துன்பம் உண்டு
நேற்றைய நாளில் நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடினோம். இந்த வார வாசகங்கள் அனைத்தும் விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் நமக்கு அனுப்பப் போகின்ற தூய ஆவியார் பற்றிப் பேசுகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 19:1-8), மலைப்பாங்கான பகுதியாகத் திகழ்ந்த எபேசு நகரத்துக்கு வருகின்றனர் புனித பவுலும் அவருடைய உடனுழைப்பாளர்களும். சீடர்களைக் கண்டு, 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்க, அவர்களோ, 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே' என்கின்றனர். பல நேரங்களில், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் போதும், அருங்கொடை இயக்க இறைவேண்டல்களின்போது மட்டுமே நாமும் தூய ஆவியார் பற்றி நினைக்கின்றோம். இவர் ஒரு மறக்கப்பட்ட மனிதராகவே இன்றும் நம்மோடு இருக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய பிரியாவிடை உரையில், 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.
'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு'
இப்படிச் சொல்லும் ஒருவரிடம் சீடர்கள் எப்படி ஒட்டிக்கொண்டு நின்றார்கள்.
நம் உடலும் உள்ளமும் இயல்பாகவே துன்பத்தையும் துன்பம் சார்ந்த காரணிகளையும் வெறுக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. யாராவது ஒருவர் நம்மிடம், 'என்னோடு நீ இருந்தால் உனக்குத் துன்பம் உண்டு' என்று சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். நாம் அவரிடமிருந்து அந்நொடியே ஓடிவிட மாட்டாமோ? துன்பம் இருக்கின்ற இடத்தில் நமக்கென்ன வேலை?
காரல் மார்க்ஸ் அவர்கள், மதம் அல்லது சமயத்தை ஒரு போதைப் பொருள் என அழைத்தார்:
'சமயம் என்பது ஒடுக்கப்பட்ட படைப்பின் பரிதாப ஏக்கம்,
இதயமற்ற உலகத்தின் இதயம்,
ஆன்மா இல்லாத நிலையின் ஆன்மா,
மக்களின் அபின் அல்லது போதை'
ஆனால், இயேசுவின் சொற்கள் இதற்கு முரணாக இருக்கின்றன. 'உங்களுக்குத் துன்பம் இருக்கும்' என்று சொல்லும் இயேசு, 'உங்கள் துன்பத்தை மறக்க போதைப் பொருள் தருகிறேன்' என்று சொல்லவில்லையே?
ஆக, நம் கிறிஸ்தவ சமயம் துன்பத்திற்குப் போதை ஊட்டுகின்ற சமயம் அல்ல. மாறாக, துன்பத்தைக் கொண்டாடுகின்ற சமயம்.
துன்பத்தைக் கொண்டாட முடியுமா?
இன்று நாம் யூட்யூபைத் திறந்தால் அங்கே நிறைய உளவியல் அறிஞர்களும், ஆன்மிகக் கருத்துரையாளர்களும், 'மகிழ்ச்சியை அடைவது எப்படி?' 'துன்பத்தைக் களைவது எப்படி?' 'நேர்முகமான எண்ணத்தை வளர்ப்பது எப்படி?' 'எல்லா நிலைகளிலும் நேர்முகமான மனநிலை கொண்டிருப்பது எப்படி?' என்று தங்கள் கருத்துகளை வழங்குகின்றனர், அல்லது விற்கின்றனர்.
ஆனால், மகிழ்ச்சியை அடைவது நம் நோக்கம் அல்ல. மகிழ்ச்சி மட்டும்தான் நிரந்தரமா? ஏன் நான் எப்போதும் நேர்முகமாக எண்ணம் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்? எதிர்மறை எண்ணம் என் மனத்தில் இருந்தால் என்ன? 'தனிமையாக நான் உணர்கிறேன்' என்றால், 'நான் இப்போது தனிமையாக உணர்கிறேன்' என்று என் எதிர்மறையான எண்ணத்தை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, 'இல்லை! நான் இப்போது தனியாக இல்லை. என்னைச் சுற்றி என் நண்பர்கள் இருக்கிறார்கள்' என்று நான் நேர்முகமாக எண்ணிக்கொள்வது எனக்கு நானே பொய் சொல்வதாக இல்லையா? 'எனக்கு உடல்நலம் சரியில்லை' என்றால் 'எனக்கு உடல்நலம் சரியில்லை' என்று ஏற்றுக்கொண்டால்தானே நான் மருந்து எடுக்க முடியும். அதை விட்டு, 'இல்லை. என் உடல்நலம் எனக்கு நன்றாக இருக்கிறது' என்று சொல்லும்போது நான் என்னை நானே மறுப்பதோடு, எனக்கு எதிராகவும் செயல்படுகிறேன் அல்லவா?
இயேசு இன்று நமக்கு மிக அழகான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கின்றார்.
'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு'
தொடர்ந்து, 'எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.
இங்கே சற்றே கவனிக்க வேண்டும். 'நான் வெற்றிகொண்டுவிட்டேன்' என்று அவர் சொல்கிறாரே தவிர, 'நீங்கள் வெற்றிகொள்வீர்கள்' என்று நம்மைப் பார்த்துப் போலியான வாக்குறுதி அளிக்கவில்லை. ஏனெனில், நம்மால் துன்பத்தை வெற்றிகொள்ளவே முடியாது. அடுத்தடுத்த துன்பத்தை நாம் எதிர்கொண்டே இருக்க வேண்டும் என்பதே நியதி. துன்பம் துன்பத்தைப் பெற்றெடுத்துக்கொண்டே இருக்கும்.
எடுத்துக்காட்டாக, நீண்ட தூரம் காற்றிலும் மழையிலும் பயணம் செய்வது எனக்குத் துன்பமாக இருக்கிறது என்று நான் ஒரு கார் வாங்குகிறேன் என வைத்துக்கொள்வோம். கார் வாங்கியவுடன் துன்பம் மறைந்துவிடுமா? இல்லை! புதிய வகை துன்பங்கள் வரத் தொடங்கும். பெட்ரோல் விலையேற்றம், சாலை வரி, சுங்க வரி, விபத்து, வாகனத்தில் எலி, தொடர் சர்வீஸ், தொடர் சுத்தம் செய்தல் என்று அடுத்தடுத்த துன்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.
துன்பம் எப்போதும் உண்டு.
ஆனால், எல்லாத் துன்பத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சர்வீஸை நிறுவனம் பார்த்துக்கொள்ளும், சுத்தம் செய்தலை என் உதவியாளர் பார்த்துக்கொள்வார், விபத்து நடக்காமல் என் ஓட்டுநர் பார்த்துக்கொள்வார். எலி வராமல் நான் காத்துக்கொள்ள முடியும்.
எல்லாத் துன்பத்தையும் வெற்றிகொள்ள முடியும்.
அந்த வெற்றிகொள்தல் தான் நம் வாழ்க்கையை முன்நோக்கி நகர்த்துகிறது.
கொஞ்சம் துணிவு இருந்தால் போதும்.
துணிவே நமக்குத் துணையாகும் தூய ஆவியார்.
கிறிஸ்தவ சமயம் என்பது துன்பத்திற்குப் போதையூட்டுகிற சமயமல்ல..மாறாகத் துன்பத்தைக்கொண்டாடுகிற சமயம் என்கிறார் தந்தை. நமக்குத் துன்பம் அடுத்தடுத்து வரும்; ஒரு துன்பம் அடுத்ததைப்பெற்றெடுக்கும் என உணர்ந்த இயேசு “ துணிவுடன் இருங்கள் “ என்கிறார்.எல்லாத் துன்பத்தையும் வெற்றி கொள்ள முடிந்த நம்மால் நம் வாழ்க்கையையும் முன்னோக்கி நகர்த்த முடியும். தேவையெல்லாம் கொஞ்சம் “துணிவே!” அதைத் தரும் தூய ஆவியாரும் நமக்குத் துணையென நிற்கையில் முன்னேறுவதில் என்ன தடை? எதிர் மறைபோலத் தோற்றத்தைக்கொடுக்கும் ஒரு நேர்மறை செய்தி. தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteதுணிவே நமக்குத் துணையாகும் தூய ஆவியார்.
ReplyDeleteநன்றி🙏