Saturday, May 29, 2021

உறவும் பணியும்


மூவொரு கடவுள் பெருவிழா

I. இணைச்சட்டம் 4:32-34,39-40 II. உரோமையர் 8:14-17 III. மத்தேயு 28:16-20

உறவும் பணியும்

கடந்த வாரம் டுவிட்டரில் ஒரு புகைப்படம் வலம் வந்தது. ஒரு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணி புரியும் ஆண் மருத்துவர் ஒருவர் அதிகாலையில் தன் இல்லம் திரும்புகின்றார். இல்லம் திரும்பி ஓய்வெடுக்க விரும்பிய சில நொடிகளில் மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு பெற்று புறப்படுகின்றார். அந்த நேரத்தில் அவரிடம் ஓடி வருகிறாள் அவளுடைய மகள். அவளுக்கு ஏறக்குறைய 4 அல்லது 5 வயது இருக்கும். தன்னை அள்ளி எடுக்குமாறு அந்தக் குழந்தை தன் கைகளை மேலே தூக்குகிறார். அவருக்கும் அவரை அள்ளி எடுக்க ஆசை. ஆனால், மருத்துவ உடையில் இருக்கிறார். உடனே, அருகிலிருந்த பெரிய பாலித்தின் பேக் ஒன்றைத் தன் குழந்தையின்மேல் போர்த்தி, பாலித்தீன் பையோடு அக்குழந்தையைத் தழுவிக்கொள்கிறார்.

தன் அன்புக்குரிய குழந்தையை பாலித்தீன் பை சுற்றிக் கட்டிப் பிடிப்போம் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

பெருந்தொற்று நம்மை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தினாலும், அன்பு செய்வதற்கான வழிகளை மானுடம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த அன்பு மருத்துவர் தந்தை போல.

எந்தப் பெருந்தொற்றும் மானுடத்தை அழித்துவிட முடியாது.

இறுதியில், மானுடம் வெல்லும்.

இன்று நாம் நம் கடவுளை மூவொரு இறைவன் என்று கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த மறைபொருள் பற்றி புனித அகுஸ்தினார் சிந்தித்துக் கொண்டே கடற்கறையில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கே தோன்றிய குழந்தை, 'கடல் தண்ணீரை ஒரு சிறிய குழிக்குள் நிரப்ப முயல்வது எவ்வளவு மதியீனம்!' என்று கேட்டுவிட்டு மறைந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், புனித அகுஸ்தினாரைத் தவிர வேறு யாரும் இந்த மறைபொருள் பற்றி அதிகம் பேசவில்லை. பேசிய மற்றவர்கள் எல்லாம் அகுஸ்தினார் பேசியதைத்தான் வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

அகுஸ்தினார், 'அன்பு' என்ற உணர்வை இங்கே ஓர் உருவகமாகக் கையாண்டு தமதிருத்துவத்தின் (மூவொரு கடவுளின்) பொருளைப் புரிந்துகொள்ள விழைகின்றார். அன்பில் மூன்று பகுதிகள் உள்ளன: (அ) அன்பு செய்பவர், (ஆ) அன்பு செய்யப்படுபவர், (இ) இருவருக்கிடையே பரிமாறப்படும் அன்பு. அன்பு என்ற ஒன்றே இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தாலும், மூன்றும் தனித்தனியாக இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதில்லை.

மூவொரு கடவுள் பற்றிய புரிதலில் இதுவே முதன்மையானது. அதாவது, இவர்கள் மூவரும் ஒன்று என்றாலும், இவர்கள் வேறு வேறான நபர்கள்.

அகுஸ்தினார் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு பற்றி ஓரிடத்தில் மறையுரை வைக்க வேண்டிய தேவை இருந்தது. இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில், 'மகன் வேறு,' 'தந்தை வேறு,' 'தூய ஆவியார் வேறு' என்று நம்மால் எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். மகன் தண்ணீருக்குள் இருக்கிறார். தந்தை வானத்தில் இருக்கிறார். தூய ஆவியார் இரண்டுக்கும் நடுவில் ஆகாயத்தில் இருக்கிறார். மூன்று பேரும் தனித்தனியாக அவர்கள் பிரிந்துதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் எப்படி ஒரே கடவுள் என்றும், பிரிக்க இயலாதவர்கள் என்றும் சொல்ல முடியும்? என்று அவருடைய மூளை கேள்வி கேட்கிறது. (அகுஸ்தினாரின் கேள்வி கேட்கும் திறன் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது). இந்த இடத்தில் அவர் இன்னொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கின்றார்: நினைவு (memory), புரிதல் (understanding), விருப்பம் (will).

ஒரு கதையை நாம் நினைவில்கொள்ள வேண்டுமெனில், அந்தக் கதையைப் புரிந்துகொள்ளவும், நினைவில் வைத்திருக்க விருப்பம் கொள்ளவும் வேண்டும்.

ஒரு கதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் வார்த்தைகளை நினைவில்கொள்ளவும், அவற்றை எண்ணிப்பார்க்க விருப்பம் கொள்ளவும் Nவுண்டும்.

ஓரு கதையை நாம் விரும்ப வேண்டுமெனில், அதை நினைவில் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும்.

மூன்றையும் செய்யக் கூடியது மூளைதான். ஆனால், மூன்றையும் வேறு வேறு செயல்களாகச் செய்கிறது. ஆக, அவற்றைப் பிரிக்க முடிவது போலத் தெரிந்தாலும், பிரிக்க இயலாதவையாக அவை இருக்கின்றன.

அப்படியே, கடவுளும், தந்தை-மகன்-தூய ஆவியாரும் என்கிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் மறைபொருளை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

மூவொரு கடவுள் தங்களிலேயே உறவு நிலையில் இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கென்று ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது என்றும் வரையறுக்கிறது நம் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண்கள் 267, 255).

ஆக, உறவும் பணியும் இங்கே அடிப்படையாக இருக்கின்றன.

உறவும் பணியும் மனித வாழ்வின் அடிப்படையான கூறுகளாக இருக்கின்றன. ஏனெனில், நாம் நம்மில் காண்பதைத்தான் கடவுளில் காண்கிறோம் என்கிறது சமூகவியல்.

பகுப்பாய்வு உளவியலின் தந்தை என அழைக்கப்படுகின்ற சிக்மண்ட் ஃப்ராய்ட், மனித வாழ்க்கையை 'லீபன் உன்ட் ஆர்பைடன்' (lieben und arbeiten) என்று வரையறுக்கின்றார். 'அன்பும்' 'பணியும்' - இதுதான் நம் வாழ்வின் மொத்தச் சுருக்கம். இந்த இரண்டும் தான் நம் அடையாளங்களாக இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, நான் யாருடைய மகன் என்ற உறவு நிலையிலும், நான் என்ன பணி செய்கிறேன் என்ற நிலையிலும்தான் நான் அறியப்படுகின்றேன். இந்த இரண்டுக்காகவும்தான் நம் மனித உள்ளம் ஏங்குகிறது. ஆகையால்தான், நம்மால் தனியாக இருக்க முடிவதில்லை. ஏதாவது பணி நம்மிடமிருந்து பறிக்கப்பட்டால், அல்லது பணிசெய்ய வேண்டாம் என்று நாம் தடுக்கப்பட்டால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

மூவொரு கடவுள், தங்களுக்கிடையே, தந்தை-மகன்-உறவின் கனி என்னும் நிலைகளில் ஒருவர் மற்றவரோடு உறவில் இருக்கின்றனர். அது போல, தந்தை படைக்கின்றார், மகன் மீட்கின்றார், ஆவியார் வழிநடத்துகின்றார். எனவே, மூன்று பணிகளை அவர்கள் செய்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் தந்தையாகிய கடவுள் செய்கின்ற படைப்பு மற்றும் பராமரிப்புப் பணி பற்றி மோசே இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இரண்டாம் வாசகத்தில், ஆவியார் நம் உள்ளத்தில் அமர்ந்துகொண்டு, கடவுளை, 'அப்பா! தந்தையே!' என அழைக்குமாறு நம்மைத் தூண்டி எழுப்புகின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் உடனிருப்பு எந்நாளும் இருக்கிறது என்று வாக்களிக்கின்றார். ஆக, மூன்று ஆள்களாக அவர்கள் மூன்று பணிகளைச் செய்கின்றனர். ஆனாலும், அவர்கள் ஒரே ஆளாக – ஒரே புத்தி, ஒரே ஞானம், ஒரே உணர்வு - இருக்கின்றனர்.

மூவொரு கடவுள் எப்படி? என்று கேட்பதை விட, மூவொரு கடவுள் ஏன்? என்று கேட்பதே சிறப்பு.

மனித வாழ்வின் அடிப்படை அலகுகளான 'உறவு' மற்றும் 'பணி' ஆகியவற்றை வரையறை செய்வதற்கு மூவொரு இறைவன் நமக்கு அளவுகோலாக இருக்கின்றார்.

எப்படி?

'மகிழ்ச்சி' மற்றும் 'வளர்ச்சி' - இவ்விரண்டும்தான் உறவு மற்றும் பணியில் அடிப்படையாக இருக்க வேண்டியவை.

இன்று நான் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கும் உறவினால் நான் மகிழ வேண்டும், நான் வளர வேண்டும். அதுபோலவே நான் செய்யும் பணியிலும். நான் செய்யும் பணியால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும், அந்தப் பணி செய்வதன் வழியாக நான் வளர வேண்டும்.

மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இணைந்து செல்தலே உறவுக்கும் பணிக்கும் அழகு.

இன்றைய நாளில், நம்மில் பலர் தங்கள் உறவுகளைப் பிரிந்து, உறவுகளை இழந்து நிற்கின்றோம். பணிகள் செய்ய இயலாமல் முடங்கிக் கிடக்கின்றோம். வைரஸ் நம்மை விட்டு நீங்காது என்ற எதிர்மறையான குரல்கள் வலுத்து வருகின்றன. அச்சம், கலக்கம், பயம் எல்லோர் முகங்களிலும் அப்பிக் கிடக்கின்றது. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. எல்லாவற்றையும் எல்லாரையும் நோய் தாங்கும் பொருள்களாக, நபர்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். ஒரே இல்லத்திற்குள் தனித் தனித் தீவுகளாகிவிட்டோம். அன்றாட வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ள பல குடும்பங்களில் சேமிப்பும் இல்லாத நிலையில், வறுமையா? கொரோனாவோ? – எது முந்திக்கொண்டு நம்மை அழிக்கப் போகிறது? என்ற எண்ணத்துடன் எழுகின்றோம். இறப்பை விட இறப்பு பற்றிய அச்சம் நமக்கு அதிகம் அச்சம் தருகிறது. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், கடவுளை வேண்டுவோர், கடவுளை ஏற்காதோர் என அனைவரையும் அள்ளிக்கொண்டு போகிறது பெருந்தொற்று.

முன்பை விட இன்று நமக்கு மூவொரு கடவுள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார். நாம் தனிநபர் அல்லர், நம்மைச் சுற்றியும் உறவுகள் இருக்கின்றன எனச் சொல்கின்றார் நம் கடவுள்.

பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (திபா 33) நாம் அவரையே பற்றிக்கொள்வோம்: 'ஆண்டவர் நம் உயிரைச் சாவினின்று காக்கின்றார். அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரையே நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார் ... உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எம்மீது இருப்பதாக!'

1 comment:

  1. இன்றைய மறையுரை “ மூவொரு கடவுள்” பற்றியதா? இல்லை புனித. அகுஸ்தினார் பற்றியதா?” என்று கேட்கும் அளவிற்கு அகுஸ்தினார் பற்றிய குறிப்புகள். காரணம் இல்லாமலில்லை....இவரளவிற்கு மூவொரு கடவுள் பற்றி யாரும் பேசவில்லை. மிக எளிமையான “ அன்பு செய்பவர்”, “ அன்பு செய்யப்படுபவர்”, “ அன்பு” . இந்த மூன்றையும் இணைப்பது “ அன்பே” எனினும் மூன்றும் தனித்தனியாக இருக்கின்றன; இயங்குகின்றன எனும் கூற்றை மறுப்பதற்கில்லை. பிதா- மகன்- தூய ஆவி மூவர் எனினும் வேறு வேறான நபர்கள். நமது கத்தோலிக்கத் திருமறையின் அடித்தளமும், ஆணிவேருமே இந்த மாபெரும் உண்மைதான் என்பது இந்த மூவொரு கடவுளுக்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பும்...பெருமையும்! மூவொரு கடவுள் தங்களிலே உறவு நிலையில் இருக்கிறார்களென்பதும்..அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணியுள்ளது என்பதும் கூடுதல் புரிதல் தரும் விஷயம்.இதே உறவு நம்மிலும் இருக்கவும்,அது தரும் மகிழ்ச்சி நம் வளர்ச்சிக்கும், நாம் மேற்கொள்ளும் பணிவாழ்விற்கு அளவுகோலாய் இருக்கவும் வேண்டுமென்பது இந்த நாள் நமக்கு விடுக்கும் செய்தி.

    இந்த ‘ மூவொரு’ கடவுள் என்பது எத்தனை தடவை நாம் கேட்டாலும்..விவாதித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பேசப்படுவது போல் தோன்றும் மறையுண்மை. இதைத் தந்தை தனக்கே உரிய உதாரணங்கள் தந்து மிக எளிமையாக நமக்குப் படைத்திருப்பது அவரது பெருமுயற்சி. என்றையும் விட இன்றைக்கு .... இந்த மாபெரும் தொற்று நம்மை அலைக்கழிக்கும் நேரத்தில் நம்மை நிமிர்த்திப் பிடிக்கட்டும் என்பதற்கு அந்தப் பாலித்தின் பையில் தன் குழந்தையைச் சுற்றிப்பிடிக்கும் பாசமிகு தந்தை நமக்கு வழிகாட்டியாய் வருவாராக! அப்பொழுது நாமும்....
    “ ஆண்டவர் நம் உயிரைச் சாவினின்று காக்கிறார்.அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரையே நம்பியிருக்கிறோம்.அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,உமது பேரன்பு எம்மீது இருப்பதாக!” எனப் பாடமுடியும்.

    தந்தையின் அழகான.... தெளிவானதொரு மறையுரைக்கு நன்றிகளும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete