Monday, October 7, 2019

தேவையானது ஒன்றே

இன்றைய (8 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:38-42)

தேவையானது ஒன்றே

நேற்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் (நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு) தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (மார்த்தா-மரியா நிகழ்வு).

'நீயும் போய் அவ்வாறே செய்யும்' என்று தன்னிடம் கேள்வி கேட்ட மறைநூல் அறிஞரை வீட்டிற்கு அனுப்பிய இயேசு பெத்தானியாவிற்குச் செல்கின்றார். அங்கே பெண் ஒருவர் - மார்த்தா - இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்கிறார்.

வரவேற்றது என்னவோ மார்த்தாள்தான். ஆனால், இயேசுவோடு உடனிருந்தது மரியாள்தான்.

மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகிறாள். தனிமையாக விடப்பட்டதாக உணர்கிறாள்.

மரியாள் ஒன்றும் செய்யவில்லை.

'நீயும் போய் அவ்வாறே செய்யும்' என்று சொல்லி, 'நிறைய செயல்கள் செய்ய' மறைநூல் அறிஞரை அனுப்பி வைத்த இயேசு, ஒன்றும் செய்யாத மரியாளைப் புகழ்வதோடல்லாமல், 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று மரியாளின் சும்மாயிருத்தலை முன்வைக்கின்றார்.

நாம் சாலையில் காயப்பட்டுக் கிடக்கிறவர்களின் அருகில் சென்று அவர்களுக்கு மருந்திட்டு சாவடிக்கு அழைத்துச் சென்றாலும், மீதியான பணத்தைத் திருப்பிக் கொடுக்க மீண்டும் அங்கே சென்றாலும், தொடர்ந்து இப்படி நிறைய வேலைகள் செய்துகொண்டே இருந்தாலும், 'தேவையான ஒன்று' என்னவென்றால் 'ஒன்றும் செய்யாமல் இருப்பது.'

நம்முடைய கையில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனை எடுத்துக்கொள்வோம். காலையில் துயில் எழுந்தது முதல் அது நம்மோடேயே இருக்கிறது. அழைப்புகள், குறுஞ்செய்திகள், ஓலா முன்பதிவுகள், கூகுள் வரைபடம், இணையதள மேய்தல், துயில் எழுப்பி, வங்கி பரிவர்த்தனைகள் என அது நிறைய வேலைகள் செய்கின்றது. அதன் உயிராற்றல் (பேட்டரி) கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. உடனடியாக அதற்குத் தேவை சார்ஜிங் பாய்ண்ட்.

சார்ஜிங் பாய்ண்ட்டில் இருக்கும் ஃபோன் ஒரு வேலையும் செய்வதில்லை. ஆனால், அப்படி ஒன்றும் செய்யாமல் சும்மாயிருந்தால்தான் அது தன்னையே முழுமையாக ஆற்றல்படுத்திக்கொள்ளவும், அடுத்த வேலைக்குத் தயாராகவும் முடியும். 'என்னால் நிறைய வேலைகள் செய்ய முடியும்' என்ற எண்ணத்தில் அது செயலாற்றிக்கொண்டே இருக்கவும் முடியாது. பேட்டரி இல்லை என்றால் ஸ்மார்ட்ஃபோன் வெறும் பேப்பர் வெயிட்தான்.

நிற்க.

'ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.'

இன்று தேவையற்ற நிறைய காரியங்களை நாம் செய்கின்றோம். நிறைய காரியங்களுக்கு நம்மையும் நம் நேரத்தையும் விற்கின்றோம். காணொளி, வீடியோ கேம், அரட்டை, டிக் டாக், ஸ்டேடஸ் என்று நாம் நிறைய நேரத்தையும், அடுத்து என்ன நடக்கும் என்ற வீண் கற்பனையிலும் நேரத்தையும் ஆற்றலையும் விற்றுக்கொண்டே இருக்கின்றோம்.

இவை அனைத்தும் தேவையற்றவையே. தேவையானது அவருடைய காலடிகளில் அமர்வது.

இதை ஒருவர் தானாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இங்கே அருள்பணி பயிற்சி நிலையத்தில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி செபிக்க அழைத்தால் அவர்கள் பெயரளவில் வந்து அமர்வார்கள். ஆனால், 'உங்களுக்கு விருப்பமானால் இதைச் செய்யுங்கள்' என்று சொல்லி, அவர்கள் தாங்களாகவே தெரிவு செய்து செபிக்க வரும்போது மிகவும் ஆர்வமாக வருகிறார்கள். ஆக, தேவையான அந்த ஒன்றை நானே உணர்ந்து தேர்ந்து தெளிய வேண்டும்.

அதை மட்டும் நான் தேர்ந்து தெளிந்து அவருடைய பாதங்களில் அமரும் இன்பத்தை நான் பெற்றுவிட்டால் வேறு எதுவும் என்னை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.

குறைவான ஒரு குடத்தின் அருகில் செல்லும் இன்னொரு வெற்றுக்குடம் குறைவாகவே நிரம்பும்.

ஆனால், நிறைவான ஊற்றின் அருகில் செல்லும் வெற்றுக்குடம் பொங்கி வழியும்.

இன்று, நான் அன்றாடம் ஏறி இறங்கும் கழுதைகள் எத்தனை?

நான் சாவடிக்குச் சுமந்து செல்ல வேண்டிய ஆள்கள் எத்தனை?

நான் மறுபடியும் செலுத்த வேண்டிய பில்கள் - தெனாரியங்கள் - எத்தனை?

ஆனால்,

தேவையானவை இவை அல்லவே!

தேவையானது ஒன்றே!

1 comment:

  1. நிறைய செயல்களைச் செய்ய மறைநூல் அறிஞரை அனுப்பி வைத்த இயேசு, ஒன்றும் செய்யாத மரியாளைப் புகழ்வதோடல்லாமல், “ ஆனால் தேவையானது ஒன்றே”:என்று மரியாளின் சும்மா இருத்தலை முன் வைக்கிறார்.” தந்தையின்இந்த வரிகளில் கொஞ்சம் கேலி கலந்திருப்பதாக உணர்கிறேன். உண்மைதான். நாம் அன்றாடம் பார்ப்பது தான்.... ஊரில், வீட்டில் ,நாட்டில் மாடாய் உழைக்கும் எத்தனையோ பேர் எந்த சன்மானமுமின்றி ஓடாய்த் தேய, கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கும் சிலர் அதற்குண்டான அத்தனை பயனையும், பலனையும் அனுபவிப்பதை.ஆனாலும் இந்த்த் “தேவையானது ஒன்றே” எனும் சொற்றொடர் நம் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி விடுகிறது.இதை நியாயப்படுத்த தந்தை கூறும் ஃபோன் குறித்த விஷயமும் இது குறித்த விஷயத்தை மெய்ப்பிப்பதாகவே உள்ளது.அது தன் ஆற்றலை முற்றிலும் வெளிப்படுத்த அந்த ‘சும்மா இருத்தல்’ தேவைப்படுகிறது தான். நாளைக்கு எனக்காக காத்திருக்கும் வேலைகளின் பட்டியலை நான் நீட்டிக்கொண்டே போகலாம்.ஆனால் அதில் ‘இறை வேண்டல்’ என்ற ஒன்று இடம் பெற வில்லை எனில் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரே என்றுணர்த்துகிறது இன்றைய வலைப்பூ. எனக்கு எது தேவை; தேவையில்லை என்று பகுத்துணரவும்,அவருடைய பாதங்களில் அமருந்தை மட்டுமே என் பேறாக நினைக்கவும் அழைப்பு விடுக்கும் வரிகள்.நான் குறைவான குடத்தின் அருகில் செல்லும் இன்னொரு வெற்றுக்குடமா? அல்லது நிறைவான ஊற்றின் அருகிலிருக்கும் பொங்கி வழியும் குடமா? இரண்டாவது குடமாகவே இருக்க ஆவல் கொள்கிறேன்...... அதுவே “தேவையான ஒன்றென்பதால்.” இதே நிகழ்வை எத்தனை முறை தந்திடினும் ஒவ்வொரு முறையும் ஒரு புது நிகழ்வாக மாற்றி, கூடவே ஒரு புது விஷயத்தையும் வாசகர்களுக்குப் படைக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete