Friday, February 17, 2017

அன்பில்

'தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்' (மாற்கு 9:2-13)

மிக அண்மையில் என்னை அதிகம் அச்சத்து உள்ளாக்கிய ஒரு காணொளி திருமதி சசிகலா அவர்கள் பற்றியது. தான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்குச் செல்லுமுன் தன் தலைவி-அக்கா செல்வி ஜெயா அவர்களின் கல்லறைக்குச் சென்று பாஞ்சாலி சபதம் எடுக்கின்றார். மூன்றுமுறை அவர் ஓங்கி அடிக்கும்போது அவரின் கண்களில் தெறியும் கோபமும், வெறியும், அவரின் முகபாவணையும் எனக்கு மிகுந்த அச்சம் தருவதாக இருந்தது.

இப்படி ஓங்கி அடித்த கைகளில்தான் தமிழக முதலமைச்சர் பதவியைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார்.

கல்லறையில் மூன்றுமுறை ஓங்கி அடித்தார். அவர் செய்வது என்னவென்று அவருக்குத் தெரிந்தேதான் இருந்தது. அப்போது எல்லாரையும் ஓர் அச்சம் ஆட்கொண்டது.

இந்த நேரத்தில் யீட்ஸ் அவர்களின் 'இரண்டாம் வருகை' என்ற கவிதை நினைவிற்கு வருகிறது:

'நல்லவர்கள் தங்களுக்கென்று எந்த ஒரு கொள்கைப்பிடிப்பும் இருந்தனர்.
கெட்டவர்களோ தாங்கள் செய்யப்போவது பற்றி மிக வெறியோடு இருந்தார்கள்.'

நிற்க.

நாளைய நற்செய்தியில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கவிருக்கின்றோம்.

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்குத் தேவைப்பட்டதோ இல்லையோ, சீடர்களுக்குத் தேவைப்பட்டது. ஏனெனில் அங்கேதான் இயேசுவின் இறைத்தன்மையை அவர்கள் கண்டுகொள்கின்றனர்.

வழக்கம்போலவே இயேசுவை தவறாகப் புரிந்து கொள்கின்றனர் சீடர்கள்.

கடவுளின் மாட்சி முதல் ஏற்பாட்டில் இறங்கி வந்தபோது மோசே சந்திப்புக் கூடராம் கட்டினார். அப்படித்தான் இயேசுவையும் ஒரு கூடாரத்திற்குள் அடக்கி வைக்க நினைக்கின்றார் இயேசு.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பேதுரு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி முடிக்கின்றார். முதல் ஏற்பாட்டு சந்திப்புக் கூடாரமும் அச்சத்துக்குரிய இடமாகவே இருந்தது.

கடவுள் முன்னிலையில் நாம் கொள்ள வேண்டிய அச்சம் தேவையான அச்சம். இதை சமய எழுத்தாளர் ஓட்டோ அவர்கள், 'மிஸ்தேரியும் திரமெந்தும்' என்கிறார்.

நம் அன்பிற்குரியவர்களிடத்திலும் சில நேரங்களில் நாம் இந்த அருள்நிலை அச்ச உணர்வோடு இருக்கிறோம்.

பேதுருவிடம் இருந்த பிரச்சினை என்னவென்றால் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே எதையாவது சொல்லி விடுவது. பின் வாங்கிக்கட்டிக்கொள்வது.

ஆக, இன்று இறைவனையும், என் அன்பிற்குரியவர்களையும் பார்க்கும்போது நான் என்னவாகிலும் பேசிவிடுகிறேனா? ஏன் இந்த அச்சம்?

'அன்பில் அச்சத்திற்கு இடமில்லைதானே!'


1 comment:

  1. " இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்குத் தேவைப்பட்டதோ இல்லையோ,சீடர்களுக்குத் தேவைப்பட்டது.ஏனெனில் அங்கேதான் அவர்கள் இயேசுவின் இறைத்தன்மையைக் கண்டு கொண்டனர்". இயேசுவை சீடர்கள் தவறாகப் புரிந்து கொள்ள அவர்களை அச்சம் சூழ்ந்து கொள்கிறது என்கிறார் தந்தை.எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்? நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் இடி முழக்கங்களுக்கிடையே திடீரென்று உரு மாறி,அவர் இறந்து போன இருவரோடு உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டால் யாருக்கு அச்சம் வராது?இந்ந அச்சத்திற்குக் காரணம் சீடர்கள் இயேசுவின் வல்லமையைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லையே என்ற குற்ற உணர்ச்சியின் காரணமாக இருக்கலாம். இதன் காரணமாகத்தான் பேதுரு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியிருக்க வேண்டும். இந்த அச்சத்தைத் தந்தை நம் அன்பிற்குரியவர்களுடன் கொள்ளும் அச்சத்தோடு ஒப்பிடுகிறார்..." அன்பில் அச்சத்திற்கு இடமில்லை" என்று கூறியபிறகும்.சில சமயங்களில் நமக்கு நெருக்கமானவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளும் போது குற்றவுணர்ச்சி ஏற்படலாம்.அதனால் வாய்மூடி மௌனியாகலாம்; இல்லை எதையாவது பேசிவிட்டு வாங்கியும் கட்டிக்கொள்ளலாம்.ஆனால் இதற்குப் பெயர் "அச்சமா" என்று தெரியவில்லை.உணர்வுகள் தனித்தன்மை வாய்ந்தவை.அவற்றை ஒப்பிடுவது சரியல்ல. ஆனால் எதற்காகவும்,எந்நிலையிலும் இந்த உணர்வை சசிகலாவின் செய்கையோடு ஒப்பிட முடியாது.அவர்கள் எல்லாம் அச்சப்பட அல்ல, அச்சத்தை விதைக்க வந்தவர்கள். நாமும் "உருமாறவும்,உருமாறிய இயேசுவின் இறைத்தன்மையைப் புரிந்து கொள்ளவும்" அழைப்பு விடுக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete