Wednesday, May 5, 2021

ஒரே உள்ளமும் உயிரும்

இன்றைய (6 மே 2021) முதல் வாசகம் (திப 15:7-21)

ஒரே உள்ளமும் உயிரும்

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. புதிய நம்பிக்கையைத் தழுவியிருக்கும் புறவினத்து இனியவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று சிலர் நிர்பந்திக்க, அதைப் பற்றிய திருத்தூதர்களின் கருத்தைக் கேட்பதற்காக பவுலும், பர்னபாவும் எருசலேம் செல்கின்றனர்.

அங்கே திருத்தூதர்கள் இவர்களை வரவேற்கின்றனர். இவர்களின் செயல்களைப் பற்றிக் கேட்டறிகின்றனர். தொடக்க காலத்தில் எருசலேம் திருச்சபைதான் முதன்மையான திருச்சபையாக இருந்தது. அதன் தலைவராக யாக்கோபு இருந்தார்.

பேதுருவும், யாக்கோபுவும் எருசலேம் சங்கத்தில் ஆற்றும் உரைகளைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம்.

முதலில், இவர்கள் இருவரின் பரந்த உள்ளம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதாவது, பவுலும் பர்னபாவும் தங்கள் பணிகளைப் பகிர்ந்துகொண்ட போது இவர்கள் பொறாமைப்படவோ, போட்டியுணர்வுகொள்ளவோ இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, அடுத்தவர்களின் வெற்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதற்கு பெரிய உள்ளம் தேவை. அது இவர்களிடம் இருக்கிறது.

தொடர்ந்து, பேதுரு, 'நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றார். புறவினத்துச் சீடர்களைத் தன்னைப் போல அல்லது தன் இடத்தில் வைத்துப் பார்க்கிறார். நான் அந்த இடத்தில் இருந்தால் எப்படி நினைப்பேன்? என்று தன்னை சீடர்களின் காலணிகளுக்குள் நிறுத்துகிறார் பேதுரு. மேலும், இப்படி எளியவருக்கு துன்பம் தருவது கடவுளையே சோதிப்பதாகவும் என்ற இறையச்சமும் பேதுருவிடம் இருக்கிறது.

அடுத்ததாக, யாக்கோபு, இறைவாக்கு நூல்களைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் ஆண்டவரின் இல்லத்தில் இடம் உண்டு என்று சொல்வதோடு, அவர்கள் பின்பற்ற வேண்டிய சில ப்ராக்டிகல் விடயங்களை மட்டும் சொல்கிறார். 'கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தல் ஆகாது!' 

இவ்வாறாக, இவர்கள் இருவருமே பிறரைக்குச் சுமையாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று ரொம்ப சென்ஸிட்டிவாக இருக்கின்றனர். 'சென்ஸிட்டிவிட்டி' அல்லது 'பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்தல்' ஒரு உன்னதமான கொடை. 

இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை வழியாகச் சொல்கிறார் இயேசு: 'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவும்.' மகிழ்ச்சி என்ற உணர்வு நிறைவு பெறுவது இயேசு அங்கே இருக்கும்போதுதான். எல்லாரிடமும் அந்த இயேசுவைப் பார்க்கின்றனர் திருத்தூதர்கள்.

நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை. அதற்கான பொறுப்பேற்றல் வந்தவுடன், உடனடியாக பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.

4 comments:

  1. பேதுரு மற்றும் யாக்கோபிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைத் தாங்கி வரும் ஒரு பதிவு.”நற்குணங்களில் ஒருவர் மற்றவருக்கு சளைத்தவரல்ல” என்ற புரிதலைத் தருகிறது.போட்டியுணர்வற்ற உள்ளம், ஒருவர் அடுத்தவரின் மகிழ்ச்சியைத் தனதாக ஏற்றுக்கொள்வது,தன்னுடைய நிலையில் அடுத்தவரை வைத்துப்பார்ப்பது, பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வது.... என்று இருவரின் பெட்டகங்களுமே புண்ணியங்களின் பொக்கிஷங்களால் நிரம்பி வழிகின்றன. இவற்றில் ஒன்றிரண்டையேனும் நாம் எடுத்து அணிந்து கொண்டால் இயேசுவின் மகிழ்ச்சிக்கு நாம் உரிமை கொண்டாடவும், அந்த மகிழ்ச்சி நம்மில் நிறைவாக இருக்கவும் பாக்கியம் பெற்றவர்களாவோம் என்கிறார் கூடவே தந்தை.

    உண்மைதான்.... “பிரச்சனைக்கு ஆணிவேரே நான்தான்” என்று நினைக்கும் மறுநிமிடவே அது காணாமல் போவது நாம் அனுபவித்து உணரும் உண்மை. இப்படி நல்ல விஷயங்களை நாளும் அள்ளித்தெளிக்கும் தந்தையை இறைவன் நிறைவாகக் காப்பாராக!!!

    ReplyDelete