Friday, February 10, 2017

ஏதேன் தோட்டம்

மனிதர்களுக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் இரட்டை குணங்கள் உண்டு.

அடிக்கத் தெரிவது பொல அரவணைக்கத் தெரியும்.

காயப்படுத்தத் தெரிவது போல கொஞ்சத் தெரியும்.

தண்டிக்கத் தெரிவது போல பரிவு கொள்ளத் தெரியும்.

இத்தணூன்டு பழத்தைத் தின்றதற்காக மனுக்குலத்தின் தாயும் தந்தையும் ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். அவர்கள் மேல் பெரிய சாபங்கள் இடப்படுகின்றன.

நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்களும் தண்டனைகளும் பொருந்திப் போவதில்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றார் விவிலிய ஆசிரியர்.

இந்த இறைவாக்குப் பகுதியை எழுதிய ஆசிரியரின் கற்பனை வளத்தை நாம் பாராட்டிய தீர வேண்டும். கடவுள் - ஆதாம் - ஏவாள் - பாம்பு என நால்வர் மட்டுமே இருந்த தோட்டத்தின் எந்தப் பகுதியில் ஒளிந்திருந்து அவர் இந்த உரையாடல்களைக் கேட்டார்? கடவுளின் உள்ளக்கிடக்கையையும் அறிய அவரால் எப்படி முடிந்தது?

'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்.'

இந்த மேற்கோளை ஆசிரியர்கள் புரோட்டோ-எவாஞ்சலியம் என்கின்றனர் (நற்செய்தியின் முன்சுவை).

ஆனால் இதை நான் நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என்றே பார்க்கின்றேன். பல நேரங்களில் நன்மை தீமையை வெல்லும் என நாம் நினைக்கிறோம். 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். பின் தர்மமே வெல்லும்' என்கிறோம். நன்மையும், தர்மமும் இறுதியில் வென்றாலும் அவைகளும் காயம்படவே செய்கின்றன. இங்கே நன்மையின் குதிங்கால் காயப்படுகிறது. குதிங்கால் காயப்பட்டால் நாம் நொண்டி நொண்டிதான் நடக்க வேண்டும். ஆனால் இந்த குதிங்கால் தீமையின் தலையை நசுக்கிவிடுகிறது. ஆக. நன்மை தீமையை வெல்லும் என்பது விவிலியத்தின் பாடமாகவும் இருக்கிறது.

'நீ உண்டாயா? பெண்தான் எனக்குக் கொடுத்தாள். நீ ஏன் அப்படிச் செய்தாய்? பாம்பு என்னை ஏமாற்றியது.'

'நீ உண்டாயா?' என்ற கடவுளின் கேள்விக்குப் பெயர் ரெட்டரிக் கேள்வி. அதாவது கேட்பவருக்கும், வாசகருக்கும் விடை  தெரியும் ஒரு கேள்வி. 'ஆம்' என்பதுதான் பதில். ஆனால், அவனும், அவளும் தங்களுக்குக் கீழ் இருப்பவர்மேல் பொறுப்பைப் போடுகின்றனர்.

இந்த உலகத்தில் நடக்கும் தீமைக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்ற அடுத்த உண்மையை இது காட்டுகிறது.

நம் இந்தியாவின் வறுமைக்கு அல்லது ஊழல் ஏன்? என குடியரசுத்தலைவரைக் கேட்டால் அவர் பிரதமரை, அவர் அமைச்சர்களை, அவர் அரசுப் பணியாளர்களை, அவர் தனக்குக் கீழ் இருப்பவர்களை, அவர் அடித்தட்டு மக்களைச் சுட்டிக் காட்டுவார்கள்.

'நீ உன் கணவன் மேல் வேட்கை கொள்வாய். அவன் உன்னை ஆள்வான்.'

பெண்ணுக்கு ஆணின்மேல் இருக்கும் ஈர்ப்பையும் அந்த ஈர்ப்பினால் வரும் பயனையும் இங்கே காண்கிறோம்.

தனக்குப் பிடித்தவன் தன்னை ஆள வேண்டும், தனக்குக் கட்டளை இட வேண்டும், தன்னவளாகக் கொள்ள வேண்டும் என அதிகமாக மெனக்கெடும் அவள், சட்டென்று ஒருநாள், 'நான் என்ன உனக்கு அடிமையா?' எனக் கேட்பாள். ப்ரியம் என்ற ஆணின் மதுவில் இளைப்பாறும் அவள் திடீரென்று இப்படிக் கேட்பது அவனை அலைக்கழிக்கும். இதுதான் பெண் அரசியல்.

'நீ மண்ணிற்குத் திரும்பும்வரை நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.'

நாம் பிறப்பதற்கும், இறப்பதற்கும் இடையே உள்ள நோக்கத்தை இங்கே பதிவு செய்கின்றார் ஆசிரியர். உழைப்பதும், அந்த உழைப்பின்வழி உண்பதும்தான் நம் வாழ்வின் நோக்கம். இந்த உழைப்பு என்ற ஒன்று இல்லையென்றால் ஓய்வு என்பதன் அருமை நமக்குத் தெரியாது. உழைப்புதான் நம்மை அடையாளப்பத்துகிறது. சாக்பீஸ் என்பது என்ன? உழைப்பும் சுண்ணாம்பும் கலந்த கலவை. கணிணி என்பது என்ன? உழைப்பும் வன்பொருள், மென்பொருளும் கலந்த கலவை. நாம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து உழைப்பை மைனஸ் செய்துவிட்டால் அங்கே மிஞ்சுவது வெறும் மூலப்பொருளே.

'தன் மனைவிக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டான்.'

'ஏவா' என்றால் எபிரேயத்தில் 'பெண்' என்பது பொருள். சரியான பெயர்தான் பெண்ணுக்கு. ஆணின் விந்து ஒரு மனிதனுக்கு உடல் தருகின்றது என்றால், பெண்ணின் விந்து உயிர் தருகிறது என்பது எபிரேய நம்பிக்கை. பெண்தான் மனிதரின் உயிர், ஆற்றல் எல்லாம்.

இறுதியாக, தான் படைத்த தன் மகனை, தன் மகளை தன் தோட்டத்திலிருந்து, 'போத் ஆஃப் யூ, கெட் அவுட்' என்று சொல்லிவிடுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் வரும் புதிய ஏற்பாட்டு இயேசு பசியால் வாடி நின்றவர்கள்மேல் இரக்கம் கொண்டு, அப்பம் பலுகச் செய்கிறார்.

இதுதான் கடவுளின் இரண்டாம் முகம். பரிவு முகம்.

ஏதேன் தோட்டத்தை கண்டுபிடித்துவிட்டதாக சில பாஸ்டர்கள் டிவியில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அதைத் தேடி அலைய வேண்டாம் நாம்.

நம் உள்ளமும், நம் இல்லமும்தான் ஏதேன் தோட்டம்? எப்போது? வாழ்வின் இரட்டைத்தன்மைகளை நாம் அறிந்து ஏற்றுக்கொள்ளும்போது.

'ஆண்-பெண்,' 'நன்மை-தீமை,' 'தலை-குதிங்கால்,' 'வேட்கை-ஆள்கை,' 'உழைப்பு-ஓய்வு,' 'வா-போ,' 'அதட்டல்-பரிவு' என்னும் இரட்டைத்தன்மைகளை அப்படியே ஏற்று வாழ்வதுதான் ஏதேன் தோட்டம்.

3 comments:

  1. படிக்கப் படிக்கப் புருவங்களை உயர்த்த வைக்கும் ஒரு பதிவு. வாழ்வில் நாம் செய்யும் செயல்களும்,அதற்கான தண்டனைகளும் பொருந்திப் போவதில்லை எனினும், அவற்றைத்தான் நாம் பல சமயங்களில் விழுங்கி சீரணிக்க வேண்டியுள்ளது.நன்மை, தீமையை வெல்லும் என்பதும்,இந்த உலகில் நடக்கும் தீமைக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்பதும்,உழைப்பு என்ற ஒன்று இல்லையென்றால் ஓய்வு என்பதன் அருமை தெரியாமல் போய்விடும் என்பதும்,நாம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து உழைப்பை மைனஸ் செய்தால் மிஞ்சுவது மூலப்பொருளே என்பதும் நமக்கு அந்நியமான விஷயங்கள் இல்லை எனினும் தந்தை போன்ற ஒருவர் தேவைப்படுகிறார் இதை நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் எடுத்து வைக்க.ஆதாம்,ஏவாளின் கீழ்படியாமைக்காக அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டது இறைவனின் ஒரு முகம் எனில், பசியால் வாடியவர்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்காக அப்பம் பலுகச் செய்தது அவரின் இன்னொரு பரிவு முகம்.வாழ்வின் 'ப்ளஸ்-மைனஸ்', 'ஆண்- பெண்','- 'நன்மை- தீமை',' தலை- குதிங்கால்',' வேட்கை- ஆள்கை', 'உழைப்பு-ஓய்வு', 'வா-போ','அதட்டல்-பரிவு' எனும் இரட்டைத்தன்மைகளை அறிந்து ஏற்றுக்கொள்ளுகையில் நம் உள்ளமும்,இல்லமும் தான் ஏதேன் தோட்டம் என
    ஆணித்தரமாகக் கூறுகிறார் தந்தை.இந்தப்பதிவின் ஒவ்வொரு அட்சரமுமே இரசிக்கும்படி இருப்பினும் ஒரு விஷயத்திற்காகத் தந்தைக்கு ஒரு 'ஷேக்- ஹேன்ட்ஸ்' கொடுக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.' ஆணின் விந்து ஒரு மனிதனுக்கு உடல் தருகிறது என்றால்,பெண்ணின் விந்து உயிர் தருகிறது என்பது எபிரேய நம்பிக்கை என்பதற்கும் ஒரு படி மேலே போய் " பெண்தான் மனிதனின் உயிர்,ஆற்றல் எல்லாம்" என்று ஒத்துக்கொள்ளும் தந்தையின் பெரிய மனசுக்காகத்தான்.பரவால்ல...காலம் கடந்திடினும் ஒருநாள் உண்மையை ஒத்துக்கொண்டேயாக வேண்டும் என மெய்ப்பித்திருக்கிறார் தந்தை.வாழ்த்துக்கள்!!!


    ReplyDelete
  2. நன்மை தீமையை வெல்லும் என்பது விவிலியத்தின் பாடமாகவும் இருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். பின் தர்மமே வெல்லும்' இது நடந்தால் தமிழ் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். இன்றைய பதிவு மிகவும் அருமை. சாமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete