Wednesday, May 12, 2021

புனித பாத்திமா அன்னை

இன்றைய (13 மே 2021) திருநாள்


புனித பாத்திமா அன்னை

இன்று நாம் அன்னை கன்னி மரியாவை, 'புனித பாத்திமா அன்னை' என்று கொண்டாடி மகிழ்கிறோம். 'பாத்திமா' என்ற பெயர் திருக்குரானிலும் வருகின்றது. திருக்குரானில், 'பாத்திமா' என்பவர் முகமது நபிகள் அவர்களுடைய மகள். திருக்குரான் நான்கு பெண்களை நிறைவானவர்கள் என அழைக்கிறது. அவர்களில் ஒருவர் பாத்திமா. மற்றவர்கள், மரியா, காதிஜா, மற்றும் ஐய்ஷா.

'பாத்திமா அன்னை' என்னும் பெயர் போர்த்துகல் நாட்டில் உள்ள பாத்திமா என்னும் நகரின் பெயர். அன்னை கன்னி மரியாவின் தலைப்புகள் அவர் காட்சியளித்த இடங்களின் பெயர்களோடு இணைந்தும் வழங்கப்படுகின்றன. லூர்து அன்னை, வேளாங்கண்ணி அன்னை போல, பாத்திமா அன்னை.

1917ஆம் ஆண்டு 13 மே முதல் 13 அக்டோபர் வரை ஆறு முறை அன்னை கன்னி மரியா பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, மற்றும் ஜெசிந்தா என்னும் மூன்று இளவல்களுக்குக் காட்சி தந்துள்ளார்.

'கதிரவனை விட அதிகமாக ஒளிவீசிய பெண் ஒருவர் உலக அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்' - இதுவே இளவல்கள் தங்களுக்குக் காட்சியில் சொல்லப்பட்டது என வெளிப்படுத்தினார்கள்.

13 அக்டோபர் 1917 அன்று நடந்த கதிரவன் அற்புதம் (சுழன்று சென்ற கதிரவன்) முக்கிய நிகழ்வாகப் பேசப்படுகிறது.

இளவல் லூசியா சில வருடங்கள் கழித்து 'பாத்திமாவின் மூன்று இரகசியங்கள்' பற்றிப் பேசத் தொடங்கினார். முதல் இரகசியம், நரகம் பற்றியதாகவும், இரண்டாம் இரகசியம், அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணித்தல் பற்றியதாகவும், மூன்றாம் இரகசியம் இஷ்யாவை அர்ப்பணம் செய்தல் பற்றியதாகவும் இருக்கிறது. மூன்றாவது இரகசியத்தில் திருத்தந்தை ஒருவரின் இறப்பு பற்றி இருந்ததால் இன்னும் அது முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதும் சிலரின் கருத்து.

1984ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அனைத்துலகையும் அன்னை கன்னி மரியாவுக்கு அர்ப்பணம் செய்தார். இதற்கு முன்னதாக திருத்தந்தையர் 12ஆம் பயஸ் மற்றும் 6ஆம் பவுல் ஆகியோர் அன்னை கன்னி மரியாவுக்க உலகை அர்ப்பணம் செய்தனர்.

அன்னை கன்னி மரியா, பாத்திமா அன்னையாக நமக்குத் தரும் செய்திகள் மூன்று:

(அ) செபமாலை செபியுங்கள். அதாவது, செபம் மாலை போல முடிவின்றித் தொடரட்டும்.

(ஆ) அமைதி ஒன்றே நம் இலக்கு. அமைதி நம் அகத்தே உள்ளது.

(இ) எல்லாம் ஒருநாள் மறைந்துவிடும். ஒளிகொடுக்கும் சூரியனும்!

 

2 comments:

  1. அன்னை கன்னி மரியா, பாத்திமா அன்னையாக நமக்குத் தரும் செய்திகள் மூன்று:

    (அ) செபமாலை செபியுங்கள். அதாவது, செபம் மாலை போல முடிவின்றித் தொடரட்டும்.

    (ஆ) அமைதி ஒன்றே நம் இலக்கு. அமைதி நம் அகத்தே உள்ளது.

    (இ) எல்லாம் ஒருநாள் மறைந்துவிடும். ஒளிகொடுக்கும் சூரியனும்!

    நன்றி 🙏தந்தையே!

    ReplyDelete
  2. லூர்து அன்னை,வேளாங்கண்ணி அன்னை போல பாத்திமாவில் தன்னைக் காட்சியாகத் தந்ததால் “ பாத்திமா” அன்னை.அன்னையின் காட்சியைப்பார்க்கும் பாக்கியம் பெற்ற இளவல்கள் லூசியா, ஃ பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மூவரும் அன்னையின் காட்சி பற்றி வெளிப்படுத்திய செய்தி “ கதிரவனை விட அதிகமாக ஒளி வீசிய பெண் ஒருவர் உலக அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்” என்பதே!

    அன்னையின் செய்தியாகத் தந்தை சொல்வதும்
    “ செபம் செய்யுங்கள்; அது மாலை போல முடிவின்றித் தொடரட்டும்.
    அமைதி ஒன்றே நம் இலக்கு. அமைதி நம் அகத்தே உள்ளது.
    எல்லாம் ஒருநாள் மறைந்துவிடும் ஒளிகொடுக்கும் சூரியனும்!”
    ஒருவேளை அன்னையின் திருவுளப்படி அவரின் செபமாலையைத் தினமும் கைகளில் ஏந்தியிருந்தால் இந்த பெருந்தொற்று போன்ற விஷயங்களிலிருந்து நம்மைத் தடுத்து,நமக்கு உடல் மற்றும் உள்ள அமைதி தந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
    இப்பொழுதும் எதுவும் கெட்டுவிடவில்லை. தினமும் அன்னைக்காக சிலமணித்துளிகள் ஒதுக்கி,அவளின் மாலைகளைக் கையிலேந்தி நம் உதடுக்கள்அவள்புகழைப் பாடட்டும்!

    என் ஞாபகம் சரியெனில் 2010 ம் ஆண்டு இதே மே 13 ம் நாள் பாத்திமா அன்னையின் திருநாளில் பாத்திமாவில் அன்னை தோன்றிய இடத்திலிருக்கவும், அவளின் மாலையின் ஐந்து பத்து மணிகளையும் தமிழில் சொல்லவும், பாக்கியம் எனக்கு கிடைத்ததை நினைத்து பேருவகையும்,பெருமையும் கொள்கிறேன். அன்னைக்கு நன்றிகள்!

    அன்னையின் திருநாளன்று இந்த விஷயங்களை மீண்டும் நினைவில் கொண்டுவந்து,அசைபோட வைத்த தந்தைக்கு என் நன்றிகள்! தந்தைக்கும்,அனைவருக்கும் அன்னையின் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete