Tuesday, May 25, 2021

உங்களிடையே இருக்கக் கூடாது

இன்றைய (26 மே 2021) நற்செய்தி (மாற் 10:32-45)

உங்களிடையே இருக்கக் கூடாது

இன்றைய நற்செய்தி மூன்று நிகழ்வுகளாக அமைந்துள்ளது. முதல் நிகழ்வில், இயேசு தன் பாடுகளை இரண்டாம் முறை அறிவிக்கின்றார். இரண்டாம் நிகழ்வில், செபதேயுவின் பிள்ளைகள் இருவர் இயேசுவை அணுகி அவருடைய வலப்புறமும் இடப்புறமும் இடம் கேட்கின்றனர். மூன்றாவது நிகழ்வில் மற்ற பத்து சீடர்கள் இவ்விருவர் மேல் கோபம் கொள்கின்றனர். இதன் பின்புலத்தில் இயேசு சீடத்துவத்தின் பாடமாக, தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார்.

முதல் நிகழ்வு. இயேசு தன் வாழ்வில் தனக்கு நடக்கவிருப்பதை அறிந்திருந்தார். அல்லது தான் செல்லும் இலக்கு அவருக்கு தெளிவாகத் தெரிந்தது. தெளிவான இலக்கு இல்லாமல் பயணம் செய்வது என்பது கண்களைக் கட்டிக் கொண்டு வாகனம் ஓட்டு முயற்சி செய்வது போன்றது. அப்படிச் செய்தால் நாம் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்போம். அல்லது தொடங்கிய இடத்தையே வந்தடைவோம். தன் இறுதியை மனத்தில் வைத்தே இயேசு தன் பணியையும் பயணத்தையும் தொடங்கினார். ஒரு நாளின் இறுதி எப்படி இருக்கும், ஒரு வாரத்தின் இறுதி, ஒரு மாதத்தின் இறுதி, ஒரு வருடத்தின் இறுதி, ஒரு வாழ்க்கையின் இறுதி எப்படி என்பதை நாம் மனத்தில் இருத்தித் தொடங்கினால், நாம் தேவையற்றவற்றைப் பற்றி எண்ணவோ, பேசவோ, செயல்படவோ மாட்டோம்.

இரண்டாம் நிகழ்வு. இயேசு தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றார். நம் இலக்கு மற்றும் பயணம் பற்றி எல்லாருக்கும் தெரியத் தேவையில்லை. எல்லாரும் புரிந்துகொள்ளவும் தேவையில்லை. இயேசு பாடுகள் வழியாக மாட்சிமை அடைவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், சீடர்கள் இயேசுவின் அரசாட்சி என்னும் மாட்சி பற்றி யோசிக்கின்றனர். ஒவ்வொருவரும் தன் மனத்திற்கு எது தோன்றுகிறதோ, அல்லது தனக்கு எது பிடிக்கிறதோ அதைத்தான் தெரிவு செய்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இயேசு அவர்களுடைய புரிதலின்மையைக் கண்டிக்கவில்லை. மாறாக, அவர்களுடைய புரிதலைத் திருத்த முயற்சி செய்கின்றார்.

மூன்றாம் நிகழ்வு. பத்து திருத்தூதர்கள் யோவான் மேலும் யாக்கோபு மேலும் கோபம் கொள்கின்றனர். கோபம் பயத்தின் வெளிப்பாடு. இந்தப் பயம் பொறாமையின் குழந்தை. எல்லாம் நெருங்கிய உறவினர்கள். அடுத்தவர் என்னைவிடச் சிறந்துவிடுவாரோ என்ற பயம், பொறாமையாக மாறுகிறது. பொறாமை கோபத்தைப் பெற்றெடுக்கிறது. கோபத்தின் பின்புலத்தில் தாழ்வு மனப்பான்மை ஒளிந்துகொள்கிறது. கோபத்தால் நாம் செய்யும் செயல்களுடன் குற்றவுணர்வு ஒட்டிக்கொள்கிறது. ஆனால், 'தாழ்ச்சி' என்ற பண்பு மேற்காணும் அனைத்தையும் வென்றெடுக்க உதவுகிறது. தாழ்ச்சி என்பது நம் அடையாளங்களைக் களையும் நிலை. ஒரு பாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளும் நிலை. அப்படி உரிக்கும்போது அது வலுவற்றதாக மாறுகிறது. ஆனால், அப்போதுதான் அது புதுப்பிறப்பு அடைகிறது. குழந்தை போன்ற அந்த நிலையில் எந்த ஒப்பீடும் எழுவதில்லை. அதுவே சீடத்துவத்தின் முதன்மையான பண்பாகவும் இருக்கிறது.

முதல் வாசகத்தில், சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், ஆண்டவராகிய கடவுள்முன் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களும் பணிந்து நிற்கும் நிலையை எடுத்துரைக்கின்றார். கடவுள்முன் நம் தாழ்நிலையை ஏற்றுக்கொள்தல் மிக எளிது. ஆனால், ஒருவர் மற்றவர்முன் அவ்வாறு ஏற்றுக்கொள்தல் கடினம்.

அக்கடினமான ஒன்றே இன்று நாம் சுமக்க வேண்டிய சிலுவை.

அச்சிலுவையில்தான் இயேசு தான் அறையப்படுவதாக முன்னுரைத்தார்.

 

1 comment:

  1. தந்தை இன்றையப்பதிவை மூன்றாகப் பிரித்திருந்தாலும் அந்த மூன்றாம் பகுதியே தனித்துவத்தோடு நிற்கிறது. கோபம்,பயம்,பொறாமை என்பவை ஒன்றையொன்று பெற்றெடுக்க “ தாழ்ச்சி” எனும் “virtue”( புண்ணியம் எனும் தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தை கூடுதல் அர்த்தம் தருவது போல் தோன்றுகிறது) அனைத்தையும் வென்றெடுக்க உதவுகிறது என்பது அதன் சிறப்பு.தாழ்ச்சி என்பது பாம்பு தன் சட்டையை உரித்துக்கொண்டு, வலுவற்ற நிலையில் புதுப்பிறப்பு எடுக்கிறது எனும் தந்தையின் கூற்று இரசிக்கும்படி உள்ளது.

    தாழ்ச்சியின் இன்னொரு பிறப்புதான் பணிவு எனும் தாழ்நிலை. தாழ்நிலையைத் தனதாக்க விரும்புபவன் சிலுவையையும் சுமக்க வருகிறான் எனும் அழகான செய்தியுடன் முடியும் தந்தையின் பதிவிற்காக நன்றிகள்!!!

    ReplyDelete