Thursday, May 27, 2021

அத்திமரம்

இன்றைய (28 மே 2021) நற்செய்தி (மாற் 11:11-26)

அத்திமரம்

இன்றைய நற்செய்தி மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: (அ) அத்திமரத்தைச் சபித்தல், (ஆ) ஆலயத்தைத் தூய்மைப்படுத்துதல், (இ) அத்திமரம் பற்றிய போதனை. இலக்கிய வகையில் இதை 'சான்ட்விச் அமைப்பு' என அழைக்கின்றனர்.

இயேசு ஏன் அத்திமரத்தைச் சபிக்கின்றார்?

இயேசு பசியாக இருக்கின்றார். அத்திமரத்தின் அருகில் செல்கின்றார். இலைகள் அதிகம் இருக்கின்றன அன்றி அங்கே காய்கள் இல்லை. உடனடியாக அதைச் சபிக்கின்றார். அது காய்க்கும் காலம் இல்லை என்று பதிவு செய்கின்றார் மாற்கு. இங்கே, 'அத்திமரம்' என்பது யூதர்களின் தோராவுக்கான (சட்ட நூல்கள்) உருவகம் என்றே பார்க்கப்படுகின்றது. தோரா கனிதரவில்லை. மேலும், மெசியாவின் வருகைக்கென எந்தக் குறிப்பிட்ட காலமும் இல்லை. அவர் எப்போதும் வரலாம்.

இயேசு ஏன் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகின்றார்?

ஆலயம் இறைவேண்டலுக்கான இல்லமாக இல்லாமல் கள்வர் குகையாக மாறிவிட்டதால் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகின்றார்.

ஆக,

இந்த நிகழ்வில் தன் சமகாலத்து யூதர்கள் மேன்மையாகக் கருதிய இரு அடையாளங்களை – தோரா, ஆலயம் - எடுத்து, அவை பிறழ்வுபட்டுப் போயிருப்பதையும், பலன்தராமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

ஆனால், சீடர்கள் இந்தக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளவில்லை.

மாற்கு நற்செய்தியில் நாம் காணும் சீடர்கள் இயேவைப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். இவ்வளவு பெரிய செயலை இயேசு செய்திருந்தாலும், அவரை 'ரபி' (போதகர்) என்றே அழைக்கின்றனர்.

இந்த நாளின் சிந்தனையாக நாம் எதை எடுத்துக்கொள்வது?

'கனி தருவது'

அதாவது, மரத்தின் இருத்தல் கனி தருதலில்தான் நிறைவு பெறுகிறது.

சில நேரங்களில் நாம் கனிதர இயலாமல் இருக்கலாம்.

சில நேரங்களில் நாம் கனிதர மறுக்கலாம்.

இரண்டையும் இயேசு கண்டிக்கிறார்.

கனிதர இயலாமல் இருப்பவர்கள் கனிதரக் கூடிய நிலைக்கு தங்களையே தகுதியாக்கிக்கொள்ள வேண்டும்.

கனிதர மறுப்பவர்கள் கனிதர முன்வர வேண்டும்.


1 comment:

  1. “ கனி தருவது!” ஒரு மரத்தின் இருத்தல் கனிதருவதிலும் அதை உணவாக்கிக் கொள்ளப் பறவைகள் தேடி வருவதிலுமே இருக்கிறது. சில நேரங்களில் பல காரணங்களுக்காக மரம் கனி தர மறுக்கலாம்...... கனி தர இயலாமலும் போகலாம். இயேசு இப்படிப்பட்ட மரங்களைக் கண்டிக்கிறார். என் “ இருத்தலின்” பயனே நான் எத்தனை பேர் என்னிடம் வந்து போகும் மரமாக நிற்கிறேன் என்பதில் தான். அது இல்லை எனில் என் ஆற்றலும்,சுவாசமும் வீணே! என எடுத்துரைக்கவரும் ஒரு பதிவு. என்னைப் பார்த்து இயேசு கண்டிக்கும் முன் கனிதரும் நிலைக்கு என்னைத்தகுதிப்படுததவும், கனிகளை ஒன்றிரண்டு என்ற எண்ணிக்கையில் அல்ல.. கொத்துக் கொத்தாகக் கொடுக்கவும்,என்னிடம் வருவோர் பசியாறவும் என்னை ஒரு கருவியாக மாற்ற வரங்கள் தர வேண்டுகிறேன் இயேசுவிடம்! நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு என்று நாளும் புரிய வைக்கும் தந்தை யேசுவுக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete