Tuesday, February 7, 2017

உள்ளே வெளியே

எங்கள் குருத்துவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆன்மீக ஆண்டு என்ற ஒன்று உண்டு. அந்த ஆண்டில் நிறைய தியான பயிற்சிகள் நடைபெறும். ஒரு பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர் மூச்சுப் பயிற்சி நடத்தினார். இந்த மூச்சு பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், 'நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஊக்கம் போன்ற நல்ல குணங்களை நம் உள்ளே இழுக்க வேண்டும். நாம் மூச்சை வெளியே விடும்போது கலக்கம், துன்பம், பயம், விரக்தி போன்ற கெட்ட குணங்களை வெளியே தள்ள வேண்டும்.'

இந்தப் பயிற்சியை தொடங்குமுன், 'எல்லாம் புரிந்ததா? எதுவும் டவுட்டா?' என்று கேட்டார் ஆசிரியர்.

'ஒரு டவுட்டு' என்று கைதூக்கினார் மாணவர் ஒருவர்.

'என்ன?'

'இல்லை. ஏற்கனவே இந்த உலகத்துல கலக்கம், துன்பம், பயம், விரக்தி நிறைந்து கிடக்கு. இதுல என்னிடம் உள்ளதையும் நான் வெளியேற்றி அழுக்கை கூட்ட வேண்டுமா? நல்லதை நான் உள்ளே இழுத்துக்கொண்டு கெட்டதை நான் வெளியே தள்ளினேன் என்றால் நான் சுயநலவாதியாக அல்லவா இருக்கிறேன். சுயநலத்தைக் கற்றுத்தருவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கமா?'

சற்று நேரம் அமைதி.

நிற்க.

உள்ளே வருவது மனிதரை தீட்டுப்படுத்துவதில்லை. மனிதரிடமிருந்து வெளியே செல்வதுதான் தீட்டுப்படுத்துகிறது என்கிறார் இயேசு.

நாளைய முதல் வாசகத்தில் மனிதரைப் படைத்தல் நிகழ்வை வாசிக்கின்றோம். மனிதரை தன் உருவில் உருவாக்கும் இறைவன் அவரை ஏதேன் தோட்டத்தில் குடிவைக்கின்றார். இறைவனின் உருவைத் தாங்கிய மனிதருக்குள் எப்படி வந்தது தீட்டு?

தன் சமகாலத்து பரிசேயர்கள் தங்கள் உடலில் உள்ள தூய்மை கெட்டுவிடாது என்று பார்த்தார்களே தவிர, தங்கள் உள்ளத்து தூய்மை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

உள்ளம் என்பது நம் சிந்தனை.

பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்றவை எல்லாம் இரண்டு முறை நடைபெறுகின்றன. ஒன்று மனிதரின் உள்ளத்தில். இரண்டு வெளியே செயலில்.

ஆக, உள்ளம் சரி செய்யப்பட்டால் வெளியே நடக்கும் செயலை சரிசெய்து விடலாம்.

3 comments:

  1. மூச்சுப்பயிற்சி நடத்திய ஆசிரியரா? இல்லை டவுட்டு கேட்ட மாணவரா?...இதில் யார் கூற்று சரி? பட்டி மன்றம் வைக்க வேண்டிய விஷயம் தான். இப்பயிற்சிகளை நாம் மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ள வேண்டியது சுயநலமா? பிறர்நலமா? குழப்பமே மிஞ்சுகிறது.உள்ளே வருவதை உடல் சம்பந்தப்பட்டதாகவும், வெளியே செல்வதை உள்ளம் சம்பந்தப்பட்டதாகவும் வைத்துப்பார்த்தால் "உள்ளம் சரி செய்யப்பட்டால் வெளியே நடக்கும் செயலை சரி செய்து விடலாம்"எனும் தந்தையின் கூற்று சரி எனத் தோன்றுகிறது. சில சமயம் சிலர் கோணத்தனமாக யோசிப்பதும் சரி என்றே தோன்றுகிறது.அப்பொழுதுதானே ஒரு கருத்தை ஒரு 'கன்விக்‌ஷனோடு' ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புகிறது.கொஞ்சம் முரண்பாடாகத் தெரிந்திடினும் உண்மையை உணரவைக்கும் தந்தைக்கு, அவரது முயற்சிக்கு ஒரு 'சபாஷ்!'

    ReplyDelete
  2. அந்த மாணவர் நீங்க தானே, சாமி?

    ReplyDelete
  3. இதை வாசிக்கும் போது எனக்கு ஒரு சினிமா பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பம் இல்லை. ஆம் உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும். எனவே நாமும் நம்மால் பிறரும் மன அமைதியோடு வாழ நம் உள்ளத்தை சரி செய்துகொள்ள நல் சிந்தனை வழங்கிய தந்தைக்கு நன்றியும் வாழ்த்தும்.

    ReplyDelete