நாளின் (16 டிசம்பர் 2021) நல்வாக்கு
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான நவநாளை இன்று நாம் தொடங்குகின்றோம். இந்த ஒன்பது நாள்களிலும் ஒவ்வொரு கதைமாந்தர் வழியாக திருஅவை நம்மைக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா மகிழ்ச்சிக்குக் கொண்டாடுகிறது. கதைமாந்தர்களில் முதன்மையாக இருப்பவர் திருமுழுக்கு யோவான்.
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை அனுப்பி இயேசுவே வரவிருப்பவரா எனக் கேட்கச் செய்கின்றார். அதன் தொடர்ச்சியாக, சீடர்கள் சென்றவுடன், இயேசு திருமுழுக்கு யோவானைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றார்.யோவானை மூன்று அடைமொழிகளால் வாழ்த்துகின்றார் இயேசு: (அ) 'இறைவாக்கினரை விட மேலானவர்' – ஏனெனில், மற்ற இறைவாக்கினர்கள் மீட்பரையும் மெசியாவையும் எதிர்நோக்கியிருந்தனர். திருமுழுக்கு யோவானோ மீட்பரையும் மெசியாவையும் கண்டது மட்டுமல்லாமல், அவருக்குச் சான்றும் பகர்ந்து, அவருக்கு திருமுழுக்கும் அளிக்கின்றார். (ஆ) 'தூதர்' – அறிவித்தலும் ஆயத்தம் செய்தலும் தூதரின் பணிகள். தூதருடைய பணி விரைவில் முடிந்துவிடுகிறது. தூது முக்கியமே தவிர தூதர் முக்கியமில்லை என்பதால், வெகு எளிதாக மறக்கப்படக் கூடியவர் அவர். இருந்தாலும், தூதர் தன் பணியைச் செய்தால்தான் வேலை நிறைவு பெறும். (இ) 'மனிதர்கள் அனைவரையும் விடப் பெரியவர்' – ஏனெனில், இவர் தன்னையே சிறியவராக்கிக் கொண்டார். தான் மெசியா அல்ல என்று அறிவித்தார். மெசியாவைச் சுட்டிக்காட்டும் விரல் என்றும், மணமகனுக்கு அருகில் நின்று அவருடைய குரலைக் கேட்டு அதில் மகிழும் தோழன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
மொத்தத்தில், வாழ்க்கையின் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடமும் இனிய இடம் என்று நமக்குக் கற்றுத் தருபவர் இவர். தன் வரையறையை அறிந்தவராகவும், தன் வரையறைக்குள் தன்னை நிறுத்திக்கொள்பவராகவும் இருக்கிறார் திருமுழுக்கு யோவான். இதுவே இன்று நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்.
முதல் வாசகத்தில், 'நொடிப் பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன். ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்' என்று தான் தள்ளிவிட்ட இஸ்ரயேலைத் தழுவிக் கொள்கின்றார் ஆண்டவர். கணவன்-மனைவி உருவகத்தின் வழியாகப் பேசும் ஆண்டவர், இஸ்ரயேலின் பிரமாணிக்கமின்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவராகவும், அதே நேரத்தில் இஸ்ரயேலின்மீது இரக்கம் காட்டுபவராகவும் இருக்கின்றார். 'மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன் மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது!' என்கிறார் ஆண்டவர். அப்படி என்றால், அவர் ஏன் அவர்களைத் தண்டித்தார்? என்னும் இறையியல் கேள்வி நம்மில் இங்கு எழவே செய்கின்றது.
திருப்பாடல் ஆசிரியர் (30), ஆண்டவரின் இரக்கப் பெருக்கத்தை உணர்ந்தவராக, 'அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும். அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும். மாலையில் அழுகை. காலையில் ஆர்ப்பரிப்பு' என்று பாடுகின்றார்.
'ஆண்டவரின் இரக்கம்' என்பதே 'யோ-ஹன்னான்' என்னும் திருமுழுக்கு யோவானின் பெயர்.
திருமுழுக்கு யோவான் இறைவனின் இரக்கத்தை முன்னறிவிக்கின்றார். இதையே சக்கரியா, 'இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' (லூக் 1:78-79) என்று பாடுகின்றார்.
ஒவ்வொரு வரியும் அடுத்த வரியை தூக்கி சாப்பிடுவது போல் உள்ள ஒரு பதிவு. வரிக்கு வரி வெளிப்படும் இறைவனின் “பேரிரக்கம்” நம் புருவங்களைத் தூக்க வைக்கின்றன . கிறிஸ்து பிறப்பின் வருகையைக் கைக்கெட்டும் தூரத்தில் பார்க்கும் நமக்கு இயேசுவின், திருமுழுக்கு யோவான் பற்றிய “ இறைவாக்கினரை விட மேலானவர்; தூதர்; மனிதர்கள்அனைவரையும் விடப்பெரியவர்” போன்ற பாராட்டுரைகள் இவர்கள் இருவரும் தங்களை நினைத்ததை விட அடுத்தவரையே தூக்கி நிறுத்தினர் என்று புரிய வைக்கின்றன.முதல் வாசகத்தின் “ நொடிப்பொழுதே நான் உன்னை……..மீண்டும் ஏற்றுக்கொள்வேன்” மற்றும் “மலைகள் நிலை சாயினும்….. பேரன்போ நிலை சாயாது” போன்ற வரிகள் நாம் நிலைகுலைந்து போகும் நேரங்களில் “ சாய்ந்து கொள்ள நமக்கு ஒரு தோள் இருக்கிறது” என்பதை நினைவூட்டுகின்றன. திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளுக்கு இன்னும் உறுதி சேர்க்கும் சக்கரியாவின் “ கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து நம்மைத் தேடி வரும் விடியலை நமதாக்கிக் கொள்வோம்” எனும் வரிகள் “ இரக்கம்” அதுவே “ இறைமை” என்று நமக்குச் சொல்கின்றன.
ReplyDeleteவரிக்கு வரி இறைவனின் பேரிரக்கத்தை சுவைக்க வைத்த வரிகளுக்காகத் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!