Thursday, February 9, 2017

விலக்கப்பட்ட கனி

இன்று மாலை டிவியில் இரண்டு கூட்டங்களைப் பார்த்தேன்.

பொதிகை டிவியில் மாலை 6 முதல் 7 வரை காட்டப்பட்ட மேல்மருவத்தூர் தைப்பூச ஜோதியைக் காணவந்தவர்களின் கூட்டம். இந்தக் கூட்டத்தின் மையமாக இருப்பவர் அருள்திரு பங்காரு அடிகளார். ஆதி பராசக்தி இவருக்குள் குடி கொள்வதால் இவரை 'அம்மா' என அழைக்கின்றனர். இவர் நடுவில் இருந்து ஜோதியை ஏற்றினார். ஏறக்குறைய 2 இலட்சம் பேர் இதை நேரிடையாகவும், தொலைக்காட்சி வழியாகவும் கண்டிருப்பார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நிற்கும் இந்த 'அம்மா' அவர்களின் உள்ளத்து உணர்வு எப்படி இருந்திருக்கும்?

(மேல்மருவத்தூர் பக்தி பற்றி ஆய்வு செய்ய எனக்கு ரொம்ப நாள் ஆசை. விரைவில் செயல்படுத்த வேண்டும்)

இரண்டாவது கூட்டம் ஏறக்குறைய அனைத்து செய்தி சேனல்களிலும் காட்டப்பட்ட சசிகலா ஆதரவாளர்கள் கூட்டம். போயஸ் கார்டன் - மெரினா - ஆளுநர் மாளிகை என சசிகலா சென்ற இடங்களில் எல்லாம் நின்ற அல்லது நிற்க வைக்கப்பட்ட கூட்டம். இந்தக் கூட்டத்தைப் பார்த்தவுடன் சசிகலாவின் உள்ளத்து உணர்வு எப்படி இருந்திருக்கும்?

இந்த இரண்டு கூட்டத்திலும் ஒன்று மட்டும் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்தக் கூட்டத்தின் நாயகர்கள் மட்டுமல்ல. இங்கிருந்த எல்லாருமே தங்களை கேமராவில் பதிவு செய்ய விரும்பினர். கேமரா தங்கள் பக்கம் திரும்பும்போது அவர்களின் செயல்பாடுகள் தங்கள் இருப்பை பதிவு செய்யும் விதமாக இருந்தன.

நிற்க.

கடவுள் தன் கேமராவுடன் ஏதேன் தோட்டத்திற்குள் வருகின்றார்.

தங்கள் இருப்பை பதிவு செய்ய விரும்பாத ஒரு இளைஞனும், இளவலும் தங்களுக்கென அத்தி இலைகளைத் தைத்துக்கொண்டு மரங்களுக்குப்பின் ஓடி மறைகின்றனர்.

இவர்களின் இந்தச் செயலில் இருந்துதான் மிகப்பெரிய இராணுவ உத்தி வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். போரின் போது காடுகளுக்குள் பயணம் செய்கின்ற அல்லது பதுங்குகின்ற வீரர்கள் தங்கள் உடல் முழுவதும் மரக்கிளைகளை அல்லது கிளைகள் போன்ற நிறம் உடைய ஆடையை அணிந்து கொண்டு மரமோடு மரமாக ஒட்டிக்கொள்வர் அல்லது நடந்து செல்வர்.

மனிதர்களாக நிற்க வேண்டியவர்கள் மரங்கள் போல நின்றனர் - ஆதாம், ஏவாள்.

ஓடியாடி விளையாட வேண்டியவர்கள் மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டு நின்றார்கள்.

இதுதான் கூட்டத்தில் நமக்கு ஏற்படும் உணர்வு.

நாம் நம் இயல்பை, தன்மையை மறந்து மற்றவரோடு ஒட்டிக்கொள்கிறோம்.

கூட்டம் எப்போதும் ஆபத்தானது.

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாருக்குப் பின் கூட்டம் என்ன ஆகும்?

சசிகலா - ஓபிஎஸ் நாற்காலி சண்டைக்குப் பின் கூட்டம் என்ன ஆகும்?

'என் கூட்டத்தில் நீ இருந்தால்தான் உனக்கு மரியாதை, அடையாளம், அருள்' என கூட்டங்கள் எப்போதும் மற்றவர்களைத் தங்களிடம் அழைக்கின்றன. கூட்டத்தோடு இணையாதவருக்கு 'கிறுக்கன், முட்டாள், ஒத்துவாழ தெரியாதவர்' என்றெல்லாம் பெயரும் வைக்கப்படுகின்றன.

ஆனால், நாளைய நற்செய்தி வாசகத்தின் (காண். மாற்கு 7:31-37) இயேசு கூட்டத்தின் ஆபத்தை உணர்ந்தவராக இருக்கிறார். ஆகையால்தான் காதுகேளாத அந்த இனியவரை 'கூட்டத்தைவிட்டு தனியே அழைத்துச் செல்கின்றார்.'

இன்றைய தமிழக அரசியல் மற்றும் ஆன்மீகம் கூட்ட அரசியலாக, ஆன்மீகமாக மாறிவிட்டது.

யார் பின்னால் அதிக கூட்டம் இருக்கிறதோ அவர் முக்கியமானவர், நல்லவர் என்றெல்லாம் நம்புவதற்கு நம் மனம் பயிற்றுவிக்கப்படுகின்றது.

கூட்டத்திலிருந்து யார் ஒருவர் பிரிய முடிகிறதோ அவரே ஆன்மீக மற்றும் அரசியல்வாதி.

ஆதாமையும், ஏவாளையும் மரத்திலிருந்து பிரிக்க நினைக்கின்றார் கடவுள். ஆகையால்தான் அவர்களுக்கு தோலால் ஆடை அணிவிக்கின்றார்.

நீ யாரிடமும் ஒட்டிக்கொள்ளாதே ஆதாம், ஏவாள்!

ஒட்டிக்கொண்டு உன் அடையாளத்தைத் தேடினால் விலக்கப்பட்ட கனியை நீ உண்டுவிட்டாய்.


2 comments:

  1. மனிதன் கூட்டத்தோடு இணைந்து நிற்க விரும்புவது ஒரு பாதுகாப்பிற்காகத்தான்.ஆனால் சில சமயம் அக்கூட்டங்கள் நம்மை ஆபத்தில் தள்ளுவது உண்மையே!.. மெரினாவில் இறுதி நாளன்று நம்முடைய இளவல்கள் சிலருக்கு நடந்தது போன்று.கூட்டம் என்பது அதன் நாயக,நாயகிகளுக்கு வேண்டுமெனில் ஒரு கிளுகிளுப்பைத் தரலாம்.ஆனால் கூட்டத்திற்கு செய்பவரின் பாடு பலசமயங்களில் ..?? கூட்டம் கலைந்த பின் நம் பாதுகாப்பு உணர்வும் சேர்ந்தே கலைந்து விடுகிறது.தந்தையின் வார்த்தைகளில் நாம் மனித இயல்பை விடுத்து மரங்களாகிப்போகிறோம்.நாம் தனித்து விடப்படும் போது மட்டுமே இறைவன் குரலை நம் செவிகள் உணர முடியும். "விலக்கப்பட்ட கனியை உண்டவனின் அடையாளமே கூட்டத்தோடு ஒட்டிக்கொள்பவனின் சுபாவம்" என்பது நம்முள் ஒரு குறுகுறுப்பை விட்டுச்செல்லும்.நல்லதோ கெட்டதோ மந்தையில் ஒருவர் என இல்லாமல் நம் தனித்துவத்தையும் காத்து நிற்க .அறை கூவல் விடுக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. ஆதாமையும், ஏவாளையும் மரத்திலிருந்து பிரிக்க நினைக்கின்றார் கடவுள். ஆகையால்தான் அவர்களுக்கு தோலால் ஆடை அணிவிக்கின்றார்.// different perception !!

    ReplyDelete