Monday, May 24, 2021

எல்லாவற்றையும் விட்டுவிடுதல்

இன்றைய (25 மே 2021) நற்செய்தி (மாற் 10:28-31)

எல்லாவற்றையும் விட்டுவிடுதல்

பெந்தகோஸ்தே பெருவிழாவோடு உயிர்ப்புக் காலம் நிறைவுபெறுகின்றது. நேற்று முதல் நாம் பொதுக்காலத்தில் நுழைந்துள்ளோம். இந்த வாரம் ஆண்டின் பொதுக்காலம் 8ஆம் வாரம். வருகின்ற நாள்களின் நற்செய்தி வாசகங்கள் மாற்கு நற்செய்தி நூலிலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்று கூற, இயேசுவும், இம்மையில் அதற்காக ஒருவர் பெறும் கைம்மாற்றையும், அவற்றோடு வருகின்ற இன்னல்களையும், மறுமையில் அவர்கள் பெறுகின்ற பேறுபலன்களையும் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகமும் (காண். சீஞா 35:1-12) ஆண்டவருக்குக் கொடுத்தல் பற்றி மிக அழகாக எடுத்துரைக்கின்றது.

மேலாண்மையியலில், தனிப்பட்ட நபரின் மேன்மையான பண்புகள் என்ற வரிசையில் அதிகமாகப் பேசப்படுவது 'மிகுதியாகக் கொடுப்பது' (over-delivering).

மிகுதியாகக் கொடுப்பது என்றால் என்ன?

என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் திறன் அல்லது பலனை விட நான் அதிகமாகக் கொடுப்பது. Walking the extra mile எனச் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, நான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறேன் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு நான் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், ஒரு மாணவன் மிகவும் பின்தங்கியவராக இருக்கிறார். அவருக்கென நான் சிறப்பான கவனம் எடுத்து, பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அவருக்காக நேரம் செலவிடுவது, அல்லது வார இறுதியில் அவருக்கென சில மணி நேரங்கள் செலவிடுவது என்பதுதான் மிகுதியாகக் கொடுப்பது.

நான் செய்கின்ற எல்லாப் பணிகளிலும் என்னால் மிகுதியாகக் கொடுக்க முடியும்.

நான் என் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறேன். என்னைக் காண ஒருவர் வருகின்றார். அவர் உள்ளே வருமாறு நான் சென்று கதவைத் திறந்து பிடித்துக்கொள்வது. அவர் நாற்காலியில் அமர உதவி செய்வது - இதுவும் மிகுதியாகக் கொடுப்பதுதான்.

மிகுதியாகக் கொடுப்பதன் பேறுபலன் மிகுதியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியும் வளர்ச்சியுமே.

இதில் இன்னலும் இருக்கிறது. எப்படி?

நான் என் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேற வேண்டும். என் தேவைகளைக் குறைத்துக்கொண்டு மற்றவர்களின் தேவையை முன்நிறுத்த வேண்டும். மேலும், நான் மிகுதியாகக் கொடுப்பதால் என்னிடமே மற்றவர்கள் தங்கள் வேலைகளைக் கொடுத்துவிட்டு தப்பிச் செல்லும் நிலை வரும். அல்லது என் உழைப்பு மற்றவர்களால் சுரண்டப்படலாம். அல்லது என் நல் எண்ணத்தை மற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், நம்மால் இயலாத காரியங்களையும் நாம் இதனால் சுமக்கத் தொடங்கி விடுவோம். அதைக் குறித்து சீராக்கின் ஞானநூல் ஆசிரியரும் எச்சரிக்கின்றார்:

'குழந்தாய், பல அலுவல்களில் ஈடுபடாதே. ஈடுபட்டால், குற்றப்பழி பெறாமல் போகமாட்டாய். செய்யத் தொடங்கினாலும் முடிக்க மாட்டாய். தப்ப முயன்றாலும் முடியாது. சிலர் மிகவும் கடுமையாய் உழைக்கின்றனர். போராடுகின்றனர். விரைந்து செயல்புரிகின்றனர். எனினும், பின்தங்கியே இருக்கின்றனர்' (காண். சீஞா 11:10-11)

ஒரு பக்கம், மிகுதியாகக் கொடுத்தல் நமக்கு மகிழ்ச்சியும் வளர்ச்சியும் தருகிறது.

இன்னொரு பக்கம், நாம் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு உள்ளாகவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதில் அல்ல, பிரச்சினைகளைக் கையாளக் கற்றுக்கொண்டு வாழ்வதில்தான் வாழ்வின் இனிமை இருக்கிறது.

திருத்தூதர்கள் தாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகின்றனர். அந்த இழப்பையும் அவர்கள் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்கின்றனர்.


1 comment:

  1. மிகுதியாகக் கொடுப்பது...என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் திறன் அல்லது பலனை விட அதிகமாகக் கொடுப்பது. பொருள் என்றில்லை.... உடல் உழைப்பாகவும் கொடுப்பது..மிகுதியாகக் கொடுப்பதன் பேறுபலன் மிகுதியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியும்,வளர்ச்சியுமே!... உண்மைதான்!” குழந்தாய்! பல அலுவல்களில் ஈடுபடாதே! அதைத் தப்பான கண்கொண்டு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்”.... இம்மாதிரி ஏச்சும் பேச்சும் கூட நம்மை வந்தடையும். “பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கையில்லை.அதைக்கையாளக் கற்றுக்கொண்டு வாழ்வதே இனிமை” என்கிறார் தந்தை!” செத்தும் கொடுத்தான் சீதக்காதி”....... சீதக்காதி போன்று வாழ்விற்குப்பின் கொடுக்கவில்லை எனினும்,வாழும் போதே கொடுத்தல் நலம். இறைக்கிற கிணறே சுரக்கும் என்பதும் நாடறிந்த உண்மை!

    இழப்பதிலும்,கொடுப்பதிலும் திருத்தூதர்களாக இருக்கப் பழகுவோம்! காலத்தின் தேவையுணர்ந்து “ கொடுத்தலை” ப்பற்றிய தந்தையின் பதிவிற்கு நன்றி! நம் வாயின் வார்த்தைகள் நம்மைப்பற்றிப் பேசுவதை விட நம் செயல்கள் பேசட்டும்!!!

    ReplyDelete