Wednesday, May 26, 2021

எல்லாம் இரட்டையாய்

இன்றைய (27 மே 2021) முதல் வாசகம் (சீஞா 42:15-25)

எல்லாம் இரட்டையாய்

'எல்லாம் இரட்டையாய் உள்ளன. ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை. ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவு செய்கிறது.'

இயற்கையில் காணப்படும் கடவுளின் மாட்சிக்குப் புகழ்பாடும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் மேற்காணும் வார்த்தைகளோடு புகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.

நாம் காணும் யாவும் இரட்டையாய் உள்ளன. அல்லது இரட்டைத்தன்மையை நாம் கண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதையே சபை உரையாளர், 'ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர்' என்கிறார் (காண். சஉ 7:18). ஏனெனில், சபை உரையாளரைப் பொருத்தவரையில் வாழ்வில் அனைத்தும் இரட்டையாகவே உள்ளன: பிறப்பு-இறப்பு, நடவு-அறுவடை, கொல்தல்-குணப்படுத்துதல், இடித்தல்-கட்டுதல், அழுகை-சிரிப்பு, அன்பு-வெறுப்பு, போர்-அமைதி (காண். சஉ 3:1-8).

பல நேரங்களில் நாம் ஒற்றையாகப் பார்க்கவும், ஒற்றையாக்கிப் பார்க்கவும் விரும்புகிறோம். அல்லது இரட்டைத்தன்மையை மறுக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒளியை நாம் உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், இருள் இருந்தால்தான் ஒளியை அறிய முடியும். உண்மையை நாம் உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், பொய்மை இருந்தால்தான் உண்மைக்குப் பொருள் இருக்கிறது. உடல்நலத்தை உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், உடல்நலமின்மையும் நம் வாழ்வின் அன்றாட எதார்த்தம்.

மனிதர்களாகிய நாமும் எப்போதும் இரட்டை மனிதர்களே.

இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் இரட்டைத் தன்மை மூன்று விடயங்களில் காட்டப்படுகிறது. இயேசு பார்வையற்ற ஒரு நபருக்குப் பார்வை தருகின்றார்.

(அ) பார்வையற்ற ஒரு நபர் பார்வை பெறுகின்றார். ஒளி இழந்த நிலையிலிருந்து ஒளி பெற்ற நிலைக்குக் கடந்து போகின்றார் பார்த்திமேயு. நம் அனைவருக்குமே இது பொருந்தும். நாமும் பல நேரங்களில் ஒளி இழந்த நிலையில் இருக்கின்றோம். பின் தெளிவு பெற்றவர்களாக ஒளி அடைந்த நிலைக்குக் கடந்து செல்கின்றோம்.

(ஆ) 'பார்வையற்ற நபரை அதட்டிய மனிதர்கள்' சற்று நேரத்தில், 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்று அழைக்கின்றனர். இவர்கள் பொய்யர்களா? முரண்பட்டுச் செயல்படுபவர்களா? இல்லை! இரண்டும் எதார்த்தம். முதலில் அதட்டியதும் இவர்கள்தாம். பின் ஆறுதல் சொல்லியதும் இவர்கள்தாம். நம்மிலும் குணத்தில் இரட்டைத்தன்மை உண்டு.

(இ) 'உமது நம்பிக்கை நலமாக்கிற்று' என்று இயேசு அனுப்ப, அவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அது என்ன இரண்டாவது பார்வை? அதுதான் இயேசுவை இறைமகன் என்று பார்ப்பது. நம்பிக்கையில்லாத நிலையும் உண்டு, நம்பிக்கை அடைந்த நிலையும் நம்மில் உண்டு.

மகிழ்ச்சி, நேர்முக எண்ணம், வெற்றி ஆகியவற்றை மட்டுமே நாம் எண்ண வேண்டும் என்று நமக்குப் பல நேரங்களில் கற்பிக்கப்படுகின்றன. இவற்றையே நாம் நாடித்தேட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றின் முரண்களான துயரம், எதிர்மறை எண்ணம், தோல்வி ஆகியவையும் எதார்த்தங்களே.

வாழ்வின் இரட்டைத்தன்மையைக் காணும் எவரும் ஞானியரே.

அப்படி என்றால், மூடராக இருக்கக் கூடாதா?

இருக்கலாம். ஞானமும் மூடத்தனமும் இரட்டைத்தன்மை தானே.


1 comment:

  1. “எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் உள்ளது.....யாதொன்றையும் குறைவு படாமல்.... ஆனால் மற்றொன்றின் நலனை நிறைவு செய்வதாய்.” கொஞ்சம் குழப்புவது போலிருப்பின் தொடர்ந்து வாசிக்கையில் நற்செய்தி, அதை நமக்கு நன்றே புரிய வைக்கிறது. ஒரே வரியில் கூறவேண்டுமெனில் “கெட்டது” என ஒன்று இருந்தால் தானே “ நல்லதன்” அருமை புரியும்! அனைத்து விஷயங்களிலும் அதன் நேர்மறை- எதிர்மறை விஷயங்கள் இரண்டையுமே “இயேசு இறைமகன்” எனும் உள் பார்வையோடு பார்க்க ஆரம்பித்தால் நாமும் “ ஞானியரே!”.... மூடத்தனத்தோடு இணைத்துப் பார்க்கையில் ஞானமும் இரட்டைத் தன்மை எனினும் கூட.

    எதிர்மறை விஷயங்களைப் புறந்தள்ளி நேர்மறை விஷயங்களை மட்டுமே சார்ந்திருக்க விரும்புவர்களுக்கு நல்லதொரு விஷயம்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete