Friday, October 4, 2019

வெற்றியில் மகிழ்தல்

இன்றைய (5 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:17-24)

வெற்றியில் மகிழ்தல்

இன்று நம்மில் யாராவது எதிலாவது வெற்றி பெற்றால், அதை நம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பகிரும்போது அவர்கள் அந்த வெற்றியைத் தங்கள் வெற்றி போல நினைத்துக் கொண்டாடினால் நாம் பேறுபெற்றவர்கள்.

உளவியல்படி, நம்முடைய துன்பத்தில் சேர்ந்துகொண்டு பலர் அழுவார்கள். ஆனால், நம் வெற்றியை அவர்கள் வெற்றியாக வெகு எளிதில் கருதமாட்டார்கள்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவால் இருவர் இருவராக பணிக்கு அனுப்பட்ட சீடர்கள் இயேசுவிடம் திரும்புகிறார்கள். 'ஆண்டவரே, உம் பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன!' என மிகவும் மகிழ்கின்றனர். இயேசு அவர்களின் வெற்றி கண்டு மகிழ்கின்றார். ஒரு நல்ல தலைவனின் மகிழ்ச்சி பல தலைவர்களை உருவாக்குவதில்தான் இருக்கின்றது. 'ஐயயோ! இவர்களுக்கும் அந்த வல்லமை கிடைத்துவிட்டதா?' என்று அவர் வருத்தப்படவில்லை.

மேலும், 'சாத்தான் விழக் கண்டேன்' என்று பெருமிதம் கொள்ளும் இயேசு, 'இதற்காக அல்ல, மாறாக உங்கள் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டது என்பதற்காக மகிழுங்கள்!' என்கிறார். தொடர்ந்து, சீடர்களின் வெற்றிக்காகத் தன் தந்தையைப் புகழ்கின்றார், 'நீங்கள் பேறுபெற்றவர்கள்' என்று அவர்களை வாழ்த்துகின்றார்.

ஆக, இயேசுவிடம் எந்தவொரு ஒப்பீடோ, பொறாமையோ இல்லை.

தனக்கு அடுத்திருப்பவர்கள், அதிலும் குறிப்பாக தனக்குக் கீழிருக்கும் சீடர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாடுகிறார்.

இது எப்படி அவரால் முடிந்தது? அல்லது இன்று நான் எனக்கு அடுத்திருப்பவர் வெற்றி பெறுவதை கொண்டாடத் தடையாக இருக்கும் பொறாமை அல்லது ஒப்பீட்டை அகற்ற நான் என்ன செய்ய வேண்டும்?

மூன்று விடயங்கள்:

ஒன்று, வெற்றி பெற்றவரை வாழ்த்துவது. நேருக்கு நேர் வாழ்த்தும்போது எந்தவித எதிர்மறை எண்ணமும் மனத்தில் ஒட்டிக்கொள்வது இல்லை.

இரண்டு, அவருடைய வெற்றியில் கடவுளின் கரத்தைக் காண்பது. ஆக, என்னில் பிறரில் என எல்லாரிலும் செயலாற்றுபவர் கடவுளே என அறிக்கையிடுதல்.

மூன்று, அவருடைய பேறுபெற்ற, உயர்ந்த நிலையைச் சுட்டிக்காட்டுவது. அதாவது, அவருக்கு அடுத்த நிலையில் தான் நின்றுகொள்வது.

இம்மூன்றையும் செய்வதற்கு பரந்த மனமும் தாராள உள்ளமும் மிகவும் அவசியம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூ 4:5-12, 27-29) இதற்கு மாறான சோகமான நிகழ்வு ஒன்றைப் பார்க்கிறோம். 'சோகமான நிகழ்வில் இறைவனை அழையுங்கள். அவரே உங்களுடைய மகிழ்ச்சியைத் திரும்பத் தருவார்' என மக்களுக்கு அறிவுறுத்துகின்றார் பாரூக்கு.

சோகம், வெற்றி இரண்டிலும் நம் உள்ளம் பிறரைத் தேடுகிறது.

இவை இரண்டையும் பகிர்ந்து கொள்ளத் தோள்கள் பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள்.


1 comment:

  1. இன்றையப் பதிவைப் பார்த்தவுடன் என் கண்களில் பட்டவை அந்த இறுதி இரண்டு வரிகள்....” சோகம், வெற்றி இரண்டிலும் நம் உள்ளம் பிறரைத் தேடுகிறது.இவை இரண்டையும் பகிர்ந்து கொள்ளத் தோள்கள் பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள்.” ஒருவருக்கு ஆறுதல் தரும்...பிறருக்கு ஆறுதல் அளிக்க நம்மைத் தூண்டும் அழகான வார்த்தைகள்! அடுத்தவரின் வெற்றியில் தன்னைக்குறித்த ஒப்பீடோ,பொறாமையோ இல்லாத ஒருவரால் மட்டுமே அடுத்தவரின் வெற்றியைத் தன் வெற்றியாக்க் கொள்ள முடியும்.....தன் சீடர்களின் வெற்றியில் இறுமாப்பு கொண்ட இயேசு போல.இயேசுவால் சாதிக்க முடிந்தது என்னாலும் முடிய வேண்டுமெனில் வெற்றிபெற்றவரை நேருக்கு நேர் வாழ்த்துவதும்,அவருடைய வெற்றியில் இறைவனின் கரத்தைக்காண்பதும், அவரை மிஞ்சி நில்லாமல் அவருக்கு அடுத்த நிலையில் நான் நின்று கொள்வதுமே இதை சாத்தியமாக்கும் என்கிறார் தந்தை.எனக்குப்பிடிக்காதவர்கள் வெற்றிபெறுகையில் அவர்களை மனதாரப் பாராட்டுவது அத்தனை எளிய விஷயமில்லை தான்,.ஆனாலும் அனுபவத்தில் கூறுகிறேன்....ஒருமுறை உங்கள் அடிமனத்திலிருந்து எந்த தயக்கமுமின்றி நீங்கள் வேண்டாதவரென நினைக்கும் ஒருவரின் வெற்றிக்காக அவரைப்பாராட்டுங்கள்....பின் உணர்வீர்கள் .....சோகம்,வெற்றி இரண்டையும் பகிர்ந்து கொள்ள தோள்கள் பெற்றவர்கள் மட்டுமல்ல.... தோள்கள் கொடுப்பவர்களும் பேறுபெற்றவர்கள் என்பதை! அழகானதொரு வாழ்க்கைப்பாடம் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete