Sunday, February 5, 2017

சீடரின் குணம்

'மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது!'

கொடைக்கானல் மலையில் தங்கியிருந்து இரவில் சுற்றிலும் பார்த்தால் நிறைய விளக்குகள் எரிவது தெரியும். நின்று எரியும் விளக்குகள். நகர்ந்து கொண்டே இருக்கும் வாகனங்களின் விளக்குகள். ஆலய எல்.இ.டிக்கள், ஹோட்டல் விளம்பரங்கள் என நிறைய தெரிவது வானத்து நட்சத்திரங்கள் கொஞ்சம் இறங்கி வந்தது போல இருக்கும்.

தமிழில் 'உள்ளங்கை நெல்லிக்கனி,' 'வெள்ளிடை மலை,' 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு' என்ற சொல்லாடல்கள் உள்ளன.

அதாவது, நேருக்கு நேர் தெரிகின்ற ஒன்றை மறைக்க முடியாது.

இப்படித்தான் இருக்க வேண்டும் சீடரின் குணம் என்கிறார் இயேசு.

மற்றவரால் மறைத்துவிட முடியாத அளவிற்கு நம் குணம் உயர்ந்துவிட்டால் நாமும் ஒளிவீசலாம். இல்லையா?

'துன்பத்தால் மனஉறுதியும்,
மனஉறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்' (உரோ 5:3) என்ற பவுலின் வார்த்தைகள் இன்றைய காலை செபத்தில் வந்தன.

'தகைமை' என்றால் 'கேரக்டர்' அல்லது 'நடத்தை' என்று இன்று நான் கண்டுபிடித்தேன்.

ஆக, மனஉறுதிதான் என் நடத்தையை உருவாக்குகிறது.

ஒளியாக, உப்பாக இருப்பதும் ஓர்நாள் நிகழ்வு அல்ல. அது என் தொடர்நடத்தையால் வரும் பயன்.

1 comment:

  1. எந்நிலையிலும்,எந்த இடத்திலும் " இது நான் தான்; நான் இப்படித்தான்" என்று பிறருக்குப் பறை சாற்றக்கூடிய நம் " மன உறுதியுடன் " கூடிய நடத்தைக்குப் பெயர் தான் " தகைமை" என்கிறார் தந்தை. உளியால் செதுக்கச் செதுக்கப் பிறக்கும் சிற்பம் போல,தன் கைவண்ணத்தைக் காட்டக்காட்டச் சிறக்கும் குயவனின் பாண்டம் போல சம்பந்தப்பட்ட ஒருவரின் தொடர் நடத்தையால் வருவதே " உப்பாகவும்", " ஒளியாகவும்" இருப்பது.உண்மையே! இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ முடிந்தவரால் மட்டுமே
    " துன்பத்தால் மன உறுதியும்,மன உறுதியால் தகைமையும்,தகைமையால் எதிர் நோக்கும் விளையும்" எனும் வரிகளைக் தன் செபமாகவும் செபிக்க முடியும்.நாமும் முயல்வோம்...அனுதினமும்....இவ்வுலகிற்கு சாரமுள்ள உப்பாக; பிரகாசமான ஒளியாக மாற.அப்பொழுது தான் நாமும் விளக்குத்தண்டின் மேலிருந்து வரும் "ஒளி" யாக ஜொலிப்போம்.சிறிய வார்த்தைகளில் கொடுத்தத் தெளிவான கருத்துக்களுக்காகத் தந்தைக்கு என் நன்றிகள்! அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete