ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு
Saturday, October 30, 2021
வாழ்வின் முதன்மைகள்
Friday, October 29, 2021
தாழ்ச்சி
தாழ்ச்சி
படைப்பின் தொடக்கத்தில், படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி ஆணும் பெண்ணும் ஆடையின்றி இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை. விலக்கப்பட்ட கனியை உண்ட பின்னர் அவர்களை வெட்கம் பற்றிக்கொள்கின்றது. அதே இரண்டு நபர்கள்தாம் தோட்டத்தில் இருந்தாலும் அவர்கள் வெட்கப்படுகின்றனர். 'அடுத்தவர் நம்மைப் பார்க்கிறார்' என்ற உணர்வே நமக்கு வெட்கம் தருகிறது. அந்த அடுத்தவர் நம்மைவிடத் தூரமானவராக இருக்கும்போது வெட்கம் குறைகிறது.
'மதிப்பும் வெட்கமும்' நம் சமூகத் தொடர்பால் நமக்கு வருபவை.
நான் மட்டும் தனியாக இருக்கும் வீட்டில், யாரும் என்னைக் காணாத தனிமையில் நான் என் மதிப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை, வெட்கம் பற்றியும் கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் முன்னர் நான் வரும்போது, அல்லது நான் வீட்டின் கதவுகளைத் திறந்து வெளியே வரும்போது, 'எது மதிப்பு தரும்?' 'எது வெட்கம் தரும்?' என உணர்ந்து அதற்கேற்றாற் போல என் நடை, உடை, இயக்கம் அனைத்தையும் மாற்றிக்கொள்கின்றேன்.
இயேசு பரிசேயரின் இல்லத்தில் உணவருந்தும் நிகழ்வு, தாழ்ச்சி பற்றிய போதனையின் தளமாகவும் அமைகின்றது.
தன் கண்முன்னே விருந்தினர்கள் முதன்மையான இருக்கைகளை நாடி அமர்வதை இயேசு காண்கின்றார்.
முதன்மையான இருக்கையை நாம் தேடுவது ஏன்?
இருக்கை என்பது இடம் சார்ந்தது. சினிமா தியேட்டரில் நாம் முதன்மையான இருக்கையை நாடுவதில்லை. ஒருவேளை அங்கே எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டால் முதன்மையான இருக்கையை நாம் தேடுவோம். தியேட்டரின் இருட்டில், முதன்மை-இறுதி என்பது கிடையாது. எது வசதியாக இருக்கிறதோ அதை மட்டுமே அங்கே நாம் தேடுகின்றோம்.
விருந்து, மற்றும் பொதுவான நிகழ்வுகளில் முதன்மையான இருக்கையை அல்லது பெருமையை நாம் பின்வரும் காரணங்களுக்காகத் தேடுகின்றோம்:
(அ) பெருமை உணர்வு
இது இயல்பாக நம்மிடம் எழுகின்ற ஓர் உணர்வு. இந்த உணர்வை நாமாக முயற்சி எடுத்துக் கட்டுப்படுத்தாவிட்டால் அது இன்னும் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளவே விரும்பும். சில மாதங்களுக்கு முன்பாக, கூகுள் மீட் செயலி வழியாகக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒருவர், தன் வீடியோ எல்லாத் திரைகளிலும் முதன்மையாகத் தெரியுமா? எனக் கேட்டார். ஆக, காணொலியிலும் நாம் அனைவர்முன்னும் தெரிய வேண்டும் என்றே விரும்புகின்றோம்.
(ஆ) இடம் அல்லது நபர் அல்லது நிலையோடு நம் பெருமையைக் கட்டுவது
இருக்கைக்கும் மதிப்புக்கும் எந்தத் தொடர்பும் அல்ல. மதிப்பு என்பது நம் உள்ளிருந்து புறப்படுவது. மற்றவர்கள் தரும் மதிப்பின்மேல் நான் நாட்டம் கொண்டால், என் மதிப்பை நான் அவர்களிடம் கொடுத்துவிடுகிறேன். ஆனால், மற்றவர் என்முன் எழுந்து நின்றாலும், என்முன் அமர்ந்திருந்தாலும் அவர் என் மதிப்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என நான் உணர்ந்தால் என் மதிப்பை நான் எனக்குள்ளே காண முடியும்.
(இ) தாழ்த்தப்பட்டுவிடுமோ என அஞ்சுவது
நம் தாழ்ச்சிக்குப் பெரிய தடையாக இருப்பது, 'நான் மற்றவர்கள்முன் தாழ்த்தப்பட்டுவிடுவேனோ?' என்ற அச்சமே. இங்கே மீண்டும் மறுபடியும் நாம் நம் மதிப்பை மற்றவர்களோடு இணைத்தே அறிந்து புரிந்துகொள்கின்றோம்.
இந்த உணர்விலிருந்து நாம் வெளிவர என்ன செய்வது?
'தாழ்ச்சி' என்ற மதிப்பீட்டை அணிந்துகொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார்.
தாழ்ச்சி என்பதை நாம் தாழ்ந்து போதல் என்று புரிந்துகொள்ளக் கூடாது. அதாவது, இன்னொருவர் என்மேல் அதிகாரம் செலுத்த நான் அனுமதிப்பது தாழ்ந்து போதல். அது தாழ்ச்சி அல்ல.
அதே போல, தாழ்ச்சி என்பது மற்றவர்கள் எடுத்தது போக, எனக்குக் கிடைப்பதை நான் எடுத்துக்கொள்வது அல்ல. எனக்கு எது தேவையோ அதை நான் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தாழ்ச்சி பார்க்கவே கூடாது. மற்றவர்கள் நம் வாழ்வைத் தீர்மானிக்க அனுமதித்தல் கூடாது.
மேலும், தாழ்ச்சி என்பது அநீதி கண்டு பொறுப்பதும் அல்ல.
தாழ்ச்சி என்ற மதிப்பீட்டை அடைந்த ஒருவர் தன்னை 'ஹ்யூமுஸ்' (களிமண்) – படைப்பின் தொடக்கத்தில் கடவுள் பயன்படுத்தி நம்மை உருவாக்கிய களிமண் - என்ற உணர்கிறார். தன் லேபிள்கள் மற்றும் முத்திரைகள் அனைத்தையும் அகற்றிய நிலைதான் தாழ்ச்சி. இந்த மதிப்பீடு நம் கைவசம் வந்தால், நாம் வெளியிலிருந்து வரும் எல்லா அடையாளங்களையும் கடந்துவிடலாம்.
மற்றும், இந்த நிலையில் நான் மற்றவரையும் அவருடைய அடையாளங்கள் நீக்கிக் கண்டுகொள்வேன். அடையாளங்களும், முத்திரைகளும், லேபிள்களும் பல நேரங்களில் மற்றவரை நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன.
தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்று சொல்லும் வார்த்தைகள், 'மற்றவர்கள் நம்மை உயர்த்துவர்' என்று சொல்வதில்லை. மாறாக, நம் பார்வையிலேயே நாம் உயர்வுபெறுவோம் என்று நமக்கு உணர்த்துகின்றன.
Thursday, October 28, 2021
விதிவிலக்கும் விதியே
ஓய்வுநாளில் இயேசு நலம்தரும் இன்னொரு நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் நடந்தேறுகிறது. அவருடைய வீட்டுக்கு விருந்துக்கு வருகின்ற இயேசு, நீர்க்கோவை நோய் பீடித்திருந்த ஒருவருக்கு நலம் தருகின்றார். நீர்க்கோவை என்னும் நோய் ஆங்கிலத்தில் 'ட்ராப்ஸி' என்று அழைக்கப்படுகின்றது. 'ஹைட்ராப்ஸி' ('ஹைட்ரோ' என்றால் தண்ணீர்) என்ற வார்த்தையே சுருங்கி 'ட்ராப்ஸி' என்றழைக்கப்படுகின்றது. 'நீர்க்கோவை' என்னும் இந்த நோய் இன்று 'எடேமா' என்று அழைக்கப்படுகின்றது. நம் உடலில் தண்ணீர் இரண்டு இடங்களில் சேகரிக்கப்படுகின்றது: ஒன்று, குருதிக் குழல்கள் அல்லது இரத்தக் குழாய்கள்ளூ இரண்டு, திசுக்களுக்கு இடையே உள்ள பகுதி. இந்த இரு இடங்களிலும் தேவைக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நிற்கும்போது, அந்த இடத்தில் விரலால் அமுக்கினால் அந்த இடத்தில் குழி விழும். இந்த நோய் வரக்காரணம் இதயக்குழாய்களில் ஏற்படும் நெரிசல். இது வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய் அல்ல. ஆக, இந்த நபர் பற்றி மற்றவர்கள் இயேசுவிடம் சொல்லியிருப்பார்கள். அல்லது அந்த நபரே இயேசுவிடம் இதைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். அல்லது இயேசுவே அவரிடம் இது பற்றி விசாரித்து அறிந்திருக்கலாம்.
இந்த இடத்தில் இயேசுவின் இயல்பான, எதார்த்தமான பழகுதல் நமக்கு வியப்பளிக்கிறது. அதாவது, எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே அந்த இடத்தின் தலைவராக அவர் மாறிவிடுகின்றார். இது வெகு சிலருக்கு உள்ள பண்பு. சிலர் எந்த வீட்டுக்குப் போனாலும் உடனடியாக அங்கிருக்கும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்வார்கள். இயேசு இந்தப் பண்பைப் பெற்றுள்ளார்.
மேலும், தன் முன்னே ஒருவர் நலமற்று அமர்ந்திருக்க, தான் உண்டு குடித்து மகிழ்வதா? என்ற நிலையில் இயேசு அவருக்கு உடனே நலம் தர விழைகின்றார். ஓய்வுநாள் அவருக்குத் தடையாக இருக்கிறது. தான் தன் மனதில் அதைத் தடையாகக் கருதவில்லை என்றாலும், அங்கிருக்கும் பரிசேயர்களின் பொருட்டு அவர்களிடம் வினாத் தொடுக்கின்றார்: 'ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?' கேள்விக்கு விடை அளிக்காமல் அனைவரும் மௌனம் காக்க, இயேசு நலமற்றவரின் கரத்தைப் பிடித்து அவருக்கு நலம் தருகின்றார்.
தொடர்ந்து, 'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிட மாட்டாரா?' எனக் கேட்கின்றார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை என்கிறார் நற்செய்தியாளர்.
ஆக, ஓய்வுநாளில் விதிவிலக்கு என்று இருந்த ஒன்றை இயேசு விதி என மாற்றுகின்றார். நலமற்றவருக்கு நலம் தருகிறது என்றால், தேவையில் இருப்பவருக்கு உதவி செய்தல் என்றால், விதிவிலக்குகள் கூட விதி ஆகலாம் என்பது இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.
இன்று, வெளியிலிருந்து நமக்கு வரும் விதிகள் அல்லது விதிமுறைகளை விட நமக்கு நாமே பல சட்டங்களையும் விதிமுறைகளையும் விதித்து, 'இப்படி! அப்படி!' என்று வரையறைகளை இட்டுக்கொள்கின்றோம். வரையறைகளை மீறாமல் இருப்பது நலம் என்றும், வரையறைகளை மீறுதல் தவறு என்றும் பாடம் கற்பிக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு சூழலும் புதிய பதிலிறுப்பை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது.
'அன்பிலும் போரிலும் விதிகள் இல்லை' என்பார்கள்.
தான் கொண்ட அன்பினால் விதிவிலக்கையும் விதி என மாற்றி, விதியைக் கடந்து நிற்கிறார் இயேசு.
Tuesday, October 26, 2021
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து
இயேசு ஒரு யூதராக இருந்ததால் இயேசுவின் மீட்பு யூதர்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் தொடக்க கிறிஸ்தவர்களுக்கு நிறையவே இருந்தது. புறவினத்தார்க்கு மீட்பு இல்லை என்ற புரிதல் மேலோங்கியிருந்ததன் பின்புலத்தில் இன்றைய நற்செய்தி வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய நற்செய்தியை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்:
அ. எருசலேம் நோக்கி இயேசு (13:22)
இயேசு எருசலேம் நோக்கிச் செல்வதை லூக்கா அடிக்கடி பதிவு செய்கிறார் (காண். 9:51, 53, 57, 10:1, 38, 11:1, 13:22, 33, 14:25, 17:11, 18:31, 18:37, 19:1,11,28). ஆனால், எதற்காக இயேசு எருசலேம் செல்கிறார் என்பதை மூன்றுமுறை மட்டுமே - தொடக்கத்தில் (9:51), நடுவில் 17:11), இறுதியில் (18:35) - பதிவுசெய்கிறார். இக்குறிப்பு நமக்கு உணர்த்தவது என்ன? என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கின்றதா? ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பத்து ஆண்டுகளுக்குப் பின், இருபது ஆண்டுகளுக்குப் பின் என நான் என்ன திட்டங்கள் அல்லது இலக்கை நிர்ணயித்துள்ளேன்? இலக்கைப் பின்தொடர்வதற்கான மனவுறுதியும் விடாமுயற்சியும் என்னிடம் இருக்கிறதா?
ஆ. மீட்பு பெறுபவர் சிலர்தானா? (13:23)
வழியில் பலர் இயேசுவிடம் பல விடயங்களைக் கேட்கின்றனர். இறந்த கலிலேயர்கள், விவாதங்கள் என நிறைய விடயங்களில் ஒன்றாக, 'மீட்பு எல்லாருக்குமா?' என்று கேட்கப்பட, இயேசு அதற்கு நேரிடையாகப் பதில்கூற மறுக்கின்றார்.
இ. இடுக்கமான வாயில் (13:24)
'இடுக்கமான வாயிலில் நுழைவது' பற்றி அண்மையில் டி.டி. ரங்கராஜன் இப்படி எழுதுகிறார்: 'நம் ஒவ்வொருவரிலும் இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் ஒரே நேரத்தில் வாழ்கின்றனர். இவர்களை நான் குறைத்து ஒரே நபராக எப்போதும் வாழ முயற்சிக்க வேண்டும். ஒரே நபராக வாழும்போது என்னில் உண்மையும், நாணயமும், நேர்மையும் இருக்கும். ஒரே நபராக இருப்பவரே இடுக்கமான வாயிலுக்குள் நுழைய முடியும்.' இன்று நான் எத்தனை மனிதர்களாகப் பிளவுண்டு வாழ்கிறேன்?
ஈ. உங்களை எனக்குத் தெரியாது (13:25-28)
'இவரை எனக்குத் தெரியும்!' என்று இயேசுவிடம் செல்பவர்களை, 'உங்களை எனக்குத் தெரியாது' என்கிறார் இயேசு. ஆக, இயேசுவுடன் உணவு உண்ட, குடித்த, போதனையைக் கேட்ட நெருக்கம் மட்டும் போதாது. மாறாக, அவருடன் ஒருவர் கொண்டுள்ள தனிப்பட்ட உறவே அவருக்கு மீட்புத் தரும்.
உ. எல்லாரும் வரலாம் (13:29-30)
ஆக, அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமாய் கதவுகள் திறக்கப்படுகின்றன. இலக்கு தெளிவாய் இருக்கும் எவரும், இடுக்கமான வாயில் வழியே நுழையும் எவரும் உள்ளே வந்து பந்தியில் அமரலாம். இவ்வாறாக, கடைசியானவர்கள் முதன்மையாவார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:26-30) கூட்டுஒருங்கியக்கம் என்ற மேலாண்மை விதி பற்றிப் பேசுகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது, அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' இதையே, 'ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கும்போது பிரபஞ்சமே அவருக்கு ஒத்துழைக்கும்' என்கிறார் நாவலாசிரியர் பவுலோ கோயலோ. இலக்கு தெளிவானவர்களும், இடுக்கமான வாயிலில் நுழைபவர்களும் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கிறார்கள்.
சில கேள்விகள்:
அ. என்னுடைய வாழ்வின் குறுகிய மற்றும் நீடித்த இலக்குகள் எவை? அவற்றை நான் எப்போதும் என் கண்முன் கொண்டுள்ளேனா?
ஆ. நான் இடுக்கமான வாயில் வழியே நுழைய, ஒற்றை நபராக மாற, தடையாக இருப்பவை எவை?
இ. கடவுளின் ஆவியார் என்னில் நிகழ்த்தும் கூட்டுஒருங்கியக்கத்தை நான் அனுபவிக்கிறேனா?
Monday, October 25, 2021
பேறுகால வேதனை
பேறுகால வேதனை
இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:18-25), கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கும் படைப்பு பற்றி எழுதுகின்ற பவுல், இரு முக்கியமான சொற்களைப் பயன்படுத்துகின்றார்: 'பேராவல்,' 'பேறுகால வேதனை.' இந்த இரண்டு சொல்லாடல்களோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்.
யோவான் நற்செய்தியில் இவற்றையொத்த சொல்லாடல்களை இயேசுவும் பயன்படுத்துகின்றார்: 'பிள்ளையைப் பெற்றெடுக்கும் தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்துவிடுகிறார்' (காண். யோவா 16:21).
பேறுகால வேதனை பற்றி ஆண்களுக்குத் தெரியாது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு. ஆனால், பேறுகால வேதனை என்பதை பல ஆண்கள் உருவகமாக அறிவர். குடும்பத்தில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் போது, திடீரென மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அதற்காக தன் சேமிப்பைக் கரைக்கின்ற வேளையில், பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து முடிவுகள் எடுக்கின்ற வேளையில், மற்றும் புத்தகம் எழுதுகின்ற போது, பாடல் எழுதுகின்ற போது, இசை அமைக்கின்ற போது என நிறைய நிலைகளில் பேறுகால வேதனையை ஆண் அனுபவிக்கின்றார்.
நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்தது, ஐன்ஸ்டைன் சார்பியல் கோட்பாட்டைக் கண்டறிந்தது, மைக்கேல் ஆஞ்சலே பியத்தா சிலை வடித்தது என எல்லா சாதனைகளுக்குப் பின்னரும் பேறுகால வேதனை ஒளிந்திருக்கவே செய்கிறது.
'படைப்பே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது' என எழுதும் பவுலின் கற்பனைத்திறம் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது.
பேறுகால வேதனை என்பதை நான் எப்படி புரிந்துகொள்கிறேன்?
தோல்வி அடைய விரும்பாத சிறு முயற்சியே பேறுகால வேதனை. பேறுகால வேதனையில் தவிக்கும் பெண் தனக்கு வலிக்கிறது என்பதற்காக, தன் முயற்சியை நிறுத்த இயலாது. அப்படி அவர் முயற்சித்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும். பெண்ணின் வயிற்றில் ஏற்படும் சிறு சிறு அசைவுகளும் பேறுகால வேதனையில் முக்கியம். ஆக, தோல்வி அடைய இயலாத ஒரு நிலையை பேறுகால வேதனை ஏற்படுத்துகிறது. சின்னஞ்சிறிய முயற்சிகளில்தான் பேறுகால வேதனை அடங்கியுள்ளது.
தோல்வி அடைய இயலாத அல்லது விரும்பாத மனப்பக்குவத்தில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கும் முயற்சி பெரிய மாற்றத்தை இந்த உலகில் ஏற்படுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறையாட்சி பற்றிய இரு உருவகங்களை இயேசு முன்மொழிகின்றார்: 'கடுகுவிதை,' 'புளிப்பு மாவு.' இவை இரண்டும் காணக் கூடிய அளவில் பெரிய நிலையில் தென்படுவதில்லை. ஆனால், விதையின் வளர்ச்சியையும் புளிப்பு மாவின் பரவலையும் யாரும் தடுக்க முடியாது. தோல்வி அடைய இயலாத நிலையில் அது வளர்ந்துகொண்டே இருக்கும். மேலும், இவை இரண்டும் சின்னச்சின்ன அளவில் மாறி வளரக் கூடியவை.
நம் வாழ்வில் நாம் எந்த முயற்சி எடுத்தாலும், பேறுகால வேதனையை மனத்தில் வைத்துச் செய்தால் - அதாவது, தோல்வி அடைய மறுத்து, பின்வாங்க மறுத்து, சின்னச் சின்ன அடிகள் எடுத்து வைத்தல் - வெற்றி பெறுதல் நலம்.
இன்று ஒரு பயிற்சிக்காக, நம்மைச் சுற்றி இருக்கும் மரம், செடி, கொடிகள், விலங்குகள், நிலா, சூரியன், மழை என அனைத்தையும் ஒரு நொடி நின்று இரசித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு அசைவிலும் பேறுகால வேதனை தெரிகிறது என்பது நிதர்சனமான உண்மை.
Sunday, October 24, 2021
ஆறு நாள்கள்
ஆறு நாள்கள்
நான் திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் பணியாற்றியபோது, சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் பேராசியர்களுக்கான கூட்டம் அல்லது கலந்தாய்வு வைக்கப்படுவதுண்டு. கூட்டம் பற்றிய அறிவிப்பு கேட்டவுடன், நாங்கள் அறியாமல் எழுப்பும் ஒரு விவிலிய வாசகம், 'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே ... ஓய்வு நாளில் வேண்டாம்!'
இன்றைய நற்செய்தி வாசகத்தில், பதினெட்டு ஆண்டுகளாக தீய ஆவி பிடித்திருந்து கூன் விழுந்து கிடந்த ஒரு பெண்ணை அவருடைய நோயிலிருந்து விடுவிக்கின்றார் இயேசு. இதைக் காண்கின்ற தொழுகைக் கூடத் தலைவர், 'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே. அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கடிந்து கொள்கின்றார். இவ்வார்த்தைகளுக்கு இயேசு பதிலிறுப்பு செய்கின்றார். தன்னை எதிர்த்த அனைவரையும் வெட்கமுறச் செய்கின்றார்.
'ஆறு நாள்களில் செய்திருக்கலாமே?' எனக் கேட்கின்றார் தொழுகைக்கூடத் தலைவர். ஆனால், 18 நாள்களாக அல்ல, மாறாக, 18 ஆண்டுகளாக ஒரு பெண் அங்கேயே உடல் நலமில்லாமல் இருக்கின்றார். எத்தனை 6 நாள்கள் கடந்து போயிருக்கும்? யாரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை!
(அ) கைகளை வைத்து
இயேசு முதலில் தன் சொல்லாலும் தொடர்ந்து, கைகளை அவர்மீது வைக்கும் தன் செயலாலும் அவருக்கு நலம் தருகின்றார். இதுவும் ஓய்வுநாள் மீறலாகக் கருதப்பட்டது.
(ஆ) ஆபிரகாமின் மகள்
சக்கேயுவின் மனமாற்றத்தின்போது, அவரை, 'ஆபிரகாமின் மகன்' என அழைக்கின்றார் இயேசு. இங்கே, தீய ஆவி பிடித்திருந்த பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என அழைக்கின்றார். இதுவும் இயேசுவின் சமகாலத்தவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கும். ஏனெனில், கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என்ற நிலைக்கு இயேசு உயர்த்துகின்றார்.
(இ) இரட்டை வேடம்
ஓய்வுநாள் சட்டம் பற்றிப் பேசுகின்ற இயேசுவின் எதிராளிகள் தாங்களே ஓய்வுநாள் சட்டத்தை மீறி, மாட்டையும் கழுதையையும் தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுகின்றனர். அவர்களின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.
இந்த இறைவாக்குப் பகுதி நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:
(அ) நீண்ட நாள்களாக அல்லது ஆண்டுகளாக நாம் நம்மிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தீய ஆவி அல்லது தீய செயல் என்ன? அந்தப் பெண்ணிடம் இருந்த தீய ஆவி தொழுகைக்கூடத்திற்கு 18 ஆண்டுகளாக வருகின்றது. ஆனால், அதன் இருப்பு பற்றி யாரும் கவலைப்படவே இல்லை.
(ஆ) எனக்கு அடுத்திருப்பவரின் வாழ்க்கையில் கடவுள் நற்காரியங்களைச் செய்யும்போது என் பதிலிறுப்பு என்ன? தொழுகைக்கூடத் தலைவர்போல எரிச்சல் அல்லது கோபம் கொள்கிறேனா? அல்லது கூடியிருந்த மக்கள் கூட்டத்தினர்போல மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றேனா?
Saturday, October 23, 2021
அடிமை நிலையை மாற்றிய ஆண்டவர்
எரேமியா 31:7-9 எபிரேயர் 5:1-6 மாற்கு 10:46-52
அடிமை நிலையை மாற்றிய ஆண்டவர்
'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம் ... ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்!'
இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 126), ஆசிரியர் மேற்காணும் அழகான வரிகளைப் பாடுகின்றார். இஸ்ரயேலுக்கு நாம் இன்று செல்லும்போது நிறைய வறண்ட ஓடைகளைக் காணலாம். ஆனால், வற்றிய அந்த ஓடைகளுக்கு வெளியே, 'ஓடையைக் கடக்க வேண்டாம்' என்று எச்சரிக்கைப் பலகை வைத்திருப்பார்கள். 'தண்ணீர் இல்லாத ஓடையைக் கடந்தால் என்ன?' என்று நாம் கேட்கலாம். ஆனால், இஸ்ரயேலின் நில அமைப்பின்படி, எங்காவது ஓரிடத்தில் மழை பெய்தால், அனைத்து ஓடைகளும் உடனடியாகத் தண்ணீரால் நிரம்பி விடும். அல்லது வறண்ட ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆக, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வறண்ட ஓடை வெள்ளம் ஓடும் நீரோடையாக மாறிவிடும். ஆகையால்தான், 'கடக்க வேண்டாம்' என்னும் எச்சரிக்கை. திருப்பாடல் ஆசிரியர் இந்த நிகழ்வை அப்படியே எடுத்து, 'ஆண்டவரே எங்கள் அடிமை நிலையை நீர் இவ்வளவு விரைவாக மாற்றியருளும்!' என்று பாடுகின்றார். பாடலின் முதற்பகுதியில் தங்கள் அடிமைநிலை மாற்றப்பட்டதாக உணர்கின்றார்.
அடிமை நிலை என்றால் என்ன?
'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. அடிமைக்கு வீட்டில் நிலையானதொரு வீடில்லை' என்கிறார் இயேசு. ஆக, 'அடிமை' என்பது 'தற்காலிகம்.' அல்லது 'அடிமை' நிரந்தரமானவர் அல்ல. அல்லது அடிமைக்கு நிரந்தரத்தின்மேல் உரிமை இல்லை. அடிமை மனப்பான்மையில் ஒருவர் தன் தான்மையையும் தன்மதிப்பையும் இழந்துவிடுகிறார். ஓர் அடிமை தனக்கென எதையும் உறுதிசெய்ய முடியாது.
இஸ்ரயேல் மக்கள் அசீரிய அடிமைத்தனத்தின்போதும், பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதும் மிகவும் இழிவான நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் நாடு, மண், அரசு, வீடு, ஆலயம் என அனைத்தையும் இழந்த பாபிலோனியாவில் அவர்கள் அடிமைகளாக இருந்த நிலையை, ஆண்டவராகிய கடவுள் ஒரே நாளில் மாற்றினார் என்று புகழ் பாடுகின்றனர்.
இந்த நிகழ்வு எப்படி நடந்தது?
'நாங்கள் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என்கிறார் ஆசிரியர். அதாவது, 'எல்லாம் கனவுபோல இருந்தது' என்கிறார் ஆசிரியர்.
கனவுபோல இருப்பது என்றால் என்ன?
கனவு போல நடக்கும் ஒன்றுக்கு மூன்று பண்புகள் உண்டு. (அ) கனவில் நடக்கின்ற எதுவும் எதிர்பாராமல் நடக்கின்றது. 'இன்று எனக்கு இது கனவில் வரும்!' என்று நாம் எதையும் நினைத்துத் தூங்கச் செல்வது கிடையாது. கனவு என்பது எதிர்பாராமல் நிகழக் கூடியது. ஆக, ஆண்டவர் தங்களுடைய அடிமை நிலையை மாற்றியது எதிர்பாராத நேரத்தில் நடந்தது என்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். (ஆ) கனவில் நடக்கின்ற எதுவும் விரைவாக நடக்கும். நாம் ஒரே கனவில் பிறந்து, வளர்ந்து, உயர்ந்துவிட முடியும். கனவில் ஒரே நொடியில் பெரிய கட்டடத்தை நம்மால் எழுப்பிவிட முடியும். இப்படியாக, இஸ்ரயேல் மக்களின் விடுதலை விரைவாக நடக்கின்றது. (இ) கனவில் நடக்கும் எதற்கும் நம் முயற்சி தேவையில்லை. அதாவது, நீட் தேர்வுக்குப் படிக்காமலேயே கனவில் நான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும். கனவில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நம் முயற்சி தேவையில்லை. ஆக, மனிதர்களின் முயற்சி இல்லாமலேயே அனைத்தும் நடந்தேறியதாக இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அளப்பரிய செயலைப் புகழ்ந்து பாடுகின்றனர்.
இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் காணும் இந்த உருவகங்கள் இன்றைய வாசகங்களின் கருத்துகளை மிக அழகாகச் சுருங்கச் சொல்கின்றன.
இன்றைய முதல் வாசகம் (காண். எரே 31:7-9), எரேமியா நூலின், 'ஆறுதலின் புத்தகம்' என்ற பகுதியிலிருந்து (எரே 30-31) எடுக்கப்பட்டுள்ளது. யூதாவின் அழிவைப் பற்றி இறைவாக்குரைக்கின்ற எரேமியா இப்பகுதியில், யூதாவின் மீட்பு குறித்து இறைவாக்குரைக்கின்றார். 'இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை ஆண்டவர் மீட்டருளினார்' என்கிறார் எரேமியா. 'எஞ்சியோர்' என்னும் பதம், முதலில், 'நாடுகடத்தப்பட்டு உயிருடன் இருக்கும் அடுத்த தலைமுறையினரையும்,' 'ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், பெண்கள், அநாதைகள், குழந்தைகள்' ஆகியோரையும் குறிப்பிடுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றார். அனைவரையும் ஒன்று சேர்த்தல் என்பது, 'யூதா' மற்றும் 'எப்ராயிம்' என்னும் இரு பெயர்கள் வழியாகக் குறிக்கப்படுகின்றது.
'அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதல் அளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்' என்கிறார் ஆண்டவர். 'அழுகை' என்பது அவர்களுடைய மனமாற்றத்தைக் குறிக்கின்றது. தங்கள் முன்னோர்கள் தங்களுடைய சிலைவழிபாட்டால் அடிமை நிலைக்கு உட்படுத்தப்பட்டதை எண்ணி இவர்கள் அழுது தங்கள் மனத்தை இறைவன்பக்கம் திருப்புகின்றனர். இறைவனும் அவர்களுக்கு ஆறுதல் தருகின்றார்.
ஆக, அடிமைத்தனத்தில் எஞ்சியிருத்த மக்களின் நிலையை விடுதலையின் நிலைக்கு மாற்றுகின்றார் ஆண்டவராகிய கடவுள்.
இரண்டாம் வாசகம் (காண். எபி 5:1-6) இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதியில், அருள்பணியாளராக ஒருவர் பணிசெய்வதற்குத் தேவையான பண்புகள் வரையறுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், இயேசுவின் குருத்துவத்தின் பண்புகள் முன்வைக்கப்படுகின்றன. இஸ்ரயேல் மக்களின் குருக்கள் லேவி குலத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். அல்லது லேவி குலத்தில் பிறத்தல் என்பது அவர்களை, 'குருக்கள்' நிலைக்கு உயர்த்தியது. தலைமைக்குரு என்பவர் லேவி குலத்தில் பிறந்தவராக இருப்பதோடு, அவர் ஆரோனின் குடும்பத்தில் பிறந்த அவருடைய வழிமரபினராக இருக்க வேண்டும். அவர் மனிதர்களின் வழிமரபினராக இருப்பதால் அவரும் பாவத்திற்கு உட்பட்டவராக இருக்கிறார். ஆக, அவர் தனக்கென முதலில் பலி செலுத்தி, பின்னர், மற்றவர்களுக்காக பலி செலுத்த வேண்டும்.
இயேசு லேவி குலத்தில் பிறந்தவர் அல்லர். அவர் யூதா குலத்தில் பிறந்தவர் அல்ல. ஆக, அவர் ஆரோனின் வழிமரபினரும் அல்லர். இப்படி இருக்க, அவரை நாம் எப்படி தலைமைக்குரு என அழைக்கலாம்? எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரு நிலைகளில் இயேசுவை, 'தலைமைக்குரு' என முன்வைக்கின்றார். ஒன்று, திபா 2:7இன் படி, கடவுளின் மகனாக இருக்கிறார். ஏனெனில், 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆக, கடவுளின் மகன் என்ற முறையில் இயேசு இறைவனின் திருமுன் பணியாற்றும் உரிமையையும், இறைவனின் திருத்தூயகத்திற்குள் நுழையும் உரிமையையும் பெறுகின்றார். இரண்டு, திபா 110:4இன் படி, இயேசுவின் அருள்பணி நிலை இறைவனின் ஏற்படுத்துதலால் வருகிறது. 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே!' என்று ஆண்டவராகிய கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆபிரகாமைச் சந்திக்க வருகின்ற மெல்கிசதேக்கு எந்தவொரு தொடக்கமும் முடிவும் இல்லாமல், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமல் வருகின்றார். இயேசுவும் தொடக்கமும் முடிவும் இல்லாத கடவுளாகவும், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமலும் வருவதால், மெல்கிசதேக்கின் முறைப்படி அவர் நிலையான குருவாக இருக்கின்றார்.
ஆக, நம் வலுவின்மையில் பங்குபெறும் தலைமைக்குரு இயேசு நமக்காக ஒரே பலி செலுத்தி நம் அடிமை நிலையை மாற்றினார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 10:46-52), திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை தருகின்றார் இயேசு. இது ஒரு வல்ல செயல் போல இருந்தாலும், இதை ஓர் உருவகம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள், இயேசுவை நேரில் கண்டவர்கள், அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், பார்வையற்ற பர்த்திமேயு, 'இயேசுவே, தாவீதின் மகனே!' என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்னும் இவரின் வார்த்தைகள், 'இவர் ஏற்கெனவே பார்வை பெற்றிருந்தார்' என்றும், 'இவர் இரண்டாவது பெற்றது நம்பிக்கை பார்வை' என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன.
மாற்கு கதையாடல்களை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்யக்கூடியவர். இந்த நிகழ்வை அவர் பதிவு செய்வதிலும் அது வெளிப்படுகின்றது. இயேசுவும் சீடர்களும் எரிகோவுக்கு வந்துவிட்டு மீண்டும் வெளியேறுகின்றனர். 'திரளான மக்கள் கூட்டம்' என்பது இயேசுவைப் பின்பற்றியவர்களையோ, அல்லது இயேசுவோடு உடன்பயணித்தவர்களையும் குறிக்கலாம். வழியோரம் அமர்ந்து பிச்சையெடுக்கின்ற பர்த்திமேயு, நாசரேத்து இயேசுதாம் போகிறார் எனக் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' எனக் கூக்குரலிடுகின்றார். இயேசுவே தனக்கு நலம் தர இயலும் என்றும், இந்த வாய்ப்பைத் தவற விட்டால் இனி தனக்கு வாய்ப்பே கிடைக்காது என்றும் அறிந்தவராகக் குரல் எழுப்புகின்றார் பர்த்திமேயு. மக்கள் கூட்டம் அவரை அதட்டுகின்றது. ஆனால், அதே மக்கள் கூட்டம், 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்று தன் இயல்பை மாற்றிக்கொள்கின்றது. அவர் பார்வை பெறுவதற்குத் தடையாக இருந்த மக்கள் கூட்டம், அவர் பார்வை பெறுவதற்கு உதவியாக மாறுகின்றது.
அவர் தன் 'மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வருகின்றார்.' இங்கே மேலுடை என்பதை அவர் அணிந்திருந்த ஆடை எனப் புரிந்துகொண்டால் அவர் நிர்வாணமாக இயேசுவிடம் வந்திருக்க வேண்டும். மேலுடை என்பது தனக்கு முன்பாக அவர் விரித்து வைத்து பிச்சை கேட்கப் பயன்படுத்திய ஆடை என்று நினைத்தால், தன் பழைய வாழ்க்கையையும், பாதுகாப்பு வளையத்தையும் அவர் விட்டுச் சென்றார் என்று புரிந்துகொள்ளலாம். 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு உடனடியாக, 'என் போதகரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' எனச் சொல்கிறார் அவர். தன் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தார் அவர். 'நீர் போகலாம். உம் நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' எனச் சொல்கின்றார் இயேசு. அவரும் பார்வை பெற்றவராக இயேசுவைப் பின்தொடர்கின்றார்.
ஆக, பர்த்திமேயுவின் பார்வையற்ற நிலை என்னும் அடிமை நிலையிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு. இது மூன்று நிலைகளில் நடந்தேறுகின்றது: (அ) இயேசுவைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்கின்றார், (ஆ) மக்கள் கூட்டத்தின் அதட்டலிலும் தன் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை, (இ) தன் மேலுடையை (பாதுகாப்பு வளையத்தை) இழக்க அவர் தயாராக இருந்தார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி என்ன?
ஆண்டவராகிய கடவுள் நம் அடிமை நிலையை இன்றும் மாற்றுகின்றார். பாவத்தில் விழுந்து கிடக்கும் அடிமை நிலை, நாம் விட்டு விலக இயலாத தீமை என்னும் அடிமை நிலை என அனைத்திலுமிருந்து நம்மை விடுவிக்க அவர் நம் நடுவே வருகின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்வதும், அறிக்கையிடுவதுமே.
புனித அகுஸ்தினார் தன், 'ஒப்புகைகள்' நூலில், 'மேலுடை' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, மனமாற்றம் அடையத் தயாரா உடன், அவருடைய பழைய பழக்கங்கள், அவரின் ஆடையின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு, 'நீ போய்விடப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் நீ இருந்துவிடுவாயா? நீ மீண்டும் வருவது எப்போது? எங்களைவிட்டுப் போகாதே!' எனச் சொல்கின்றன. ஆனால், தன் மேலுடையைக் களைந்துவிட்டு மனமாற்றத்தைத் தழுவிக்கொள்கின்றார் அகுஸ்தினார். பல ஆண்டுகள் முயற்சி எடுத்துக் கிடைக்காத மனமாற்றம் கனவுபோல ஒரு நொடியில் நடந்தேறுகிறது.
நம் வாழ்விலும் ஆண்டவர் மாபெரும் செயல்களை இப்படித்தான் நடத்துகின்றார். கண்ணீரோடு விதைவிதைக்கும் நம்மை அறுவடையின் மகிழ்ச்சியால் நிரப்புகின்றார்.
பார்வையற்று வறண்டு கிடந்த பர்த்திமேயு என்னும் ஓடையை இயேசு வான்மழை நிறைந்தோடும் நீரோடையாக மாற்றுகின்றார்.
நம் அடிமைநிலையும் மாறும்! கனவு காண்பது போல நமக்குத் தெரிய அனைத்தும் மாற்றம் பெறும்!
Friday, October 22, 2021
மனமாற்றத்திற்கான நேரம்
மனமாற்றத்திற்கான நேரம்
இயேசுவின் சமகாலத்தில் ஒருவர் செய்த பாவத்திற்கு அவர் உடனடியாகத் தண்டிக்கப்படுவார் என்றும், ஒருவருக்கு நேர்கின்ற விபத்து மற்றும் ஆபத்துகளுக்கு அவருடைய பாவச் செயல்களே காரணம் என்றும் மக்கள் புரிந்துகொண்டனர். இதே புரிதலை முன்வைத்து சில இடங்களில் இன்றும் போதகர்கள் போதிக்கின்றனர். கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை என்ற புரிதல் நமக்கு அவசியம்.
இயேசுவைப் பொருத்தவரையில், விபத்துகள் மற்றும் ஆபத்துகள் இயல்பாக நடக்கக் கூடியவை. மேலும், அவற்றால் ஒருவர் பலியானார் என்றால் அதற்குக் காரணம் அவர் பாவி என்பது அல்ல. அதே வேளையில், நமக்கு விபத்தும் ஆபத்தும் எந்த நேரமும் வரலாம் என்ற நிலையில் உடனடியாக மனமாற்றம் அடைய வேண்டும்.
இரண்டாம் பகுதியில், மூன்று ஆண்டுகளாகக் கனி கொடாத அத்தி மரத்திற்கு மீண்டும் ஒரு வருடம் அவகாசம் கேட்கின்றார் தொழிலாளர். இது உருவகமாக இயேசுவின் போதனையைக் கேட்டு மனம் மாறாதவர்களைக் குறித்தாலும், இன்னொரு பக்கம் கடவுளின் பொறுமையையும் காட்டுகின்றது. கடவுளின் பொறுமை நம் மனமாற்றத்திற்கான நேர அவகாசமே.
இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?
(அ) ஒருவரின் இல்லாமை மற்றும் இயலாமை கண்டு அவரைப் பாவி எனச் சாடுதல் தவறு.
(ஆ) மனமாற்றத்திற்கான வாய்ப்பு இன்றே, இப்போதே வழங்கப்படுகிறது என்ற நிலையில், நாம் உடனடியாக நம்மை மாற்றிக்கொள்வது.
(இ) கடவுள் நமக்கு எப்போதும் இரண்டாம் வாய்ப்பை வழங்குகின்றார். எப்படியாவது கொத்தி எருப்போட்டு நம்மைக் கனிகொடுக்க வைக்க முயற்சி செய்கின்றார். அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நலம்.
Thursday, October 21, 2021
விவேகமும் வேகமும்
இன்றைய (21 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 12:54-59)
Wednesday, October 20, 2021
பிளவு
பிளவு
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் 'கலகம் செய்ய' வந்ததாகவும், இந்தக் 'கலகம் செய்தல்' ஒருவர் மற்றவரைப் பிரித்துவிடும் என்றும், இறுதியில் இறையாட்சித் தாகம் கொண்டோர் 'ஒன்று சேர்வர்' என்றும் சொல்கின்றார். 'மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார். அதாவது, இயேசுவை அல்லது இறையாட்சியைத் தெரிந்துகொள்தல் என்பது 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' அல்லது 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்ற தெரிவு அல்ல. மாறாக, அது இன்றே, இப்போதே 'பற்றி எரிய' வேண்டும். 'கலகம்' இன்றே என்னுள்ளே நடக்க வேண்டும். இவ்வாறாக, இறையாட்சிக்கான தெரிவின் உடனடித்தன்மையையும், வேகத்தையும் முன்வைக்கிறார் இயேசு. இயேசுவின் இறையாட்சிப் பணியின் சுருக்கமாக இவ்வார்த்தைகள் இருக்கின்றன. இயேசு சென்றவிடமில்லாம் தீயிட்டுக்கொண்டே சென்றார். ஆடம்பர மாளிகையில் பிறக்காமல் மாட்டுக்கொட்டிலில் பிறந்த போதே மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அரண்மனையில் இருப்பதற்குத் தீயிட்டார். ஆலயத்தில் இரண்டு செப்புக்காசுகள் போட்ட கைம்பெண்ணைப் பாராட்டியபோது தன்னுடைய சமகாலத்து மனிதர்களின் போலியான ஆன்மீகத்திற்குத் தீயிட்டார். 'சமாரியனைப் போல நீயும் செய்' என்று சொல்லி மறைநூல் அறிஞரை அனுப்பியபோது அவருடைய சமகாலத்துத் தீண்டாமைக்குத் தீயிட்டார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், 'நானும் உன்னைத் தீர்ப்பிடேன்' என்று சொன்னபோது, அவர்களுடைய சட்டத்திலிருந்த ஓட்டைக்கும், அவர்களின் மேட்டிமைப் போக்கிற்கும் தீயிட்டார். இப்படியாக, அவர் சென்றவிடமெல்லாம் தீ பற்றி எரிந்தது. இயேசுவைத் தெரிந்துகொள்பவரும் அப்படியே இருத்தல் வேண்டும்.
மேலும், நெருப்பின் இயல்பு தொடர்ந்து முன்னே சென்றுகொண்டிருப்பது. நெருப்பு ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அது பின்வாங்குவதால் அது எரித்த பொருள் திரும்ப பழைய நிலைக்கு வருவதும் இல்லை. போகிற போக்கில் அது தான் தழுவும் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொண்டே செல்லும். இறையாட்சிக்கான தெரிவைச் செய்கிற எவரும் மீண்டும் தன்னுடைய பழைய இயல்புக்குத் திரும்ப முடியாது. அவர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும்.
இப்படி அவர் முன்னேறிச் செல்லும்போது, 'தெரிவு செய்தோர்' - 'தெரிவு செய்யாதோர்' என்ற பிளவு ஏற்படும். 'தெரிவு செய்தோர்' ஒன்று சேர்வர். தெரிவு செய்யாதோர் பிரிந்து நிற்பர். இந்தப் பிளவு விபத்து அல்ல. இது இப்படித்தான் நடக்கும். தாயின் கருவறையில் தாயோடு குழந்தையை இணைக்கும் தொப்புள்கொடி பிளவுண்டால்தான் குழந்தை உயிர்பெறும். நாம் இறுதியில் இம்மண்ணக வாழ்விலிருந்து பிளவுபட்டால்தான் விண்ணக வாழ்விற்குப் பிறக்க முடியும். உயிரினத்தின் செல்பிளவிலிருந்து, நமக்கு ஆற்றல்தரும் அணுப்பிளவு வரை பிளவு இன்றி உயிரும் வாழ்வும் இல்லை.
Tuesday, October 19, 2021
வீட்டுப் பொறுப்பாளர்
வீட்டுப் பொறுப்பாளர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இறுதிக்கால போதனை தொடர்கிறது. 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?' என்னும் கேள்வியை எழுப்புகின்ற இயேசு, 'தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்' என்று பதில் தருகின்றார்.
இந்த நற்செய்தி வாசகப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு இரு பெயர்கள் நினைவுக்கு வருவதுண்டு. ஒன்று, அருள்தந்தை பெர்க்மான்ஸ் (ஜெபத்தோட்டம்). இவர் தன்னை இந்த உருவகத்தோடு இணைத்துப் பார்க்கின்றார். தலைவரால் பொறுப்பாளராக ஏற்படுத்தப்படுதல் என்பது அருள்பொழிவு செய்யப்படுதல். மேலும், அருள்பணியாளர் எப்போதும் பொறுப்பாளரே அன்றி, அவர் தலைவர் அல்லர். மற்றும் அவருடைய பணி ஊழியருக்குப் படியளப்பதே தவிர, தனக்குப் படியளப்பது அல்ல. அருள்பணியாளர்களுக்கான இந்த உருவகத்தை அருள்தந்தை பெர்க்மான்ஸ் நமக்கும் கற்றுத் தருகின்றார். இரண்டாவது பெயர், முதல் ஏற்பாட்டு யோசேப்பு. யோசேப்பு எகிப்து நாட்டில் அடிமையாக விற்கப்படுகின்றார். அடிமையாக போத்திபாரின் இல்லத்திற்குள் நுழைந்த அவர் சில நாள்களில் போத்திபாரின் வீட்டுப்பொறுப்பாளராக மாறுகின்றார். நிகழ்வின்படி, போத்திபாரின் இல்லத்தரசி இவர்மேல் மையல் கொள்கின்றார். யோசேப்பின் கண்ணியம் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. தான் தன் கடவுளாலும் தன் சகோதரர்களாலும் கைவிடப்பட்ட நிலையிலும், 'கடவுளின் கண்களில் தீயதெனப்படுவதை நான் செய்யலாமா?' எனக் கேட்கின்றார் யோசேப்பு. மேலும், இல்லத்திலிருந்து தப்பி வெளியே ஓடுகின்றார். இதுதான் பொறுப்பாளரின் நேர்மை.
வீட்டுப் பொறுப்பாளர் என்ற நிலைக்கு இரு பண்புகள் அவசியம். இந்த இரு பண்புகளுமே யோசேப்பிடம் இருந்தன. ஒன்று, தன் வரையறை மற்றும் எல்கையை அறிவது, வரையறுப்பது, உறுதி செய்வது. இரண்டு, எப்போது வெளியேற வேண்டுமோ, அப்போது வெளியேறுவது. பொறுப்பாளர் தலைவராக முயற்சிக்கவும் கூடாது, ஊழியரோடு அமர்ந்து உண்டு குடிக்கவும் கூடாது. தன் வரையறையை அறிந்தவராகவும், உறுதி செய்பவராகவும் அவர் இருத்தல் வேண்டும். மேலும், வாழ்வின் மிக முக்கியமான பண்பு ஒன்றைவிட்டு வெளியேறக் கற்றுக்கொள்வது. மகாபாரதத்தில் அர்ச்சுனரின் மகன் அபிமன்யு பற்றிய ஒரு நிகழ்வு உண்டு. அபிமன்யு எதிரியின் போர் வளையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவார். ஆனால், அவருக்கு அதிலிருந்து வெளியேறுவது எப்படி எனத் தெரியாததால் போரில் கொல்லப்படுவார். உறவுநிலையாக இருக்கலாம், நாம் செய்கின்ற வேலையாக இருக்கலாம், நம் வாழ்வின் படிநிலையாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும், 'இந்த இடத்தை விட்டு நான் எப்போது வெளியேற வேண்டும்?' என்ற கேள்விக்கு விடை எனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தேவைக்குமேல் தங்குதல் ஆபத்தானது.
இறுதியாக, இயேசு, 'மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்' என்கிறார். ஊழியக்காரர்களிடம் கொடுக்கப்படுவது குறைவு. ஏனெனில், அவர்கள் பெறும் வெகுமதியும் குறைவு. அவர்களின் பொறுப்புணர்வும் குறைவு. ஆனால், வீட்டுப் பொறுப்பாளரிடம் ஊழியர்கள் கொடுக்கப்படுகின்றார்கள். அவர்களின் வெகுமதியும் பொறுப்புணர்வும் அதிகம்.
நம் வாழ்வில் இதை நன்றாகக் கவனிக்கலாம். இதை மேலாண்மையியலில் ஸ்னோபால் இஃபெக்ட் என்றழைப்பார்கள். அதாவது, ஸ்னோபால் மேலேயிருந்து உருண்டு விழத் தொடங்கும்போது சிறிய பந்து போல இருக்கும், அது மலையிலிருந்து சறுக்கி கீழே வரும்போது, வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அளவு கூடிக்கொண்டே இருக்கும். கீழே வரும்போது அது பெரிய பனிப்பாறையாக வரும். நம் வாழ்விலும் பொறுப்புணர்வும் வேகமும் அதிகரிப்பதைப் பொறுத்து நம் வாழ்வில் பணிகளும் கூடிக்கொண்டே வரும்.
அதிகம் ஓய்ந்திருப்பவர் அல்லர், மாறாக, அதிகம் பணி செய்பவரே இந்த உலகை மாற்றக் கூடியவர். ஏனெனில், ஓய்வு என்பதில் இயக்கம் இல்லை. பணியில் எப்போதும் இயக்கம் உள்ளது.
Monday, October 18, 2021
விழித்திருக்கும் பணியாளர்
விழித்திருக்கும் பணியாளர்
ராபின் ஷர்மா என்னும் மேலாண்மையியல் ஆசிரியர் பல இடங்களில், 'பணியாளர் மனநிலையே நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்ற மனநிலை' என முன்மொழிகின்றார். இந்தக் கருத்துருவை இவர் விவிலியத்திலிருந்துதான் கற்றிருக்க வேண்டும். தன் குழுமத்தின் அடிப்படைத் தலைமைத்துவப் பண்பாக இயேசு பணியாளர் மனநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார். பணியாளரின் மனநிலையின் ஒரு பகுதியாக விளங்குவது, 'விழிப்பாக இருத்தல்.'
பணியாளர் மனநிலை சில இடங்களில் தவறு என்றும் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'நல்ல ஆயன்' உருவகத்தை முன்மொழிகின்ற இடத்தில் (காண். யோவா 10), இயேசு, 'ஆயன்' மற்றும் 'கூலிக்காரன் அல்லது கூலிக்கு மேய்ப்பவன்' என்று வேறுபடுத்தி, 'கூலிக்காரன் மனநிலை' தவறு என்கிறார். மேலும், காணாமல்போன மகன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 15), இரு மகன்களுமே கூலியாள்களாக இருக்க விரும்புகின்றனரே தவிர, மகன்களாக இருக்க விரும்பவில்லை.
பணியாளராக இருத்தல் என்பது ஓர் இரண்டாங்கெட்டான் நிலை. ஒன்றுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பணியாளர், ஒருபோதும் அதன்மேல் உரிமை பாராட்ட முடியாது. எடுத்துக்காட்டாக, பணியாளர் நுழைவதற்காக வீட்டு வெளிப்புறக்கதவின் சாவி அவருக்குக் கொடுக்கப்படுகிறது. சாவி தன்னிடம் இருக்கிறது என்பதற்காக அவர் அந்த வீட்டின்மேல் உரிமை கொண்டாட முடியாது. அதே வேளையில், தன்னிடம் உள்ள சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவருக்கு உள்ளது. ஏனெனில், சாவி தொலைந்துபோகும் பட்சத்தில் இல்லத்தில் திருடர்கள் நுழைய வாய்ப்பு உண்டு.
இறுதி நாள்கள் பற்றிய போதனையை முன்வைக்கின்ற இயேசு, இல்லத்தின் பணியாளர்கள் பெற்றிருக்க வேண்டிய விழிப்பு மனநிலையைத் தன் சீடர்கள் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இயேசுவின் போதனை இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசு, பணியாளர்கள் எப்படி விழித்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார்: (அ) வரிந்து கட்டப்பட்ட இடைளூ (ஆ) எரிந்துகொண்டிருக்கும் விளக்குளூ (இ) தட்டியவுடன் திறக்கின்ற காத்திருத்தல். இரண்டாம் பகுதியில், விழித்திருக்கின்ற தன் பணியாளரைக் காண்கின்ற தலைவர் அவர்களுக்குப் பந்தி பரிமாறுகின்றார். இங்கே 'தலைவர்' என்பவர் இயேசுவையே குறிக்கின்றார். இன்னொரு பக்கம், 'பந்தி' என்பதை தலைவரின் பாராட்டு என்றும் புரிந்துகொள்ளலாம்.
இன்று நாம் இந்த மனநிலையை நம் வாழ்வுக்கு எப்படி பொருத்திப் பார்ப்பது?
'வரிந்துகட்டப்பட்ட இடை' என்பது தயார்நிலையைக் குறிக்கிறது. இராணுவ வீரர்களைக் கவனித்துள்ளீர்களா! அவர்கள் தங்கள் பணியிலிருக்கும்போது சீருடையில் இருப்பார்கள். பணிநேரத்தில் தங்கள் சீருடையில்தான் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். மழை, வெள்ளம், வெயில், குளிர் என அனைத்திலும் சீருடைதான். ஆக, அவர்களின் சீருடை அவர்களுடைய தயார்நிலையின் அடையாளமாக இருக்கிறது. சீருடையில் இருக்கும் அவர் ஆயத்தநிலையில் இருக்கிறார். ஆயத்தநிலை என்பதை நாம் விழிப்புநிலையின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். எதையாவது செய்வதற்கான திறந்த மனநிலையே இது.
'எரியும் விளக்கு' என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை. விளக்குகள் எரிகின்ற வீடு திருடர்களை ஈர்ப்பதில்லை. தலைவரை மட்டுமே ஈர்க்கும். தன் வீட்டின் வெளிச்சம் கண்டு அவர் மகிழ்வார். எரியும் விளக்கு என்பதை நம் புன்சிரிப்பு என நாம் புரிந்துகொள்ளலாம். நம் மகிழ்ச்சி நம் உதடுகளில் தொடங்கி கண்களில் ஒளிர வேண்டும்.
'காத்திருத்தல்'. தன் வேலைகளைப் பணியாளர் செய்துகொண்டே இருந்தாலும் அவருடைய காதுகள் கதவுகள்மேல்தான் இருக்கும். இதுதான் காத்திருத்தல்.
நம் வாழ்வு மற்றும் பணிகளில் இன்று விழிப்புநிலை இல்லாததால் நாம் நிறைய பிரச்சினைகளுக்கு ஆளாகின்றோம். இன்று செயல்திறன்பேசிகள் மற்றும் தொடுதிரைக் கணணிகளைக் காண விழித்திருக்கும் கண்கள் சோர்ந்துபோகின்றன. மனம் விழித்திருத்தால் கண்கள் விழித்திருக்கும்! மனம் தூங்கிவிட்டால், கண்கள் விழித்திருந்தாலும் ஒன்றும் மனதில் படியாது!
Sunday, October 17, 2021
புனித லூக்கா
புனித லூக்கா
நற்செய்தியாளரும், பவுலின் உடனுழைப்
பாளருமான புனித லூக்காவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' என்று இன்றைய முதல் வாசகத்தில் (2 திமொ 4:9-17) பவுல் திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார். பவுலின் தனிமை, பணிச்சுமை, மற்றும் பணித்தேவை ஆகியவற்றை இந்த வாக்கியம் நமக்கு எடுத்துச் சொல்வதோடு, லூக்காவின் உடனிருப்பையும், மாற்கின் தேவையையும் நமக்கு உணர்த்துகிறது.
லூக்கா மற்றும் மாற்கு என்னும் பெயர்கள் இங்கே அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. நம் புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயு மற்றும் யோவான் திருத்தூதர்கள் குழாமைச் சார்ந்தவர்கள். லூக்கா மற்றும் மாற்கு ஆகியோர் திருத்தூதர்கள் வழியாக – பவுல் மற்றும் பேதுரு - இயேசுவைப் பற்றி அறிந்துகொள்கின்றனர். மேலும், லூக்கா மற்றும் மாற்கு ஆகியோர் தாங்கள் எழுதவிருக்கும் நற்செய்தி பற்றி ஒருவர் மற்றவருடன் கலந்தாலோசித்திருப்பார்களா? என்றும் தோன்றுகிறது. இங்கே என்ன ஆச்சர்யம் என்றால், பவுல், லூக்கா, மற்றும் மாற்கு ஆகியோரின் எண்ணம் முழுவதிலும் இயேசு மட்டுமே நிறைந்திருக்கிறார். அப்படி என்றால், எந்த அளவுக்கு இயேசு அனுபவம் அவர்களைப் பாதித்திருக்கும்!
இன்று பல சமூக வலைதளங்களில் இளவல்களும், பெரியவர்களும் தங்கள் பணிகளுக்கு நடுவே இறைவார்த்தை அறிவிப்பதையும், இறைவார்த்தைப் பணியில் ஈடுபடுவதையும் காணும்போதும், ப்ரென்டன் வோக்ட் போன்ற இளவல்கள் கத்தோலிக்கத் திருஅவையின்மேல் கொண்ட தாகத்தாலும், இயேசு அனுபவத்தாலும் உந்தப்பட்டு செய்யும் பணிகளையும் காணும்போதும் என்னை அறியாமல் ஒரு குற்றவுணர்வு பற்றிக்கொள்கின்றது. இறையாட்சிப் பணிக்காக என்னையே அர்ப்பணம் செய்வதாகச் சொல்லும் நான் எந்த அளவுக்கு என் நேரத்தையும் ஆற்றலையும் இப்பணிக்கென செலவழிக்கிறேன்? என் ஆற்றலும் நேரமும் சிதறிப் போகக் காரணம் என்ன? அல்லது இயேசு அனுபவம் என்னைப் பாதிக்கவில்லையா? தேவையற்ற பேச்சு, பயணம், நிர்வாகம்சார் பிரச்சினைகள், கவனச்சிதறல்கள் என என் பணி பாதிக்கப்படுவது ஏன்?
இன்று லூக்கா நம் அனைவருக்கும் உந்துசக்தியாக இருக்கட்டும் என்பதே என் இறைவேண்டல்.
லூக்கா தன் நற்செய்தியை மிக அழகாக எழுதுகின்றார். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் விண்ணேற்றம் வரை உள்ள நிகழ்வுகளை, 'பயணம்' என்ற ஒற்றைக் கயிற்றில் கட்டுகின்றார். இவரே திருத்தூதப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதாலும், 'வாழ்க்கை என்பது ஒரு பயணம்' என்ற ஞானத்தை இவர் பெற்றிருந்ததாலும் இவர் இப்படிப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கடவுளின் இரக்கத்தை, இயேசுவின் இறைவேண்டலை, தூய ஆவியாரின் ஆற்றலை என இவருடைய நற்செய்தி கடவுளைப் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகின்றது. இத்திருநாளில் நாம் இவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
(அ) பிளவுபடா அர்ப்பணம்
லூக்கா நற்செய்தியாளர் பற்றிய நாவல் ஒன்றில், அவருடைய இளவயது காதலியை திருமணம் செய்யத் துடிக்கின்றார். அப்போது அக்காதலி சொல்லும் வார்த்தைகள் மிக அழகானவையாக இருக்கும்: 'நீ நிரந்தரத்திற்காகப் படைக்கப்பட்டவன். தற்காலிகத்தின்மேல் உனக்கு நாட்டம் வேண்டாம். உன் எழுத்துகள் நிரந்திரமாக வேண்டுமெனில், உன் ஆசை வார்த்தைகளைச் சுருக்கிக்கொள்!' எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். தன் பிளவுபடா அர்ப்பணத்துக்காக லூக்கா கொடுத்த விலை அதிகம். இன்று அவருடைய எழுத்துகள் நிரந்தரமாகிவிட்டன. அவருடைய எழுத்துகளில் பொதிந்துள்ள இலக்கியத் திறமும் மொழிப் புலமையும் நமக்கு வியப்பளிக்கின்றன. நாம் எடுக்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையிடம் பிளவுபடா அர்ப்பணம் கொண்டிருத்தல் நலம்.
(ஆ) வரலாற்று உணர்வு
லூக்கா, கிறிஸ்து நிகழ்வை வெறும் இறையியல் நிகழ்வாகப் பதிவு செய்யாமல், மனுக்குலத்தின் வரலாற்றில் - நேரத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு - நடந்த நிகழ்வாகப் பதிவு செய்கின்றார். 'வரலாற்று உணர்வு' நம்மை வேரூன்றியவர்களாகவும், கிளைபரப்புபவர்களாகவும் இருக்கச் செய்கின்றது. வரலாற்று உணர்வுதான் நாம் ஏதாவது ஒன்றை இந்த மனுக்குலத்திற்குச் செய்ய வேண்டும் என்று நம்மைத் தூண்டுகின்றது. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றுக்கும், நமக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. வரலாற்று உணர்வு நமக்கு எதிர்நோக்கைத் தருகின்றது. வரலாற்று உணர்வு, நாம் யாவரும் தனிமை அல்ல என்று நமக்கு உணர்த்துகிறது.
(இ) இயேசுவின்மேல் கண்கள்
தன் பணி மற்றும் பயணத்தின் தடைகள் அனைத்திலும் லூக்கா வெற்றி காணக் காரணம் அவருடைய கண்கள் மேல்நோக்கியே இருந்தன. மேலிருந்து பார்க்கும் இயேசுவின் கண்கள் வழியாக நாம் பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்தும் சிறியதாகவே தெரிகின்றது. ஆக, நாம் பெருமை பாராட்டவோ, தயங்கி நிற்கவோ எதற்கும் இடமில்லை. இயேசுவைப் பற்றிய பல தகவல்களை லூக்கா மரியாவிடம் சேகரித்ததாக திருஅவை மரபு நமக்குச் சொல்கிறது. இது லூக்காவிடம் விளங்கிய உறவு ஆற்றலைக் காட்டுகிறது. மனித உறவுகள் அல்லது தொடர்புகளே நம்மையும் நம் பணியையும் மேம்படுத்தும் என்ற லூக்காவின் அறிதல் நமக்கு வியப்பாக இருக்கிறது.
லூக்காவும், லூக்கா எழுதிய நற்செய்தியும் இன்று நம் உள்ளத்தில் நிறையட்டும்!
Saturday, October 16, 2021
தோழமை-பங்கேற்பு-பணி
எசாயா 53:10-11 எபிரேயர் 4:14-16 மாற்கு 10:35-45
தோழமை-பங்கேற்பு-பணி
இன்றைய ஞாயிறு நம் தாய்த்திருஅவை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்ற ஞாயிறு. கடந்த ஞாயிறன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மாமன்றம் 2021-2023: கூட்டொருங்கியக்கத் திருஅவை – தோழமை-பங்கேற்பு-பணி' என்னும் மாமன்றத்தை உரோமையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அகில உலகிலும் அனைத்து மறைமாவட்டங்களிலும் தலத்திருஅவையின் தலைவராகிய ஆயர் தலைமையில் நாம் இன்று மாமன்றத்தைத் தொடங்குகின்றோம். மாமன்றத்தின் தலத்திருஅவைத் தொடக்கமாகவும், மாமன்றத்தின் முதல் படியான மறைமாவட்ட நிலை மாமன்றத்தின் (அக்டோபர் – ஏப்ரல் 2022) தொடக்கமாகவும் இது அமைகின்றது.
'மாமன்றம்' என்பது 'சினட்' என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப்பதம். இச்சொல்லின் கிரேக்க வேர்ச்சொல்லுக்கு, 'இணைந்து பயணம் செய்தல்' அல்லது 'பாதையில் நடத்தல்' என்பது பொருள்.
'இணைந்து பயணம் செய்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' மற்றும் 'தோழமை-பங்கேற்பு-பணி' என்னும் சொற்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.
இயேசுவும் அவருடைய சீடர்களும் 'எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள்' (காண். மாற் 10:32). எருசலேம் என்பது இயேசுவின் பணிவாழ்வின் இடம்சார் இலக்காகவும், அவருடைய பணி முடிந்து விண்ணேற்பு அடையும் நிகழ்வாகவும், திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்கும் தொடக்கப்புள்ளியாகவும் இருக்கின்றது. ஆக, எருசலேம் நோக்கிய பயணம் இயேசுவுக்கும் திருத்தூதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தன் பயண இலக்கு நெருங்குகின்ற வேளையில் இயேசு தன் பாடுகள் மற்றும் இறப்பை மூன்றாம் முறையாக அறிவிக்கின்றார். முதல் இரண்டு முறை அவர் அறிவித்தபோது சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டது போல இம்முறையும் தவறாகவே புரிந்துகொள்கின்றனர். முதல் முறை அறிவித்தபோது, பேதுரு இயேசு துன்பம் ஏற்பதைத் தடுக்கின்றார். இரண்டாம் முறை அறிவித்தபோது, சீடர்கள் தங்களுக்குள்ளே, 'யார் பெரியவர்?' என்ற கேள்வியை எழுப்பி போட்டி போடுகின்றனர். மூன்றாம் முறை அறிவித்தபோது, திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று, 'நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்' என்று வேண்டுகின்றனர்.
யூதச்சிந்தனையில் அரசரின் அரியணை என்பது முக்கியமானது. அந்த அரியணையும், அரியணையின் வலமும் இடமும் அதிகார மையங்களாக இருந்தன (காண். 1 அர 2:19ளூ திபா 110:1). இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் உரோமை அரசை வீழ்த்தக் கூடிய அரச பயணம் என்று திருத்தூதர்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்வதோடு, அதிகாரத்தின்மேல் ஆவல் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர் திருத்தூதர்கள். அவர்களின் புரிதலைச் சரிசெய்ய முயல்கின்ற இயேசு, 'துன்பக் கிண்ணம்,' மற்றும் 'திருமுழுக்கு' என்னும் இரு முதல் ஏற்பாட்டு உருவகங்கள் வழியாக அவர்களுக்குக் கற்பிக்கின்றார். 'துன்பக் கிண்ணத்தில் பருகுதல்' என்பது 'துன்பங்களில் பங்கேற்பதையும்,' 'திருமுழுக்கு' என்பது 'இரத்தத்தினால் இயேசு பெறவிருக்கின்ற திருமுழுக்கையும்' குறிக்கின்றது. திருத்தூதர்கள் கிண்ணத்தில் பங்கேற்கவும், திருமுழுக்கு பெறவும் தயாராக இருப்பதாகச் சொல்கின்றனர். பின்நாள்களில் அவர்கள் துன்பம் ஏற்கின்றனர். இயேசு சற்றே சிந்தனையை உயர்த்தி, 'இடம்' என்பதை இறுதிக்கால நிகழ்வோடு பொருத்திப் பேசுகின்றார். தொடர்ந்து, 'அதிகாரம் என்பது தொண்டு செய்வதில் இருக்கிறது என்றும்,' அல்லது 'தொண்டு செய்பவரே ஆற்றல் பெற்றவராக இருக்கின்றார்' என்றும் அறிவுறுத்துகின்றார். மண்ணுலகம் அதிகாரம் என்பதை நிமிர்ந்து அரியணையில் அமர்வது எனப் புரிந்துகொள்கின்ற வேளையில், 'அதிகாரம்' என்பது குனிந்து பணியாற்றுவதில் அடங்கியுள்ளது என விளக்குகிறார் இயேசு. மேலும், மானிட மகனின் வருகையின் இலக்கும் பணி செய்வதும், இறுதியில் தம் உயிரைக் கொடுப்பதுமே எனத் தெளிவுபடுத்துகின்றார்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 53:10-11) துன்புறும் ஊழியன் பாடல்களில் நான்காவதாக உள்ள பாடலின் (எசா 52:13-53:12) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. 'துன்புறும் ஊழியன் யார்?' என்பதற்கான விடை இன்று வரை தெளிவாக இல்லை. கிறிஸ்தவப் புரிதலில், 'துன்புறும் ஊழியன்' என்பவர் வரவிருக்கின்ற மெசியாவையும் (இயேசு) அவர் அனுபவிக்கின்ற துன்பத்தையும் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்கின்றோம். துன்புறும் ஊழியன் அநீதியாகத் தண்டிக்கப்படுகின்றார், துன்பம் அடைகின்றார், நிந்தையும் அவமானமும் அவர்மேல் சுமத்தப்படுகின்றது. இத்துன்பத்தை அவர் மற்றவர்களுக்காக அடைகின்றார். துன்பத்திலும் இறைவனின் துணையைக் கண்டுகொள்கின்றார். ஆக, துன்புறும் எவரும் தன் முகத்தை இத்துன்புறும் ஊழியனின் முகத்தோடு பொருத்திப் பார்க்க முடியும்.
இரண்டாம் வாசத்தில் (காண். எபி 4:14-16), எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைத்து, இயேசுவின் இக்குருத்துவத்தின் இயல்பு அவருடைய இரக்கத்தில் இருக்கிறது என முன்மொழிகின்றார். முதல் ஏற்பாட்டில் தலைமைக்குரு என்பவர் மக்களிடமிருந்து தனியாக இருக்கக் கூடியவர். ஏனெனில், ஆலயத்தின் திருத்தூயகத்திற்குள் அவர் நுழைவதால் தூய்மையற்ற மக்களிடமிருந்தும், இடத்திலிருந்தும் அவர் எப்போதும் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்வார். மேலும், மற்றவர்களுடை பாவம் அல்லது வலுவின்மையை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், இயேசுவோ தன்னை மக்களோடு மக்களாக இணைத்துக்கொள்வதுடன், மக்களின் வலுவின்மை, நொறுங்குநிலை கண்டு அவர்கள்மேல் இரக்கம் காட்டுகின்றார். நம்மைப் போலவே சோதனைகளுக்கும் உட்படுகின்றார்.
மேற்காணும் மூன்று வாசகங்களும், மாமன்றத்தின் குறிச்சொற்களான, 'இணைந்து வழிநடத்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' 'தோழமை-பங்கேற்பு-பணி' ஆகியவற்றை எப்படி முன்வைக்கின்றன?
(அ) 'இணைந்து வழிநடத்தல்'
இயேசு தன் திருத்தூதர்களுடன் எருசலேம் நோக்கி இணைந்து வழிநடக்கின்றார். அப்படி வழிநடக்கும்போது அவருடன் மக்கள் கூட்டமும் இணைகின்றது. ஆக, திருஅவை என்பது 'கூட்டம்-திருத்தூதர்கள்-இயேசு' என்னும் குழுமத்தைக் குறிக்கிறது. இந்தக் குழுமத்தில் மூன்று பேரும் இணைதல் வேண்டும். கூட்டம் இல்லாமல், திருத்தூதர்களும் இயேசுவும் மட்டும் இருந்தால் திருஅவை என்பது தனிப்பட்ட ஒரு கருத்தியல் எனச் சுருங்கிவிடும். திருத்தூதர்கள் இல்லாமல் கூட்டமும் இயேசுவும் மட்டும் இருந்தால் அது வெறும் சமயமாக மாறிவிடும். இயேசு இல்லாமல் திருத்தூதர்களும் கூட்டமும் மட்டும் இருந்தால் அது வெறும் கொள்கையளவில் கூடிய கும்பலாக மாறிவிடும். கூட்டம்-திருத்தூதர்கள்-இயேசு என்னும் இணைதலே திருஅவையை உருவாக்குகின்றது. மேலும், இவர்கள் ஒரே இடத்தில் நிற்கவில்லை. மாறாக, இணைந்து நடக்கின்றனர். துன்புறும் ஊழியன் தன் துன்பம் ஏற்றலின் வழியாக மற்றவர்களுடன் பயணம் செய்கின்றார். இயேசு கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வந்ததும், நமக்கு இரக்கம் காட்டித் தன் உயிரை ஈந்து சிலுவையில் இறந்ததும் பயணமே. இணைந்து நடத்தல் என்பது பயணத்தையும், வளர்ச்சியையும், இலக்கு நோக்கிய தெளிவையும் குறிக்கிறது. இன்று நாம் இணைந்து நடக்கும் இந்தப பயணத்தில் நம் துணைவர்கள் அல்லது இணையர்கள் யார்? இன்று நம் தலத்திருஅவையில் ஆயர், அருள்பணியாளர்கள், துறவியர்கள், இறைமக்கள் என அனைவரும் இணைந்து வழிநடக்கின்றோம். நமக்கு அருகில் இருக்கும் மற்றவர்களும் இந்தப் பயணத்தில் நம்மோடு இணைந்திருக்கிறார்கள்.
(ஆ) 'கூட்டொருங்கியக்கம்'
கூட்டொருங்கியக்கம் ('சினடாலிட்டி') என்பது ஓர் அதிகார உடைப்பு. அல்லது அதிகார மேன்மை. அதிகாரம் என்பது பல நேரங்களில் தனிநபர் அல்லது ஒருநபர் சார்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆனால், உண்மையில் அதிகாரம் அல்லது ஆற்றல் என்பது பல கைகள் இணைதலில்தான் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை வழிநடத்தக்கூடிய முதல்வர் அல்லது தலைவர் ஒருவர்தான் என்றாலும், அவருடைய ஒற்றைக் கைதான் என்றாலும், அந்த ஒற்றைக் கையைத் தேர்ந்தெடுத்தது மக்களாட்சியில் அவருக்காக வாக்களித்த பல கைகள்தாம். ஆக, ஒரு கையின் ஆற்றல் பல கைகளிலிருந்து வருகின்றது. அதிகாரம் என்பது எப்போதும் அருளப்படுவது. ஒருவர் அதிகாரத்தை தானே வலிந்து பற்றிக்கொள்ள நினைத்தாலும், மற்றவர்கள் அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதிகாரத்திற்கு அர்த்தம் இல்லை. ஆக, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவே அதிகாரம் என்பது கூட்டொருங்கியக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கூட்டொருங்கியக்கத்தில் பலரின் கைகள் இணைவதால் அதிகாரம் மற்றும் ஆற்றல் இன்னும் அதிகம் வலுப்பெறுகிறது. மேலும், கூட்டொருங்கியக்கத்தில் ஒருவகையான நகர்வு அல்லது வேகம் அடங்கியிருக்கிறது. இயேசு கூட்டொருங்கியக்கத்தின் பொருளை உணர்ந்தவராக இருக்கின்றார். தானே தனித்திருந்து செயல்படாமல் தன்னோடு இணைந்து செயல்படுவதற்கென திருத்தூதர்களை ஏற்படுத்துகின்றார். திருத்தூதர்களிடம் தன் இயக்கம் மற்றும் நகர்வு பற்றி ஒளிவுமறைவின்றி அறிவிக்கின்றார். தன் துன்பக் கிண்ணத்திலும் திருமுழுக்கிலும் அவர்களை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தொண்டு செய்ய வேண்டும் என்றும், பணியாளராக இருக்க வேண்டும் என்றும் கற்பிக்கும் அவர், தானே தன் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவுகின்றார் (காண். யோவா 13).இன்று நம்மிடம் கூட்டம் இருக்கிறது, இயக்கம் இருக்கிறது. ஆனால், கூட்டொருங்கியக்கம்தான் குறைந்த அளவில் உள்ளது. இணைந்து செல்லும்போது நம் தான்மை பாதிக்கப்படும் என்ற நிலையில் நாம் தனியாக இருக்கவே விரும்புகிறோம். தனிமையான அதிகார மையம், மக்களிடமிருந்து தள்ளியே நிற்கும் மனப்பான்மை என்னும் தடைகள் இன்று தாண்டப்பட வேண்டும்.
(இ) தோழமை-பங்கேற்பு-பணி
16வது மாமன்றத்தின் குறிச்சொற்களாக இம்மூன்று வார்த்தைகள்தாம் உள்ளன. 'தோழமை' (அல்லது 'கூட்டுறவு') என்பது மூவொரு இறைவனின் அன்பை மையமாகக் கொண்ட ஒரு கருத்துரு. மூவொரு இறைவனின் அன்பினால் கட்டப்பட்ட திருஅவை அதே அன்பில் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கின்றது. இயேசு தனிப்பெரும் தலைமைக்குருவாக மாறும் நிலை அவருடைய தோழமை உணர்வினால் சாத்தியமாகிறது. இயேசுவின் தோழமை இரக்கப் பெருக்காக வெளிப்படுகின்றது. அவர் நம் வலுவின்மையில் பங்கேற்று நம்மேல் இரக்கம் காட்டுவதால் அவருடைய அரியணையை நாம் துணிவுடன் அணுகிச் செல்ல முடியும். ஏனெனில், அவருடைய அரியணை அச்சத்தையும், பதைபதைப்பையும் தருவதில்லை. மாறாக, நமக்கு உற்சாகத்தையும் உடனிருப்பையும் தருகின்றது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நாம் நம் நடுவே இருக்கும் தோழமையைக் கொண்டாடுவதோடு, நம்மைச் சுற்றி வாழும் பிற சபை மற்றும் சமயச் சகோதர சகோதரிகளோடும் தோழமை பாராட்ட வேண்டும். தோழமைக்கு நம் அரியணை தடையாக இருக்கலாம். நம் அரியணை மற்றவர்களை விடத் தள்ளி இருப்பதாலும், உயர்ந்து நிற்பதாலும் மற்றவர்களிடமிருந்து ஒரு தனிமையை ஏற்படுத்தலாம். ஆனால், இணைந்து செல்கின்ற பயணத்தில் தோழமை கொள்ள நாம் நம் அரியணையை விட்டு இறங்க வேண்டும். அருள்நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழ வேண்டும். அனைவருடனும் கரம் கோர்க்க வேண்டும். ஏனெனில், மற்றவர்கள் இல்லாத இடத்தில் வெறும் அரியணை மற்றும் இருக்கையினால் ஒரு பயனும் இல்லை.
'பங்கேற்பு' என்பது நாம் அருளடையாளக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை அல்ல, மாறாக, பணிநிலைகளில் பங்கேற்பதைக் குறிக்கிறது. பங்கேற்பு எந்தவொரு செயலையும் எளிதாக்குகிறது. ஒரு கரம் தூக்க வேண்டிய சுமையை இரு கரங்கள் இணைந்து தூக்கினால் சுமை எளிதாகிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களைப் பங்கேற்பாளர்களாக அழைக்கின்றார். மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு விலையாகத் தன் உயிரை அளிக்கவும் வந்துள்ளார் எனில், திருத்தூதர்களும் இறைமக்களும் இயேசுவின் இந்த மீட்புச் செயலில் பங்கேற்பாளராக அமைகின்றனர்.
தோழமை மற்றும் பங்கேற்பு ஆகியவை திருஅவையில் இருக்கக் காரணம் பணியே. ஏனெனில், பணி இல்லை என்றால், திருஅவை வெறும் தற்சார்பு அல்லது தன்குவி நிறுவனமாக உறைந்துவிடும். சமூக, அரசியல், பண்பாட்டு, பொருளாதார விளிம்புநிலையில் உள்ள மக்களைத் தேடிச் செல்வதே பணி. முதல் வாசகத்தில், இந்தப் பணியை துன்புறும் ஊழியன் செய்கின்றார். மற்றவர்களின் தீச்செயல்களுக்காகத் தன்னையே துன்பத்துக்கு உட்படுத்துகின்றார்.
இறுதியாக,
இன்று நம் மறைமாவட்டத்தில் மாமன்றம் தொடங்கப்படும் நிகழ்வின் அடையாளமாக, நம் பங்குத்தளத்திலும், நிறுவனங்களிலும், குழுமங்களிலும், அன்பியங்களிலும் குடும்பங்களிலும் பின்வருவனவற்றை நாம் செய்யலாம்:
(1) மாமன்ற இறைவேண்டல். திருத்தந்தை அவர்கள் இயற்றியுள்ள தூய ஆவியார் இறைவேண்டலை நாம் செபிக்க வேண்டும்.
(2) நம் பங்குத்தளங்களில், நிறுவனங்களில், நம் இல்லங்களிலும், நம் செயல்திறன் பேசிகளில் 'மாமன்ற இலச்சினையை' (லோகோ) நிறுவ வேண்டும்.
(3) இன்று ஒரு ஐந்து பேரிடமாவது தனிப்பட்ட முறையில் இந்த மாமன்றம் பற்றிப் பேச வேண்டும்.
(4) கூட்டொருங்கியக்கம் பற்றிய நம் கருத்துக்களை தலத்திருஅவை ஆயருக்கும், ஆயரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
(5) மாமன்ற கலந்தாலோசித்தலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
(6) நம் பங்குத்தளத்திலும், நிறுவனங்களிலும், குழுமங்களிலும், அன்பியங்களிலும், குடும்பங்களிலும் கூட்டொருங்கியக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக, ஒருவர் மற்றவருடன் உரையாடவும், மற்றவரின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும் வேண்டும்.
கூட்டொருங்கியக்கத்தை நோக்கிய நம் பயணம் இனிதே நிறைவுற இறைவன் நம்முடன் உடன்வருவாராக!
Friday, October 15, 2021
தூய ஆவியார்
தூய ஆவியார்
லூக்கா நற்செய்தியை, 'தூய ஆவியார் நற்செய்தி' என்றும் அழைப்பதுண்டு. தூய ஆவியாரின் இயக்கத்திலேயே எல்லாம் நடைபெறுவதாக - இயேசு பிறப்பு முன்னறிவிப்பு, மரியா கருவுறுதல், மரியா-எலிசபெத்து சந்திப்பு, இயேசுவின் பணித் தொடக்கம், பணி நிறைவு – லூக்கா பதிவு செய்கிறார். திருத்தூதர் பணிகள் நூலும் முழுக்க முழுக்க தூய ஆவியாரின் செயல்பாடுகளைப் பதிவு செய்வதாகவே உள்ளது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தூய ஆவியாரைப் பற்றிய இரு தகவல்களை லூக்கா தருகின்றார்.
'தூய ஆவியாருக்கு எதிரான பாவம் மன்னிக்கப்படாது' என்பது முதல் செய்தி. இந்த வாக்கியத்தின் பொருள் இன்று வரை நமக்கு மறைபொருளாகவே உள்ளது. கடவுளால் மன்னிக்க முடியாத பாவம் ஒன்று இருக்க முடியுமா? என்ற கேள்வியை நம்மிடம் இது எழுப்புகின்றது. 'கடின உள்ளம்,' 'கடவுளை நம்பாமை,' 'கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தல்' என்று பல பொருள்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், தூய ஆவியார் பற்றிய கண்டுகொள்ளாத்தன்மையை இது குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, திருமுழுக்கின்போதும், உறுதிப்பூசுதலின் போதும் நமக்கு வழங்கப்படுகின்ற ஆவியாரை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகின்றோம். தூய ஆவியார் பெருவிழா அன்று மட்டுமே நாம் அவரை நினைவுகூர்கின்றோம். ஆனால், நம் வாழ்வின் இயக்கமாக இவர் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்தல் பெரிய மாற்றங்களை நம்மில் கொண்டுவரும். ஆக, தூய ஆவியாரைப் பற்றிய கண்டுகொள்ளாத்தன்மையே கடவுள் மன்னிக்க இயலாத பாவம் எனப் புரிந்துகொள்வோம்.
இரண்டாவதாக, இயேசு, நம் வாழ்வின் துன்பகரமான பொழுதுகளில், இக்கட்டான நேரத்தில், நாம் தனித்து விடப்பட்ட நேரத்தில் தூய ஆவியார் 'நமக்குக் கற்றுத் தருவதாக' முன்மொழிகின்றார். 'கற்றுத்தருதல்' என்பது விவிலியத்தில் மிக முக்கியமானது. அதாவது, கற்றுத்தருதலின் வழியாக கடவுள் தன் உடனிருப்பை நமக்குக் காட்டுகின்றார்.
தூய ஆவியாரின் உடனிருப்பை இயேசு தன் வாழ்வில் தொடர்ந்து உணர்ந்தார்.
நாமும் அதே உணர்வில் பயணிக்க முன்வருவோம்.
Thursday, October 14, 2021
அச்சம்
அச்சம்
இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் மிக அழகானதொரு வார்த்தைப்படத்தை லூக்கா பதிவு செய்கின்றார்: 'ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்'. இன்று நாம் ஏதாவது ஒரு செபக்கூட்டம் அல்லது சிறப்பு நிகழ்வு வைக்க வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கில் முயற்சிகள் எடுத்து விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு நிகழ்வுக்கு மக்களை வரச் சொல்லுமாறு நாம் ஆயிரக்கணக்கில் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றோம், பதாகைகள் வைக்கின்றோம், நினைவூட்டல் அளிக்கின்றோம். இருந்தாலும் நாம் கூடும் இடங்கள் (வெகு சில இடங்கள் தவிர) அனைத்திலும் மக்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கின்றது. ஆனால், எந்தவொரு விளம்பரமும், நினைவூட்டலும், பதாகைகளும் இல்லாமல் இயேசுவைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். தனிவரம் அல்லது அருள் மறைந்து நிறுவனமயம் தொடங்கும்போது ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
இன்றைய நற்செய்தி வாசகம், 'அச்சம்' என்ற உணர்வை நாம் எப்படி கையாளுவது எனக் கற்றுத்தருகிறது. 'அச்சம்' ஒரு நடுநிலையான உணர்வு. நேர்முக அச்சம் நம்மைக் கவனமுள்ளவர்களாக இருக்க உதவி செய்வதுடன், நம் வாழ்க்கையைக் காத்துக்கொள்ள உதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக, சாலையில் செல்லும்போது எதிர்வரும் வாகனங்கள் பற்றிய அச்சமே நாம் சாலைமேல் கவனமாக இருக்க நம்மைத் தூண்டுகிறது. எதிர்மறையான அச்சம் நம்மை முடக்கிப் போடுகிறது. எடுத்துக்காட்டாக, பொதுவெளியில் பேசுவதை அச்சமாகக் கருதுகின்ற குழந்தை இறுதி வரையில் பொதுவெளியைக் கண்டு பயந்துகொண்டே இருக்கின்றது.
மூன்று நிலைகளில் அச்சம் நமக்கு வருகின்றது என்று இன்றைய நற்செய்தி உணர்த்துகின்றது:
(அ) அடுத்தவரின் தீமை அல்லது தீய எண்ணம்
எடுத்துக்காட்டாக, எனக்கு அடுத்த அறையில் இருக்கும் ஒருவர் எனக்கு எதிராகத் தீங்கு செய்வார் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். மனிதர்கள் நாம் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டிருந்தாலும் நம் எண்ணம், செயல் ஆகியவற்றில் தீமை நிறைந்து நிற்கின்றது. நாம் அதை முயற்சி எடுத்து வெற்றி கொள்ள வேண்டும். 'பரிசேயரின் புளிப்பு மாவு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்' என்கிறார் இயேசு. இங்கே 'புளிப்பு மாவு' என்பது எதிர்மறையான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, புளிப்பு மாவு தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு நல்ல மாவு போல இருந்தாலும் உள்புறத்தில் புளிப்பாக இருக்கின்றது. மேலும், அது எளிதில் நல்ல மாவையும் புளிப்பு மாவாக்கிவிடும். ஆக, அடுத்தவரில் இருக்கும் புளிப்பு என்னும் தீமை நமக்கு அச்சம் தருகின்றது. இந்த அச்சத்தைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்? எச்சரிக்கையாக, முன்மதியோடு இருக்க வேண்டும்.
(ஆ) இரகசியம் வெளியிடுதல்
நம்மைப் பற்றிய இரகசியம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நம்மை ஒருவிதமான அச்சம் பற்றிக்கொள்கின்றது. ஏனெனில், நம் வலுவின்மை மற்றவர்களுக்குத் தெரிந்தவுடன் நம் வலிமை நம்மைவிட்டு எளிதில் அகன்றுவிடுகிறது. இன்னொரு பக்கம், மற்றவர்கள் நமக்குத் தெரிவித்த இரகசியத்தை நாம் வெளியிடும்போதும் நாம் அஞ்சுகிறோம். ஏனெனில், அது நமக்கே தீங்காக முடியும். இன்றைய உலகில் இரகசியம் என்று எதுவும் இல்லை. நாம் இருளில் செய்வது வெளிச்சத்தில் தெரியும். உள்ளறையில் காதோடு காதாய்ப் பேசுவது கூரை மீதிருந்து அறிவிக்கப்படும். இந்த அச்சத்தை நாம் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? நம் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான இயல்பு இருக்க வேண்டும். நமக்கு நாமே முரண்படுபவர்களாக வாழக் கூடாது.
(இ) தாழ்வாக மதிப்பிடுதல்
'சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்' என்கிறார் இயேசு. இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் எனில், ஐந்தாவது குருவி இலவசக் குருவி, அல்லது கொசுறுக் குருவி. மற்றவர்களின் இரக்கத்தில் இருக்கின்ற அந்தக் கொசுறுக் குருவியே இறைவனின் பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கிறது எனில், இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள்! ஆக, நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அல்லது குறைவான மதிப்பீட்டைக் களைதல் அவசியம். 'நான் இதுதான்!' 'நான் இப்படித்தான்!' என்று தன்னையே உணர்பவர் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஆக, 'சிட்டுக்குருவியை விட நான் மேலானவர்' என்ற உணர்வு என் அச்சத்தைக் களைகிறது.
இன்று நாம் அவிலா நகர் புனித தெரசாவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். காட்சித் தியானத்திலும், இறைமனித இணைவிலும் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கியவர் இவர். இவருடைய ஆன்மிக அனுபவம் அளப்பரியது. இறைவனின் துணையுடன் இருப்பவர்கள் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்றும், பொறுமை அனைத்தையும் வெல்லும் என்றும் உலகறிய அறிவித்தவர் இவர். மேலும், நம் அனைவருடைய கிணறுகளும் வற்றிப் போகின்ற சூழல் அல்லது வெறுமை வரும், அந்த இடத்திலும் இறைவன் செயலாற்றுகின்றார் என்று நம்பிக்கை ஒளியைத் தந்தவர் இவர்.
நம் அச்சம் மற்றும் முற்சார்பு எண்ணம் நம்மை விட்டு அகன்றால், சிட்டுக்குருவிகள் போல நாம் கட்டின்மையோடு இலகுவாகப் பறக்க முடியும்.
Wednesday, October 13, 2021
அறிவுக்களஞ்சியத்தின் திறவுகோல்
அறிவுக்களஞ்சியத்தின் திறவுகோல்
இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், பொதுவாக தன் சமகாலத்தவரையும், குறிப்பாக திருச்சட்ட அறிஞரையும் சாடுகின்றார். 'அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் வைத்துக்கொண்டு, நீங்களும் நுழைவதில்லை. நுழைவோரையும் தடுக்கிறீர்கள்!' என்கிறார்.
கடந்த 10ஆம் தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாமன்றம் ஒன்றைத் தொடங்கி வைத்தார். 'கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றம் 2021-2023' என்று அழைக்கப்படும் இம்மாமன்றம் கூட்டப்படுவது ஒரு புரட்சியாக இருக்கிறது. குருக்கள்மையத் திருஅவையின் போக்கை மாற்ற விழைகின்றார் திருத்தந்தை. இது ஒரு நல்ல முயற்சி. 'இவ்வளவு நாள்களாக நாம் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை வைத்துக்கொண்டு நாமும் நுழையாமல், நுழைவோரையும் தடுத்துக்கொண்டிருந்தோமோ!' என்று எண்ணத் தோன்றுகிறது. 'அருள், அருள்பணியாளர், அருளடையாளம்' என்று நம் திருஅவை மிகவே சுருங்கிவிட்டது. மாறிவரும் இவ்வுலகில் நம்மையே மறுஆய்வு செய்து பார்ப்பதும், நம்மைச் சுற்றி நடப்பவர்களுக்கும், நடப்பவற்றுக்கும் செவிகொடுப்பதும் காலத்தின் கட்டாயம்.
மாமன்றம் நம் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகின்றது
நாம் அதிகமாகக் கேட்கவும், உரையாடவும், ஆவியாரின் வழிகாட்டுதலைத் தேர்ந்து தெளியவும் அழைக்கப்படுகின்றோம்.
இயேசுவின் கடிந்துரையைக் கேட்ட அவருடைய சமகாலத்தவர்கள் அவர்மேல் பகைமையுணர்வு கொள்கின்றனர்.
ஆனால், நம் காதுகளையும் கண்களையும் திறந்து வைத்தால் அனைவரும் இணைந்து அறிவுக் களஞ்சியத்துக்குள் நுழையலாம்.
Tuesday, October 12, 2021
Monday, October 11, 2021
உட்புறத்தில் உள்ளதை
உட்புறத்தில் உள்ளதை
பரிசேயர் ஒருவர் தன்னோடு உணவருந்துமாறு இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவும் உடனே செல்கின்றார். இயேசு கைகளைக் கழுவாமல் உணவருந்த அமர்கிறார். பெருந்தொற்றுக்குப் பின்னர் உள்ள சூழலில் இதை நாமும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மைப் போலவே பரிசேயரும் வியப்படைகின்றார்.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு இரு போதனைகளை முன்வைக்கின்றார்:
ஒன்று, வெளிப்புறத் தூய்மையை விட உள்புறத் தூய்மை அவசியம்.
இரண்டு, நம் உட்புறத்தில் உள்ளது அனைத்தும் தர்மமாகக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த இரண்டும் இருந்தால் அனைத்தும் தூய்மையாக இருக்கும் என்கிறார் இயேசு.
பரிசேயர்கள் தூய்மை-தீட்டு என்னும் புலங்களைப் பயன்படுத்தக் காரணம் உடல்சார் அல்லது மருத்துவம்சார் தூய்மையால் அல்ல, மாறாக, தங்கள் உள்ளத்தில், தங்களைத் தூய்மையானவர்கள் என நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் தீட்டானவர்கள் என்று கருதினார்கள். அவர்களுடைய பார்வையைச் சரிசெய்ய நினைக்கின்றார் இயேசு.