Thursday, December 30, 2021

யாவரும் நிறைவாக

இன்றைய (31 டிசம்பர் 2021) நற்செய்தி (யோவா 1:1-18)

யாவரும் நிறைவாக

இன்று காலண்டர் ஆண்டின் இறுதி நாள். 

இன்றைய நற்செய்தியின் மூன்று கருத்துருக்கள் இந்த இறுதி நாளில் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

(அ) 'அவரிடம் வாழ்வு'

'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை.'

இந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வில் ஒளியும் இருளும் இணைந்து பயணித்திருக்கின்றன. பெருந்தொற்று, நிதிப் பிரச்சினை, அரசியல்தளத்தில் மாற்றங்கள், புதிய வரி விதிப்புகள், விலையேற்றம், தனிப்பட்ட வாழ்வில் பிரச்சினைகள் என இருள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனாலும், 'இருள் நம்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதே நம் வாழ்வியல் அனுபவம். நாம் அனைத்தையும் கடந்து வந்துவிட்டோம். இருளின் இல்லாமையை நம் விவிலியம் வாக்குறுதியாகக் கொடுக்கவில்லை. மாறாக, இருள் இருந்தாலும், இருள் நம்மை வெற்றி கொள்ளாது என்ற நம்பிக்கையைத் தருகின்றது. ஆக, இருள் நம்மை வெற்றிகொள்ள இயலாத நேரங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

(ஆ) 'கடவுளின் பிள்ளைகள்'

'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல. மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்.'

இந்த அருள்வாக்கியத்தின் முதல் பகுதி சோகமாக இருந்தாலும், பிந்தைய பகுதி மகிழ்ச்சியாக இருக்கிறது. 'அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையைக் கொடுக்கின்றார்.' அதாவது, ஒரு ஸ்டெப் நம் வாழ்க்கையை உயர்த்துகிறார். இயேசு தன் வாழ்க்கை முழுவதிலும் தான் சந்தித்த, தன்னைச் சந்தித்த அனைவருடைய வாழ்க்கையையும் ஒரு ஸ்டெப் உயர்த்துகின்றார். உடல் விருப்பத்தில் பிறந்த மனிதர்களிடமே இவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்றால், அதைவிட உயர்வாகப் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற 'கடவுளின் பிள்ளைகளிடம்' எவ்வளவு ஆற்றல் இருக்கும்! இந்த ஆற்றலே நம்மைப் புதிய ஆண்டுக்குள் உந்தித் தள்ளுவதாக!

(இ) 'யாவரும் நிறைவாக'

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்' என்கிறார் யோவான். ஆண்டின் நிறைவில் நம் மனமும் அவருடைய நிறைவால் நிறைந்துள்ளது. 'இது போதாது' என்ற குறைவு மனப்பான்மை, நம்மை 'இன்னும் இன்னும் வேண்டும்' என்ற தேடலுக்கு உட்படுத்தியிருக்கலாம். உறவுகளில் நம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கலாம். தேவைகளை நாம் கூட்டிக்கொண்டே இருந்திருக்கலாம். அல்லது புதிய புதிய நிலைகளை எதிர்நோக்கியிருந்திருக்கலாம். 'போதாது என்றால் எதுவும் போதாது. போதும் என்றால் இதுவே போதும்!' என்ற மனநிலையை நாம் பெற்றுக்கொள்வோம். ஏனெனில், நம் நிறைவாக இறைவன் இருக்கின்றார்.

'நன்றி' என்ற ஒற்றைச் சொல்லால் நாம் இந்த ஆண்டிற்கு விடைகொடுப்போம்.

'யாவரும் நிறைவாக' என்று இறங்கி வந்த வானகத்தின் நிறைவு அனைவரையும் நிரப்ப ஒருவர் மற்றவருக்காக இறைவேண்டல் செய்வோம்!

2 comments:

  1. ஆண்டின் இறுதி நாள்! போனவருடம் இந்நாளில் நம்முடன் பயணித்தவர்கள் இன்று நம்முடன் இல்லை.நாமும் பல இருள்சூழ் பள்ளத்தாக்குகளைக் கடந்துதான் இயந்நாளைத் தொட்டிருக்கிறோம்.எந்த இருளும் நம்மை வெற்றிகொள்ளாத நேரங்களுக்காகவும்….இறைவனின் ஆற்றலை நம்மிடம் கொடுத்து அதன் வழியாக நம்மைப்புதிய ஆண்டுக்குள் உந்தித்தள்ளும் அந்த ஆற்றலுக்காகவும்….நிறைவாக இருக்கும் நம் இறைவன் நமக்குத் தந்துள்ள” போதும்!”:என்ற மனநிலைக்காகவும் நன்றிசொல்வோம்….பிறக்கப்போகும் ஆண்டு நமக்கு ஆசீர்வாங்களை அள்ளித்தர மன்றாடுவோம்! எல்லோரும் நிறைவான வாழ்வு வாழ இறைவேண்டல் செய்வோம் எனும் நல்ல செய்தியைப்பகிரும் தந்தைக்கு நம் நன்றிகள்!!!

    ReplyDelete