கிறிஸ்து பிறப்பு நவநாள் - 6 (22 டிசம்பர் 2021)'நாடுகளின் அரசரே, வாரும்!'
இயேசு தன் பிறப்பின் போதும், பணித் தொடக்கத்திலும், தன் வாழ்வின் இறுதியிலும், 'யூதர்களின் அரசர்' என்று அழைக்கப்படுகின்றார்: அவர் பிறந்த போது அவரைத் தேடி வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டுத் தேடி வருகின்றனர் (காண். மத் 2:2). பிலிப்பு இயேசுவிடம் நத்தனியேலை அழைத்து வருகின்றார். இயேசுவைக் கண்ட நத்தனியேல், 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' (யோவா 1:49). இயேசுவின் இறப்பின் போது, அவருடைய சிலுவையில், 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்னும் குற்ற அறிக்கை வைக்கப்படுகிறது (யோவா 19:19). மத்தேயு நற்செய்தியின் நிறைவுகாலப் பொழிவில், மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக இயேசு தன்னை உருவகப்படுத்துகின்றார் (காண். மத் 25:31-46). ஆக, யூதர்களின் அரசராகவும், ஒட்டுமொத்த அனைத்து நாடுகளின் அரசராகவும் இயேசுவை நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 1:24-28), சாமுவேல் பால்குடி மறந்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு சீலோவிலிருந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்கின்ற அன்னா, 'நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று சொல்லி ஆண்டவர்முன் அவரை ஒப்படைக்கின்றார். தான் கேட்டு வாங்கிப் பெற்ற மகனை ஆண்டவருக்கே அர்ப்பணிக்கின்றார். தனக்கெனக் கடவுள் கொடுத்த மகனை தனக்கு வேண்டாம் என்று சொல்லி கடவுளுக்குக் கொடுக்கின்றார் அன்னா. எப்ராயிம் மலைநாட்டிலுள்ள இராமாத்தயிம் சோப்பிம் என்னும் கிராமத்தில் அறியாக் குழந்தையாக மறைந்து போயிருக்கும் ஒரு குழந்தை, ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், இஸ்ரயேலில் அரசரை ஏற்படுத்திய இறைவாக்கினர் சாமுவேல் என்னும் பெயர் பெறுகிறது. சாமுவேல் 'தூக்கிச் செல்லப்பட்டார்' என்னும் சொல்லாடல், சாமுவேலின் மழலைப் பருவத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. சாமுவேல் என்னும் குழந்தையின் விருப்பம் கேட்டறியப்படவில்லை. அதனால்தான் என்னவோ, சாமுவேலின் மகன்கள் யோவேல் மற்றும் அபியா ஆகியோர் 'சாமுவேலின் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை' (1 சாமு 8:3).
தன் வாழ்வில் ஆண்டவர் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்திற்காக அவரைப் புகழ்ந்து பாடுகின்றார் அன்னா. ஆண்டவர் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றம் என்ன? (அ) மலடியாக இருந்தவர் நிறைவான குழந்தையைப் பெற்றெடுத்தார், (ஆ) தன் கையில் ஒன்றுமில்லை என்று ஏழையாக இருந்தவரை, என் கையில் உள்ளது அனைத்தும் உனக்கு என்று கடவுளுக்கே தானம் செய்யும் அளவுக்குச் செல்வராக்குகின்றார், (இ) கிராமத்து இளவல் சாமுவேல் அரசர்களோடு அரசர்களாக அமர்ந்து உண்ணும் நிலைக்கு உயர்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:4-56) அன்னை கன்னி மரியாவின் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க அன்னாவின் பாடலின் தழுவல் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வில், எலிசபெத்து மரியாவைப் புகழ, மரியாவோ தன் புகழ்ச்சியைக் கடவுளை நோக்கி ஏறெடுக்கின்றார். இது மரியாவின் மகிழ்ச்சியின் பாடலாக இருக்கின்றது. ஆண்டவராகிய கடவுள் மரியாவின் வாழ்விலும், இந்த உலகத்திலும் ஏற்படுத்துகின்ற தலைகீழ் மாற்றத்தை இப்பாடல் நம் கண்முன் கொண்டு வருகின்றது.
இன்றைய வாழ்த்தொலியான, 'நாடுகளின் அரசரே, வாரும்!' என்பதை இவ்வாசகங்களின் பின்புலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது?
'கடவுள் வல்லவர்' என்னும் கருத்துரு இரு பாடல்களிலும் உள்ளது. வல்லவரான கடவுள் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகின்றார். அனைத்தின்மேலும் அதிகாரம் கொண்ட கடவுளாக அவர் வீற்றிருக்கின்றார். அனைத்தையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுள்ள ஒருவரே அனைத்தையும் புரட்டிப் போட முடியும்.
'நாடுகளின் அரசரே, வாரும்!'
யேசு தன் பிறப்பின்போதும்,பணித்துவக்கத்திலும் ஞானிகள், அரசர்கள் போன்ற பலபேரால் ‘ அரசர்’ என அழைக்கப்படுகிறார். தன் வாழ்வின் இறுதிகாலத்தில் இயேசுவே தன்னை ஒரு அரசராக முன்மொழிகிறார்.
ReplyDeleteசாமுவேல் பற்றிக்கூறும் முதல் வாசகம்…தான் கேட்டுப்பெற்ற பிள்ளை சாமுவேலை இறைவனைக்கே அர்ப்பணிக்கிறார் அன்னா. அவர் வாழ்வில் தலைகீழ் மாற்றம். மலடியாக இருந்தவர் ஒரு ஆண்குழந்தைக்குத் தாயாகவும், வெறுங்கைகளோடிருந்தவளின் கைகள் இறைவனுக்குக் கொடுக்கும் அளவுக்கு செல்வந்தராகவும், கிராமத்து இளவல், அரசர்களோடு அமர்ந்து பேசும் நிலைக்கும் உயர்த்தப்படுவதும் இறைவன் அவருக்குத் தந்த தலைகீழ் மாறறம்.
நற்செய்தி வாசகம்… நல்லவர்கள் இருவர் ஒருவர் மற்றொருவரையும்.இறைவனையும் சேர்த்தே புகழும் பாராட்டு.அத்தனையும் புகழ்ச்சி மற்றும் நன்றியின் கீதங்கள்.
கடவுள் நல்லவர் மட்டுமல்ல; வல்லவரும் கூட. அதிகாரம் கொண்டவர்.அனைத்தையும் தலைகீழாகப் புரட்டுப்போட வல்லவர்.அதனாலேயே அவர் ‘நாடுகளின் அரசர்’ என அறியப்படுகிறார். தந்தையோடிணைந்து “ நாடுகளின் அரசரே!” என நாமும் சொல்வோம்.
தந்தைக்கு நன்றிகள்!!!