரிடம் சொல் இல்லை, ஆனால் செயல் இருக்கிறது. இளையவரிடம் சொல் இருக்கிறது, செயல் இல்லை. இரண்டுமே ஏற்புடையது அல்ல. ஏனெனில், முதலாமவர் தன் சொல்லால் பொய் சொல்கின்றார், அல்லது தன்னை மறுக்கின்றார். இரண்டாமாவர், செயலால் பொய் சொல்கின்றார், அல்லது தன்னை மறுக்கின்றார்.

இந்த உவமையை முன்னும் பின்னும் நீட்டிக்கொண்டு, இதை இயேசு பிறப்பு கதையாடல்களில் வரும் கதைமாந்தர்களுக்குப் பொருத்திப் பார்ப்போம்:

(1) சொல் இல்லை, செயல் இல்லை

சிலர் இயேசுவை சொல்லாலும் ஏற்றுக்கொள்ளவில்லை, செயலாலும் அவரை அழிக்க முயன்றனர். பெரிய ஏரோது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கீழ்த்திசை ஞானியர் அவரைத் தேடி வந்தபோது (காண். மத் 2), பெத்லகேமில் அரசர் பிறப்பார் என்று மறைநூல் அறிஞர்கள் எடுத்துச் சொன்னாலும், 'அவரே அரசர்' என்று சொல்லால் ஏற்றுக்கொள்ளாததோடு, குழந்தையை அழிக்கவும் துணிகின்றார் ஏரோது.

(2) சொல் உண்டு, செயல் இல்லை

பெரிய ஏரோதுவின் அரண்மனையில் இருந்த மறைநூல் அறிஞர்கள் மெசியா எங்கே பிறப்பார் என்பதை அறிந்திருந்தனர். அதை அரசருக்கும் எடுத்துச் சொல்லினர். ஆனால், அவர்களோ மெசியாவைத் தேடிச் செல்லவில்லை. எருசலேமில் வாழ்ந்தோர் புதிய நட்சத்திரத்தைக் கண்டனர். ஆனால், அதைப் பின்தொடர மெனக்கெடவில்லை. இவ்வாறாக, இவர்களிடம் சொல் இருந்தது. ஆனால். செயல் இல்லை.

(3) சொல் இல்லை, செயல் இருந்தது

வானதூதர்கள் இடையர்களுக்கு மெசியாவின் பிறப்புச் செய்தியை அறிவித்தபோது, இடையர்கள் எந்தவொரு பதில்வார்த்தையும் பேசவில்லை. ஆனால், உடனடியாக பெத்லகேமுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். குழந்தையைக் காண்கின்றனர். குழந்தையைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கின்றனர்.

(4) சொல் உண்டு, செயல் உண்டு

மரியா, யோசேப்பு ஆகியோர் இறைத்திருவுளத்திற்கு 'ஆம்' என்றனர் – மரியா வார்த்தையாகவும், யோசேப்பு மௌனமாகவும். மேலும், இறைத்திருவுளத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டனர். அவர்களிடம் எந்தவொரு முரண்பாடும் இல்லை.

சொல், 'ஆம்' என இருந்து, செயல், 'இல்லை' என இருந்தால் என்ன பயன்? அது போல, சொல், 'இல்லை' என இருந்து, செயல், 'ஆம்' என இருந்தும் என்ன பயன்?

சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண் களைவதே மெசியாவைக் காணப் புறப்படுவதற்கான தயார்நிலை. ஏனெனில், அவர் ஒரே நேரத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் சொல்வதில்லை. 


1 comment:

  1. நம் அன்றாட வாழ்வில் எளிதாக பின்பற்றக்கூடிய…. ஆனால் பின்பற்றத் தயங்கும் அழகான ஒரு விஷயம் பற்றிப்பேசுகிறது இன்றையப்பதிவு.அன்றாடம் வாழ்வில் நாம் சிலரை வாய்ச்சொல்லின் வீரராகவும்,இன்னும் சிலரை செயல் வீரராகவும் பார்க்கமுடிகிறது. ஆனால் சொல்லும்,செயலும் இணைந்த நிலையே ஒரு மனிதனை மாமனிதனாக்குவது என்ற புரிதலைப் பெறுவதற்குள் காலங்கள் பல புரண்டோடி விடுகின்றன. விவிலியத்தின் ஏரோது, மறைநூல் அறிஞர்கள் மற்றும் இடையர்கள் இவர்களில் ஏதோ ஒன்று மட்டுமே இருந்ததால் அவர்களில் முழுமையில்லை. ஆனால் தெய்வ சித்தம் ஒன்றையே தங்களின் வாழ்வாகக் கொண்ட மரியாவும்,யோசேப்பும் வார்த்தையிலும்,வாழ்க்கையிலும் இறைத்திருவுளத்தை ஏற்று நடந்தனர். முரண்பாடற்ற வாழ்க்கை.சொல்லுக்கும்,செயலுக்கும் முரண் களைவதே மெசியாவைக்காண்பதற்கான தயார் நிலை எனில், அந்த நிலைக்கு நம் வாழ்க்கையை வாழப்பழகுவோம்.சொல்லே செயலாகவும்…செயலே சொல்லாகவும்…..சொல்லும்,செயலும் இணைந்த ஒரு சுப- இராகமான வாழ்க்கை வாழ வழி சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete