கிறிஸ்து பிறப்பு நவநாள் - 5 (21 டிசம்பர் 2021)விடியலே வாரும்!
இலத்தீன் மொழியில், 'ஓ ஓரியன்ஸ்' ('ஓ கிழக்கே!') என்பதை 'ஓ விடியலே' என மொழிபெயர்த்துக்கொள்வோம். 'விடியற்காலை விண்மீனே' என்றும் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படுகிறது. நாளின் விடியலை நமக்குச் சுட்டிக்காட்ட கிழக்கில் தோன்றும் விண்மீனை இது குறிக்கிறது. அதாவது, இரவும் இருளும் முடிந்துவிட்டன என்றும், புதிய நாளும், ஒளியும் வரவிருக்கின்றன என்பதையும் இந்த நட்சத்திரம் நமக்கு நினைவுபடுத்துகிறது. 'இருள்' என்பது இறப்புக்கு ஒப்பிடப்படுவதால், 'ஒளி' என்பது எதிர்ப்பதமாக வாழ்வைக் குறிக்கிறது. 'காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்' (எசா 9:2) மற்றும் எசா 60:1-2, மற்றும் மலா 4:2 ஆகிய அருள்வாக்கியங்கள் இந்த அழைப்பின் பின்புலத்தில் இருக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்திற்கு இரு பகுதிகள் தரப்பட்டுள்ளன. இனிமை மிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியில் (2:8-14), தலைவி மற்றும் தலைவனின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காதலின் மயக்கத்தில் இருக்கும் காதலி தன் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கிறாள். தலைவனின் வருகை தலைவிக்கு மகிழ்ச்சி. தலைவனின் எதிர்பாராத வருகை தலைவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தலைவி கூற்றாக இங்கே உள்ள பகுதி, தலைவனை எதிர்பார்த்து தலைவி பாடுவதாகவும், அதே வேளையில் தலைவன் இப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை நமக்குத் தரமாட்டானா என்ற ஆவலை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. தலைவரின் வருகையை கலைமானின் ஓட்டத்தோடு ஒப்பிடுகிறார் தலைவி. மேலும், கார்காலத்து மழைச்சாரல் பொழியும் நேரமும் தலைவனின்மேல் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கிறது. தலைவன் தன் தலைவியை வெண்புறாவுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார். கலைமானும், வெண்புறாவும் சந்திக்கும் நிகழ்வு இன்பமயமானதாக இருக்கும்.
இன்னொரு தெரிவாகக் கொடுக்கப்பட்டுள்ள செப்பனியா இறைவாக்குப் பகுதியில் (3:14-17), எருசலேம், 'மகளுக்கு' ஒப்பிடப்படுகின்றது. 'மகிழ்ச்சியால் ஆர்ப்பரி' என்று எருசலேமை உற்சாகப்படுத்துகின்றார் ஆசிரியர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:39-45), மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தரப்பட்டுள்ளது. இனிமைமிகு பாடல் வாசகத்தோடு இதை இணைத்துப் பார்த்தால், மரியாவின் வயிற்றில் இருக்கும் இயேசுவைத் தலைவன் என்றும், எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும் திருமுழுக்கு யோவானை தலைவி என்றும் உருவகித்து, மெசியாவின் வருகையை முன்னுரைக்கத் துடிக்கும் யோவானின் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.
தலைவனின் வருகை தலைவிக்கு விடியலாக இருக்கிறது! துன்பம் மறைந்து இன்பம் கிடைக்கிறது.
அரசரின் வருகை எருசலேமுக்கு விடியலாக இருக்கிறது! அடிமைத்தனம் மறைந்து அமைதி கிடைக்கிறது.
மரியாவின் வருகை எலிசபெத்துக்கு விடியலாக இருக்கிறது! எதிர்நோக்கு கனிந்து மகிழ்ச்சியாக மாறுகிறது.
இன்று நம் வாழ்வில் விடியல் தேவைப்படும் பகுதி எது? நம்மால் புரிந்துகொள்ள இயலாத வாழ்வியல் சூழல் எது? இருள்சூழ் பள்ளத்தாக்குப் பயணம் போல இன்று நம் வாழ்வில் நிகழ்வது என்ன?
'ஓ விடியலே வாரும்!' என்னும் புகழ்ச்சி, அவரை நோக்கிய இறைவேண்டலாக உயரட்டும். நம் வாழ்வின் விடியல் விரைவில் வரட்டும்!
“விடியற்காலத்து விண்மீன்”….. இதன் வரவு இருளை மறைத்து ஒளியை பரப்புவது மட்டுமின்றி, காரிருளில் வாழ்ந்த மக்களுக்குப் பேரொளியையும் அள்ளித் தருகிறது.
ReplyDeleteஇனிமை மிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம்…..கலைமானும்,வெண்புறாவும் தலைவன்- தலைவிக்கு நிகரெனில் நற்செய்தி வாசகத்தில் மரியாவின் வயிற்று இயேசுவைத் தலைவனாகவும்..எலிசபெத்தின் வயிற்று யோவானைத்தலைவியாகவும் உருவகித்துள்ள தந்தையின் கற்பனை அழகு!
தலைவனின் வருகை தலைவிக்கும், அரசரின் வருகை எருசலேமுக்கும், மரியாவின் வருகை எலிசபெத்துக்கும் விடியலாக இருக்கிறதெனில் என்னுள் ஒரு கேள்வி எழுகிறது. என் வருகை யாருக்கேனும் விடியலைத்தருகிறதா?! இல்லையெனில் நான் விடியலாக மாறி எனக்கடுத்தவரின் வாழ்க்கையிலுள்ள இருளை விரட்ட என்ன செய்ய வேண்டும்? யோசிக்கிறேன்!
‘ஓ விடியலே வாரும்!’ எனும் அவரை நோக்கிய புகழ்ச்சி, அவரை நோக்கிய இறைவேண்டலாகவும் இருக்கட்டும். வாழ்வில் ஒளியைத் தேடுவோரின் இருளகற்ற நாமும் ஒரு விடியலாக மாற வழிசொல்லும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!