இருக்கப் போவதில்லை
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன்'
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் இருக்கிறேன்'
ஆங்கிலத்தில், 'Don't overstay where you are welcome!' என்ற ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'அழைக்கப்பட்ட இடத்தில் நீண்ட நேரம் தங்காதே!' அல்லது 'எப்போது வெளியேற வேண்டும் என்பதை அறிந்தவனாக இரு!' (The secret to a long life is knowing when it's time to go.)
சிறிய எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். என்னை ஒரு பிறந்தநாள் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். விருந்துக்குச் செல்லும் நான் அங்கே எல்லாரோடும் அமர்ந்து உரையாடுகின்றேன். என் உரையாடல் அவர்களுக்குப் பிடிக்கிறது என்று உணர்கின்ற நான் இன்னும் கொஞ்ச நேரம் உரையாடுகின்றேன். ஆனால், என்ன நடக்கிறது? நான் மட்டும் பேசிக்கொண்டே இருக்க மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பிக்கிறார்கள். என் பேச்சு நீடித்துக்கொண்டே போனால் அங்கே அது மதிப்பை இழந்துவிடுகிறது. எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான் அறிந்தால் மட்டுமே என் பேச்சு மற்றவர்களைக் கவரும்.
இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். என் சாப்பாட்டுத் தட்டிலிருந்து என் கையை எப்போது அப்புறப்படுத்த வேண்டும், என் படுக்கையிலிருந்து எப்போது நான் எழ வேண்டும் என எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
சிலரை நாம் பார்த்திருப்போம். ஒரே வேலையில் பல ஆண்டுகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. அவர்களிடம், 'இந்த வேலை உன்னை எங்கும் கொண்டுபோகப் போவதில்லை. நீ வேற வேலை பார்க்கலாமே!' என்று சொன்னால், அவர்கள், 'இல்லை! நான் இதை நிறைய நாள் செய்கிறேனே!' என்பார். அதாவது, அவர் தான் எப்போது அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதை மறந்துவிட்டார். அல்லது அவர் வெளியேற மறுக்கிறார்.
சில உறவுநிலைகள் அப்படித்தான். தொடங்கி நாளிலிருந்து நாம் ஒரே இடத்தில் இருந்துகொண்டே இருப்போம். ஓடாத பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்குவது போல. அந்தப் பேருந்து ஓடாது என்று தெரிந்தும் நாம் டிக்கெட் வாங்கிக்கொண்டே இருப்போம். ஏனெனில், அந்தப் பேருந்தில் நாம் நிறைய நாள்கள் இருந்துவிட்டோம். அப்படியே இருப்பது நமக்கு இனிமையாக இருக்கிறது. நாம் பேருந்தை விட்டு எந்த நேரத்தில் இறங்க வேண்டும் என்பதை நாம் மறந்தால் பேருந்துக்கு நாம் சுமையாக மாறிவிடுவோம். பேருந்து நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.
சிறிய விடயம் தொடங்கி பெரிய விடயம் வரை, 'எந்நேரத்தில் நான் வெளியேற வேண்டும்' என்பதை அறிந்தவனாக இருக்க வேண்டும்.
பவுல் எபேசில் நற்செய்தியை அறிவிக்கிறார். எல்லாம் இனிமையாக இருக்கிறது. மூப்பர்களை நியமிக்கிறார். மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். 'இங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதே! இங்கேயே இருக்கலாமே!' என்று அவர் முடிவெடுத்து அங்கேயே தங்கியிருந்தால் என்ன ஆகும்? அவருடைய உடனிருப்பை இரசித்தவர்கள் சிறிது நாள்களில் அவரை வெறுக்கத் தொடங்கியிருப்பார்கள். அவரால் புதிய தலைவர்களை உருவாக்க இயலாமல் போய்விடும். மக்களிடையே பிரிவினைகள் தோன்றும். மற்ற இடங்களில் பணிகள் பாதிக்கப்படும். ஆகையால்தான், கண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டிய நிலை வந்தாலும், 'நான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது' என உணர்ந்து புறப்படுகின்றார் பவுல்.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களிடமிருந்து விடைபெறுகின்றார். விருந்திலிருந்து எழ வேண்டிய நேரம் எது என்பதை இயேசு சரியாக அறிந்திருந்தார். ஆகையால்தான், மிக எளிதாக விடைபெறுகின்றார்.
'எப்போது வெளியேற வேண்டும்' என்பதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்?
(அ) தெளிவான நோக்கம்
இலக்கு அல்லது நோக்கம் தெளிவாக இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, 'மூன்று மணிக்கு நான் வலைப்பதிவு எழுதுவேன்' என்ற நோக்கம் தெளிவாக இருந்தால் என் உடல் 2:50 மணிக்கு கட்டிலிலிருந்து எழுந்துவிடுகிறது. ஆனால், 'மூன்று மணிக்கு என்ன செய்வது?' என்ற குழப்பத்தோடு நான் குட்டித்தூக்கம் போட்டால், எழும்போது மணி நான்கைக் கடந்து விடுகிறது. தெளிவான நோக்கம் இருந்தால் எழுதல் மிகவும் இயல்பு. இரவு 9 மணிக்கு நான் என் அறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நான் 8:45 மணிக்கு விருந்திலிருந்து விடைபெற்று வெளியேறுவேன்.
(ஆ) என் வாழ்க்கை என் கையில்
தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் கைகளில் கொடுத்து வாழச் சொல்பவர்களால் 'எளிதில் எதிலிருந்தும் வெளியேற முடியாது.' ஏனெனில், அவர்கள் வாழ்க்கை அவர்கள் கைகளில் இல்லை. ஓர் ஆசிரியை, தன்னைக் கொடுமையாக நடத்துகின்ற தலைமையாசிரியையின் கைகளில் தன் வாழ்க்கையைக் கொடுத்துவிட்டால், அவரால் அந்தப் பள்ளியிலிருந்து வெளியேற முடியாது. தான் வெளியேறினால் தலைமையாசிரியை கோபப்படுவார், அல்லது வருத்தப்படுவார் என்று அங்கேயே இருந்துகொண்டே இருப்பார். மாறாக, 'என் வாழ்க்கை என் கையில்' என்று நினைக்கத் தொடங்கும் மறு நிமிடமே அவர் வெளியேறுவதற்கான முயற்சிகள் எடுப்பார்.
(இ) 'வேண்டாம்!' என்று சொல்லும் துணிவு
'இது போதும்! இதற்கு மேல் வேண்டாம்!' என்று எனக்கு நானே வேண்டாம் என்று சொல்லும் பக்குவம் வேண்டாம். ஒன்றை நோக்கி நான், 'வேண்டாம்!' என்று சொன்னால்தான் இன்னொன்றில் வளர முடியும். எடுத்துக்காட்டாக, 'சர்க்கரை எனக்கு வேண்டாம்' என்று சொன்னால்தான், என் உடல் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரையும் வேண்டும், உடல்நோயும் குறைய வேண்டும் என்றால், அங்கே நான் சர்க்கரை முன் என் துணிவை இழந்தவன் ஆகிறேன்.
இன்று நான் எப்போது வெளியேற வேண்டும் என்பதை அறிந்தவனாக இருக்க முயற்சி செய்கிறேனா?
அறிந்தவுடன் வெளியேறுகிறேனா?
பிரியாவிடை கொடுத்தலும் பெறுதலும் இனிமையே! ஏனெனில், அங்கே புதிய பயணம் தொடங்குகிறது! புதிய பாதை பிறக்கிறது!
“நாம் பேருந்தை விட்டு எந்த நேரத்தில் இறங்க வேண்டும் என்பதை நாம் மறந்தால் பேருந்துக்கு சுமையாக மாறிவிடுவோம்; பேருந்தும் நமக்கு ஆபத்தாக மாறிவிடும்”.அதனால் தான் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டிய நிலை வந்தாலும்
ReplyDelete“ நான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனப் புறப்படுகிறார் பவுல் என்கிறது இன்றையப்பதிவு.
ஒரு இடத்திலிருந்து/ ஒரு நிகழ்விலிருந்து ‘ இதுவரை போதும்’ எனும் உணர்வோடு புறப்பட ‘ நான் இப்பொழுது எங்கிருக்க வேண்டும்?’ எனும் தெளிவான நோக்கமும், ‘ ‘என் கையில் இருக்கும் என் வாழ்க்கை பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டுமெனும்’
உணர்வும், ‘இது போதும்; இனி வேண்டாம்’ என்ற திருப்தியும் தேவை என்கிறது தந்தையின் அனுபவம்.
பிரியாவிடை கொடுத்தலும் பெறுதலும் இனிமையே! ஏனெனில் அங்கே புதிய பயணம் தொடங்குகிறது! புதிய பாதை பிறக்கிறது! அருமை! வாழ்வின் சிறு சிறு சூட்சுமங்களை அறிந்து வைத்திருந்தால் வாழ்க்கையும் இனிமையே! தன் அனுபவத்தை தனக்கே உரித்தான வியாக்கியானங்களோடு வாசகர்களிடம் பகிரும் தந்தையின் திறமைக்கு என் வாழ்த்துக்கள்! நன்றிகள்!!!
நன்றி🙏
ReplyDelete