Thursday, May 6, 2021

யூதாவும் சீலாவும்

இன்றைய (7 மே 2021) முதல் வாசகம் (திப 15:22-31)

யூதாவும் சீலாவும்

திருத்தூதர் பணிகள் நூலில் வரும் 'சீலா' இன்றைய கதைமாந்தர். தமிழில் இவருடைய பெயர் பெண்ணின் பெயர் போல இருக்கிறது. ஆனால், 'சைலஸ்' என்ற கிரேக்கப் பெயர் கொண்ட இவர் ஓர் ஆண்.

எருசலேம் திருச்சங்கம் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்கு விடை கண்டபின் அதை உடனடியாக கடிதம் வழியாக திருச்சபையாருக்கு அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் முறை அந்தக் காலத்தில் இருந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகின்றது.

ஒரு கடிதம் எழுதுகின்றனர். கடிதத்தை பவுல் மற்றும் பர்னபாவின் கைகளில் கொடுத்தனுப்பியிருக்கலாம். ஆனால், 'பவுலும் பர்னபாவும்தான் இதை எழுதினார்கள்' என்று யாராவது குற்றம் சுமத்தக்கூடும் என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து, தங்கள் திருச்சபையிலிருந்த இருவரை - யூதா மற்றும் சீலா - அனுப்புகின்றனர். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? 'இருவரின் சாட்சியம் செல்லும்' என்பதற்காகவும், வழியில் ஏதாவது ஒரு விபத்து நேரிட்டு ஒருவர் இறக்க நேரிட்டாலும் மற்றவர் இருப்பார் என்ற எண்ணத்திலும் இருவர் அனுப்பப்படுகின்றனர்.

தூது அனுப்புப்படுபவர் தன்னை யார் அனுப்பினாரோ அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். ஆகையால்தான் ஞானநூல்கள் தூது அனுப்புதலைப் பற்றி அதிகம் பேசுகின்றன. 

சீலா தான் அனுப்பப்பட்ட தூதுக்கு உண்மையானவராக இருக்கிறார்.

தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராக, எந்தவொரு உடனடி இன்பத்தையும் விரும்பாதவராக இருக்க வேண்டும்.

கடிதத்தின் உள்ளடக்கத்தில் இரண்டு விடயங்கள் நம்மைக் கவர்கின்றன:

ஒன்று, 'இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் சுமத்தக் கூடாது.' பல நேரங்களில் வழிபாடு மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் பல தேவையற்ற சுமைகளாகவே இருக்கின்றன. வெளிப்புற அடையாளங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சமயத்தின் உண்மையான மையத்தையும் உட்கருத்தையும் பிரித்தறியும் தெளிவு பெற்றிருந்தனர் தொடக்கத் திருஅவையினர். இன்று பல இடங்களில் சமயத்தின் உட்கருத்து மறைந்து தேவையற்ற சடங்குகளே முதன்மையாக இருக்கின்றன என்பது நமக்கு வருத்தம் தருகிறது.

இரண்டு, யூதாவும் சீலாவும் வாய்மொழியாகவும் அறிவிக்கின்றனர். அதாவது, மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்களுக்கு விளக்கம் தருகின்றனர். விளக்கம் தருதல் அல்லது ஒன்றின் பொருளை மற்றவர்களுக்கு உணர்த்துதல் என்பது பெரிய கொடை. அக்கொடையைப் பெற்றவர்களாக இருக்கின்றனர் இவர்கள்.

கடிதம் உடனடியாக ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அது என்ன?

'திருஅவையினர் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றனர்'

இன்றைய நாள்களில் நம் செய்தியும் வார்த்தையும் மற்றவர்களுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் மட்டுமே தர வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு பயம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. வாழ்வின் குறுகிய தன்மையும் பொருளற்ற தன்மையும் குழப்பமும் நம்மைக் கலக்கத்திற்கு உள்ளாக்குகின்றன. இறைவனின் உடனிருப்பு தருகின்ற ஊக்கம் என்றும் இல்லாத அளவுக்கு இன்று நமக்குத் தேவையாக இருக்கிறது.

சீலாவின் பிரமாணிக்கம், அறிவுத்திறன், மற்றும் ஊக்கம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்.

1 comment:

  1. எருசலேம் திருச்சங்கம் ‘ விருத்தசேதனம்’ குறித்த பிரச்சனைக்கு விடைகண்டபின் அதை யூதா மற்றம் சீலா வழியாகத் திருச்சபையாருக்குக் கொடுத்தனுப்புகிறார்கள். இதில் யூதா ஐவிட சீலாவே தூதுக்கு உண்மையானவர் என்கிறார் தந்தை. கூடவே நாம் ஒருவர் மற்றவரோடு பகிரும் விஷயத்தின் தன்மை பற்றி விவாதிக்கிறார்.

    இந்தப்பெருந்தொற்றுக்காலத்தில் மட்டுமின்றி என்றுமே நாம் மற்றவரோடு பகிரும் செய்தி ஊக்கத்தையும்,மகிழ்ச்சியையும் மட்டுமே தரவேண்டும். உண்மையே!. இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் நம்மையறியாமலே நம்மைக் கௌவிக்கொள்ளும் பயம் வாழ்வின் குறுகிய தன்மையையும், பொருளற்ற தன்மையையும் முன்னுறுத்தி நம்மைக்குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. இறைவனின் உடனிருப்பு தருகின்ற ஊக்கம் நமக்கு என்றையும் விட இன்று தேவை என்பதும் உண்மையே! ஆனால் உள்ளத்தில் உள்ள வலுவும்,பலனும் உடலில் இல்லை என்பதையும் ஒத்துக்கொண்டுதானேயாக வேண்டும்!?

    சீலாவின் பிரமாணிக்கம்,அறிவுத் திறன் மற்றும் ஊக்கம் நாம் கற்க வேண்டிய பாடங்களே! காலத்திற்கேற்ற வாழும் கலையை சிறிது “ டானிக்” கலந்து கொடுத்திருக்கும் தந்தைக்கு என் நன்றிகள,!!!

    ReplyDelete