Sunday, May 9, 2021

துணையாளர்

இன்றைய (10 மே 2021) நற்செய்தி (யோவா 15:26-16:4)

துணையாளர்

இன்று தொடங்கி வருகின்ற ஞாயிறு வரை வருகின்ற நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் இயேசுவின் விண்ணேற்றத்திற்கும், அதைத் தொடர்ந்து வருகின்ற தூய ஆவியார் பெருவிழாவுக்குமான முன்னோட்டமாக அமைகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய திருத்தூதர்களிடம், 'தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற தூய ஆவியார் வருவார்' என மொழிகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் திருத்தூதர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. 'நீரே எங்களோடு இருக்க எமக்கு ஏன் துணையாளர்?' என்றும், 'நீர் எங்களோடு இருக்க மாட்டீரா?' என்றும் தங்கள் உள்ளங்களில் அவர்கள் கேள்விகள் எழுப்பியிருப்பார்கள்.

'துணையாளர்' என்னும் வார்த்தை கிரேக்கத்தில், 'பாராக்ளேட்டோஸ்' என்று இருக்கிறது. 'பாராக்ளேஸிஸ்' என்றால் 'பரிந்து பேசுதல்,' அல்லது 'வழக்காடுதல்,' அல்லது 'துணைக்குப் பேசுதல்' என்பது பொருள். இது ஒரு சட்டம்சார் வார்த்தை. அதாவது, வழக்கு மன்றத்தில் அல்லது நீதிமன்றத்தில் ஒருவருக்காக இன்னொருவர் பரிந்து பேசுவதை, வழக்காடுவதைக் குறிக்கிறது.

நான் எனக்கென வழக்காடுவதற்கு ஒருவரை ஏன் நியமிக்கிறேன்?

அவர் சட்டம் தெரிந்தவராக இருக்கிறார்.

அவர் நன்றாக வாதம் செய்பவராக இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாதவராக இருக்கிறார். ஏனெனில், எனக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கும் ஒருவர் திடீரென எனக்கு எதிராகப் பேசினால் என்ன ஆகும்?

என் எதிரியை வெற்றிகொள்ள என்னோடு ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு பலம் தருகிறது.

இன்றைய நாள்களில், அங்கோ இங்கோ என்று நாம் கேட்டுக்கொண்டிருந்த பெருந்தொற்று, நம் அன்புக்குரியவர்களை அள்ளிக்கொண்டு போக நம் நடுவீடு வரை வந்துவிட்டது. பெருந்தொற்றைவிட பெருந்தொற்று பற்றிய பயமும் நமக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. நோய்வாய்ப்பட்டவரின் அருகில் ஒருவர் அமர்வதையும் இது இயலாமல் செய்துவிடுகிறது. நோயை விட, அந்த நோய் பீடித்தால் நம்மைப் பற்றிக்கொள்ளும் தனிமை நமக்குப் பயமாக இருக்கிறது. 'இவர் பெருந்தொற்று பீடித்தவர்' என்ற பெயரும் நம்மைத் தொற்றிக்கொள்ளும் என்ற அச்சம் இருக்கிறது.

இந்த நேரத்தில் இயேசு மொழிகின்ற அந்தத் துணையாளர் யார்?

ஒரு பக்கம், நம் உள்ளத்தில் எரிகின்ற நம்பிக்கை ஒளிதான் அந்தத் துணையாளர். 'எனக்கு எதுவும் நடக்காது' என்ற எண்ணம் அல்ல, மாறாக, 'எனக்கு என்ன நடந்தாலும் நான் அதை எதிர்கொள்வேன்' என்ற துணிச்சலான செயல்தான் அந்தத் துணையாளர்.

இன்னொரு பக்கம், அவர் நமக்கு அருகில் இருக்கிறார். கணவனுக்காக மருத்துவமனைக்கு வெளியில் காத்துக் கிடக்கும் மனைவியாக, மனைவிக்காக மாத்திரை வாங்கச் செல்லும் கணவனாக, தன் பெற்றோர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளாக, மருத்துவராக, செவிலியராக, துப்புரவுப் பணியாளராக, காவல்துறைப் பணியாளராக, ஆம்புலன்ஸ் ஓட்டுநராக, அருள்தந்தையாக, தன்னார்வப் பணியாளராக நம் அருகில் இருக்கிறார்.

துணையாளரின் துணையால் நாம் பெருந்தொற்றிலிருந்து தப்பி விடலாம் என்பதல்ல, மாறாக, பெருந்தொற்றை எதிர்கொள்ளலாம் என்ற எதிர்நோக்கு நம்மில் ஒளிர்வதாக.

இத்தகைய எதிர்நோக்கைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் பிலிப்பி நகரில் தருகின்றார் பவுல். ஆற்றங்கரையிலும் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. பெருந்தொற்று பயத்தின் பிடியில் இருப்பவர்களுக்கு அணைக்கும் கரங்களாக வரும் ஒரு பதிவு! ஆம்! நோயைவிட அந்த நோய் நம்மை பீடித்தால் பற்றிக்கொள்ளும் தனிமை பயமாக மாறி நம் நிம்மதியை கெடுப்பது உண்மையே. இந்த நேரத்தில் நம் உள்ளத்தில் ஏற்படும் ‘ நம்பிக்கை ஒளியே’ எனக்காக அனுப்ப ப்படும் துணையாளர் எனும் எண்ணம் ஆறுதல் தருவது உண்மை. ‘ எனக்கு எதுவும் நடக்காது’ என்ற எண்ணமல்ல...மாறாக ‘எனக்கு என்ன நடந்தாலும் நான் அதை எதிர்கொள்வேன்’ என்ற எண்ணமே அந்தத் துணையாளர்...அருமை!

    நமக்காக வரும் துணையாளர் பல வடிவில் வருகிறார்.... கணவனாக...மனைவியாக...பிள்ளைகளாக...மருத்துவராக...செவிலியராக...துப்புரவுப்பணியாளராக...காவல் துறைப்பணியாளராக...ஆம்புலன்ஸ் ஓட்டுநராக.....
    அருள் தந்தையாக....தன்னார்வப் பணியாளராக.... இதற்கு மேலும் உருப்பெற முடியுமா நமக்காக வரும் ஒரு துணையாளர்?

    பெருந்தொற்றை வெல்வோம்....எதிர்கொள்வோம்....அதன் பிடியில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நேசக்கரம் நீட்டவில்லை எனினும் பரவாயில்லை.....அவர்களைக்கண்டு பயப்படுவதைத் தவிர்ப்போம். நாம் நினைத்தால் நானும்,நீங்களும் கூட ஒரு துணையாளராக மாறலாம். பய உணர்வு போக்கி மனவலிமையைத்தரும் ஒரு அழகான...ஆழமான பதிவு. தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete
  2. நன்றி🙏 தந்தையே.

    ReplyDelete