அன்னா
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண் ஒருவர் (சிமியோன்) குழந்தை இயேசுவைத் தன் கைகளில் ஏந்தினார். அதன் இணையாக இன்றைய நற்செய்தியில் பெண் ஒருவர் (அன்னா) குழந்தை இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் அறிவிக்கின்றார்.
ஆசேர் குலம் செழுமையான குலம் (காண். தொநூ 49:20, இச 33:24). இந்தக் குலத்திலிருந்து வந்தவர் அன்னா. செழுமை இழந்து காணப்படுகின்றார் இவர். மணமாகி ஏழு ஆண்டுகள் (நிறைவைக் குறிக்கும் எண்) கணவரோடு வாழ்கின்றார். இவருக்கு வயது எண்பத்து நான்கு (ஏழு முறை பன்னிரண்டு – நிறைவிலும் நிறைவு).
வாழ்வின் பயணம் மாறுகிறது இவருக்கு.
மணவாழ்க்கை என்ற இருந்த இவருடைய பயணம் கணவருடைய இறப்புக்குப் பின்னர் கடவுளுடைய ஆலயத்தில் வாழ்க்கை என்று மாறுகிறது இவருக்கு. வாழ்வின் பயணம் மாறினாலும் இனிமையாகப் பயணம் செய்கின்றார் அன்னா.
இவரைப் பற்றி லூக்கா இப்படிப் பதிவு செய்கின்றார்: (அ) 'கோவிலை விட்டு நீங்கவில்லை' - இறைவனையே தன் இல்லிடமாகக் கொண்டார். (ஆ) 'நோன்பிருந்து மன்றாடுகின்றார்' – உடல்சார்ந்த அனைத்துத் தேவைகளையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. (இ) 'அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார்' – தன் வாழ்க்கையை மற்றவர்களை நோக்கித் திருப்புகின்றார்.
வாழ்வில் இழப்புகளை நாம் சந்திக்கும்போது, பல நேரங்களில் நம் உள்ளம் மற்றவர்களுக்கான கதவை மூடிக்கொள்ளவே நம்மைத் தூண்டுகின்றது. ஆனால், கதவுகள் மூடப்பட்டால் இழப்பின் சோகம் அதிகமாகிறது. கதவுகள் திறந்து நாம் மற்றவர்களை நோக்கத் தொடங்கினால், வாழ்க்கை ரம்மியமாக மாறுகிறது.
அன்னா எல்லாரிடமும் குழந்தையைப் பற்றிப் பேசுகின்றார்.
தன் மகிழ்ச்சியை அவர் தன்னகத்தே வைத்துக்கொள்ளவில்லை.
வயது, தன் மணவாழ்க்கை நிலை என எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை.
ஒருவர் மற்றவரிடம் நாம் நிறைவை மட்டும் கண்டாலே, அந்த நிறைவை மட்டும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னாலே வாழ்க்கை இனிமையாகும்.
அன்னா பாட்டியைப் பற்றி ஊரார் எப்படிப் பேசினாலும், அவர் என்னவோ அனைவரையும் பற்றி நன்மையானவற்றையே பேசினார். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ளதைத்தானே மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்!
அன்னா! கணவனை இழந்து வாழ்வின் பயணம் மாறினாலும்,மாற்று வாழ்க்கையிலும் இனிமையைக் கண்ட பெண்மணி.’இயேசு’ எனும் குழந்தையில் தான் கண்ட மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்திற்குச் சொந்தக்காரர்.வாழ்க்கையின் சோகம் நம்மை அப்பிக்கொள்ளும் நேரங்களில் இறைவனையும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நோக்கி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது ஒன்றே நம் சோகத்தில் நமக்கு சுகம் தரும் எனும் பாடத்தைக் கற்றுத்தருகிறார்.வாழ்க்கையின் சோகங்கள் நம்மைப் புரட்டிப்போட்டாலும், நமக்கு நேசம் காட்டிய இனியவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம் கண்களை எல்லா திசைகளிலும் சுழல விடுவோம்; நம் மனத்தை அன்பால் நிரப்புவோம்; அதை இனம்,நிறம் பாராமல் அனைவருக்கும் அள்ளி வழங்குவோம். சிமியோனுக்கு நிகராக குழந்தை இயேசுவைக் காணும் பேறுபெற்ற அன்னா நம் வாழ்க்கையின் கருமையான நேரங்களில் நமக்கு செழுமை தரட்டும். சோகத்தை சுகமாக்கித் தந்துள்ள ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteAmen
ReplyDelete