உயிர்ப்புக் காலம் 6ஆம் ஞாயிறு
I. திருத்தூதர் பணிகள் 10:25-26,34-35,44-48 II. 1 யோவான் 4:7-10 III. யோவான் 15:9-17
வாக்குறுதிகள்
வாக்குறுதிகள் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாதவை.
'நாளை காலையில் நான் 6 மணிக்குத் துயில் எழுவேன்' என்று எனக்கு நானே சொல்லும் சிறிய வாக்குறுதி தொடங்கி, 'இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து' அல்லது 'என் தல ஆயருக்கு நான் என் கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் வாக்களிக்கிறேன்' என்று திருமணம் மற்றும் அருள்பணி நிலையில் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி வரை, நாம் வாக்குறுதிகள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். இன்னொரு பக்கம், தேர்தல் வாக்குறுதிகள், விளம்பரங்களின் வாக்குறுதிகள், நிறுவனங்களின் வாக்குறுதிகள் என நம்மை வாக்குறுதிகள் சூழ்ந்துகொண்டே இருக்கின்றன. நம் விவிலியத்திலும் இறைவன் மனுக்குலத்திற்குக் கொடுத்த நிறைய வாக்குறுதிகள் பரவிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வழிநடத்திய ஆண்டவராகிய கடவுள், அவர்கள் செங்கடலைக் கண்டு மலைத்து நின்றபோது, 'நீங்கள் சும்மாயிருங்கள். ஆண்டவராகிய கடவுள்தாமே உங்களுக்காகப் போரிடுவார்!' என்ற வாக்குறுதி தருகின்றார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும் செய்கின்றார்.
வாக்குறுதிகள் நமக்கு மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன:
(அ) வாக்குறுதிகள் வழியாகவே நாம் நம்பிக்கையில் வளர்கிறோம். எடுத்துக்காட்டாக, 'இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும்' என்று ஒரு மனைவி தன் கணவருக்கு வாக்குறுதி கொடுப்பதால், கணவனுக்கு அந்த மனைவிமேல் நம்பிக்கை வருகிறது. தன்னிடம் உள்ள அனைத்தையும் அவர் மனைவியோடு பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்.
(ஆ) வாக்குறுதிகள் நமக்கு எதிர்நோக்கைத் தருகின்றன. 'ஆறு நாள்களில் சிகப்பழகு!' அல்லது 'மின்னலைப் போன்ற வெண்மை' என்ற வாக்குறுதிகளை நிறுவனங்கங்கள் தர, அந்நிறுவனங்களின் அழகுசாதன மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை நான் வாங்கிப் பயன்படுத்துகின்றேன். என் முகம் சிவக்கும் என்பதும், என் ஆடை வெண்மையாகும் என்பதும் என்னுடைய எதிர்நோக்காக இருக்கிறது.
(இ) வாக்குறுதிகள் வழியாகவே நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்கின்றோம். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்குத் தன் சேவையை வாக்களிக்கிறது. அந்த நிலையில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு பரஸ்பர உறவு தொடங்குகின்றது. வியாபாரம் மட்டுமே இதன் இலக்காக இருந்ததாலும் உறவு நிலை வளர்வதற்கும் இது இடம் தருகிறது.
கடந்த வாரம் தன்னைத் திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை அதன் கிளைகளாகவும் உருவகம் செய்த இயேசு இன்று அன்புக் கட்டளை பற்றிப் பேசுகின்றார். இன்றைய நற்செய்தியை இயேசுவின் மூன்று வாக்குறுதிகள் என நாம் எடுத்துக்கொள்ளலாம்:
(அ) நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன் (15:9)
(ஆ) நான் உங்களை நண்பர்கள் என அழைக்கிறேன் (15:15)
(இ) நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் (15:16).
இந்த மூன்றும் இயேசுவின் முன்னெடுப்புகளாக உள்ளன. மேலும் இவை மேலிருந்து கீழ்நோக்கியதாக உள்ளன.
(அ) நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன்: அன்பு.
'தந்தை தன்னை அன்பு செய்கிறார் எனவும், தந்தை தன்னை அன்பு செய்வது போல தன் சீடர்களை தான் அன்பு செய்வதாகவும்' சொல்கிறார் இயேசு. அத்தோடு நிறுத்தவில்லை அவர். 'நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ளவேண்டும்!' என அதைக் கட்டளையாகவும் ஆக்கிவிடுகின்றார். ஆக, மேலிருந்து வருகின்ற அன்பை நாம் நமக்குக் கீழ்நோக்கி செலுத்த வேண்டும். அன்பில் இந்த பரிமாணம் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ரெசிப்ரோசிட்டி தவறும்போது அன்பு மறைகின்றது. தொடர்ந்து சொல்கிறார்: 'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும் இவற்றை உங்களிடம் சொன்னேன்!' (15:11). எவற்றை? 'அன்பு செய்வதை!' ஆக, அன்பை நாம் எப்படி அளவிடுவது? அன்பு தரும் மகிழ்ச்சியை வைத்தே.
(ஆ) நான் உங்களை நண்பர்கள் என அழைக்கிறேன்: நட்பு.
'தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட' என்கிறார் இயேசு. அன்பில் நிலவும் இரண்டு நிலைகளைத்தான் இங்கே சொல்கின்றார்: (1) பணியாளர் நிலை, (2) நண்பர் நிலை. பணியாளர் நிலையில் நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார். கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். ஆனால் நண்பர் நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில் இருப்பார். இருவரும் கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர்.
(இ) நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்: உரிமை.
இயேசுவின் வார்த்தைகள் அன்பில் துலங்கும் உரிமையைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த உரிமை எங்கிருந்து வருகிறது? நாம் மற்றவரையும், மற்றவர் நம்மையும் தேர்ந்துகொள்வதில்தான். தேர்ந்து கொள்வது என்பது உரிமையாக்கிக்கொள்வது. பணியாளருக்குரிய அடிமைத்தனத்தோடு அல்ல. மாறாக, நண்பருக்குரிய கட்டின்மையோடு. அன்பில் நாம் மற்றவர்களை உரிமையாக்கிக்கொள்கின்றோம். மற்றவர்களுக்கும் உரிமையாகின்றோம். இந்த உரிமையின் நோக்கம் என்ன? கனி தருவது! கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் கனி. இலை - பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம் கனியில் முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின் நோக்கம். ஆக, அன்பில் கனி என்று சொல்லும்போது, அன்பில் வளர்ச்சி வேண்டும் என்பதையே இயேசுவின் வார்த்தை சொல்கின்றது.
நம் வாழ்வில் பல நேரங்களில் நம்மை அறியாமல் தளர்ந்து போகின்றோம். நம் இருத்தலால் யாருக்கும் பயன் இல்லை என்று புலம்புகிறோம். செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக் கலங்குகிறோம். பேசுவதற்கு யாரும் இல்லை என வருந்துகிறோம். பிறர் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்றும், பிறர் நம்மைத் தாழ்வாக நடத்துகின்றனர் என்றும் கூட அழுகின்றோம். இந்த இடத்தில் இயேசுவின் முதல் வாக்குறுதி நமக்கு இன்னும் முக்கியம் ஆகிறது. அவர் நம்மை அன்பு செய்கிறார். இந்த உறுதிப்பாடு நம் வாழ்வில் பல உச்சங்களை நாம் தொட உதவும். இயேசுவுக்கு அவருடைய வாழ்வில் இக்கட்டான சூழல்கள் மற்றும் எதிர்ப்புகள் வந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தது அன்பு உணர்வே. திருமுழுக்கின்போது, 'நீரே என் அன்பார்ந்த மகன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கக் கேட்ட தந்தையின் குரல் அவருடைய உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருந்ததால், மற்றவர்கள் அவரை அன்பு செய்யாத சூழலிலும் தந்தையின் அன்பை அவர் உணர்ந்துகொண்டே இருந்தார். இதையொட்டியே புனித பவுலும், 'சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ எதையும் நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது' (காண். உரோ 8:37-38) என்கிறார்.
ஆண்டவர் நம்மேல் காட்டும் அன்பு நண்பர் நிலையில் இருக்கின்றது. ஆனால், பல நேரங்களில் நாம்தான் பணியாளர் நிலையிலேயே இருக்க விருப்பம் கொள்கிறோம். எனக்குத் தெரிந்த இல்லம் ஒன்றில், தன் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனை வீட்டு உரிமையாளர் தன் மகனாகத் தத்தெடுத்துக்கொண்டார். ஆனால், இறுதி வரை அந்த மகன் அவருடைய வேலைக்காரனாக இருந்தானே தவிர, மகனாக இருக்க அவனால் இயலவில்லை. இளைய மகன் எடுத்துக்காட்டிலும் (காண். லூக் 15:11-32) நாம் இப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இளைய மகன் தன் தந்தையின் வேலைக்காரனாக இருக்க விரும்பினான். மூத்த மகன் இறுதி வரை தன் தந்தையின் இல்லத்தில் வேலைக்காரனாகவே இருந்தான். இருவருமே தங்களுடைய மகனுக்குரிய உரிமையையும் பேற்றையும் மறந்துவிட்டனர். இயேசு இன்று நம்மை நண்பர்கள் என அழைக்கின்றார். நம் நிலையை உயர்த்துகின்றார். அப்படி என்றால், நம் எண்ணத்தில் உயர்வு வேண்டும். பணியாளர் அல்லது வேலைக்கார மனநிலையை விடுத்து, நட்பு நிலையைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, தேர்ந்துகொள்தல். பலவற்றிலிருந்து சிறப்பான ஒன்றாக இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டுள்ளார். நாம் ஒன்றைத் தேர்ந்துகொள்ளும் முன் நிறைய யோசிக்கிறோம், ஆய்வு செய்கிறோம், கேள்வி கேட்கிறோம். இறைவன் அந்த அளவுக்கு நம் ஒவ்வொருவர்மேலும் அக்கறை எடுத்துள்ளார். இதன் நோக்கம் என்ன? கனி தருதல், நற்செயல்கள் செய்தல். இன்றைய முதல் வாசகத்தில், தேர்ந்துகொள்ளப்பட்ட பேதுரு புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் நோக்குடன் கொர்னேலியு இல்லத்திற்குச் செல்கின்றார். திருத்தூதுப் பணியில் அவர் கனி தருகின்றார். கொர்னேலியுவின் இல்லத்தில் குடியிருந்த புறவினத்தார்மேல் ஆண்டவராகிய கடவுள் தன் தூய ஆவியாரை அனுப்பி அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இரண்டாம் வாசகத்தில், 'கடவுள் நம்மீது முதலில் அன்பு கொண்டார்' என்று சொல்வதன் வழியாக, மனுக்குலம் பெற்றுள்ள தேர்ந்த நிலையை முன்வைக்கின்றார் யோவான்.
இறுதியாக,
இன்றைய பதிலுரைப் பாடலில் (காண். திபா 98), 'இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்' என ஆண்டவரின் வாக்குப் பிறழாமை குறித்துப் பாடுகின்றார் ஆசிரியர்.
வாக்குறுதகளில் பிறழாத நம் இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றுள்ள நாம், எனக்கு நானே அல்லது நான் பிறருக்கு வழங்கும் வாக்குறுதிகளில் உறுதியாய் இருந்தால் எத்துணை நலம்!
இன்றைய மறையுரை வாக்குறுதி, அன்பு, தூய ஆவி ,தேர்ந்து கொள்தல் என்று பல விஷயங்களை உள்ளடக்கியிருப்பினும் மேலோங்கி நிற்பது “ அன்பே!”. ஆண்டவர் நம்மீது காட்டும் அன்பு “ நண்பர் நிலை” யிலிருப்பினும்,நாம் இருக்க விரும்புவது “ பணியாளர்” நிலையே என்பது இறைவன் எத்தனை அருகில் வந்திடினும் தள்ளி நிற்கவே விரும்புகிறான் மனிதன் என்ற புரிதலைத் தருகின்றன இன்றைய வாசகங்கள்.
ReplyDelete“இஸ்ரேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்,உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார்” எனும் பதிலுரைப்பாடல் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை என்றுமே மறப்பதில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. “ வாக்குறுதிகளில் தவறாத இறைவன்” ...நாமும் பல நேரங்களில் எத்தனை முயன்றிடினும் தவறுகிறோம் என்பதில் நம் மனித பலவீனம் புரிகிறது. “நாம் விழுவதே திரும்ப எழத்தான்”..... நம்மீது அக்கறை கொண்ட இறைவன் நம் பலவீனம் அறிந்து நாம் விழுவதையும்,திரும்ப எழுவதையும் அனுமதிக்கிறார். ஆனாலும் கூட வாக்குறுதிகளில் பிறழாத இறைவனை நம் முன்னிறுத்தி நிற்க முடிந்தால் எத்துணை நலம்! தந்தையுடன் சேர்ந்து நாமும் ஆமோதிக்கிறாம்! இறைவன் அருள் புரிவாராக! தந்தைக்கு ஞாயிறு வணக்கங்கள்!!!