Thursday, February 16, 2017

மழலை மொழி

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல் ஆபரேஷன் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அருகில் இருக்கும் நபர், 'டாக்டர், நாங்களும் ஆபரேஷன் பண்ணலாமா?' என்று கேட்பார். அதற்கு அவர், 'கோஆபரேஷன்னு கேள்விப்பட்டதில்லையா. அத பண்ணுங்க!' என்பார்.

இன்று மேலாண்மையில் அதிகம் பேசப்படும் ஒரு பண்பு 'கூட்டு முயற்சி' அல்லது 'கூட்டு இயக்கம்' அல்லது 'கூட்டு ஆற்றல்.' ஒரு குடும்பம், நிறுவனம், கட்டமைப்பு என எது முன்னேற்றம் காண வேண்டுமென்றாலும் அங்கே கூட்டு முயற்சி அவசியம்.

மற்றொரு பக்கம் கூட்டு முயற்சியே தேவையில்லை எனவும், நாடு, நகரம், சமூகம், அரசியல், மதம் என்னும் அனைத்துக் கூட்டு முயற்சிகளும் வீண் என்பது சிலரின் வாதம்.
நாளைய முதல் வாசகத்தில் பாபேல் நகரத்துக் கோபுர வீழ்ச்சி நிகழ்வை நாம் வாசிக்கின்றோம்.

'பாபேல்' என்றால் எபிரேயத்தில் 'மழலையின் பெபெபெ - மழலைமொழி' என்பது அர்த்தம். மானிடத்தின் மழலைமொழி தோன்றியதை பாபேல் நிகழ்வு நமக்குச் சொல்கிறது.

ஒரே கூட்டமாக மக்கள் இருக்கிறார்கள். ஒரே மொழி பேசுகிறார்கள். ஒரே மாதிரி சாப்பிடுகிறார்கள். இந்த ஒரே என்ற நிலை நிலைத்து நிற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையோடு களிமண், கறும்புச்சாறு, முட்டை கலந்து கோபுரம் ஒன்றைக் கட்டுகின்றனர்.

அது மிஸ்டர் காட் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

இந்த மிஸ்டர் காட் அவர்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. நாம் செய்யும் சிலவற்றை தனக்குப் பிடிக்கிறது என்கிறார். சிலவற்றை பிடிக்காது என்கிறார்.

மக்கள் சேர்ந்து இருப்பது, ஒரே மொழி பேசுவது இவருக்குப் பிடிக்கவில்லை. ஸேடிஸ்ட் காட்!

சின்ன குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார். 'செங்கல்' என்று கேட்டவரை 'மண்' என புரிந்து கொள்கிறார். 'மண்' என்று கேட்டவரை 'தண்ணீர்' எனப் புரிந்து கொள்கிறார். ஒரே குழப்பம். 'அப்பம் கேட்டால் கல்லையும், மீன் கேட்டால் பாம்பையும் கொடுக்கும்' நிலை வந்துவிடுகிறது. தங்களைப் புரிந்து கொண்டவர்களை இணைத்துக்கொண்டு சின்ன சின்ன குழுவாக மக்கள் பிரிய ஆரம்பிக்கிறார்கள்.

பாபேல் கோபுரம் பாதியிலேயே நிற்கின்றது.

நான் பயணம் செய்யும்போது நிறைய வீடுகள் மற்றும் கோவில்கள் பாதியில் கட்டப்பட்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.

பணத் தட்டுப்பாடா, கட்டியவர் இறந்துவிட்டாரா, அல்லது அபசகுணமாக ஏதோ ஒன்று நடந்துவிட்டதா - எல்லாம் பாதியில் நிற்கின்றன.

பாதியில் நிற்கும் எல்லாவற்றுக்குப் பின்னும் பாபேல் மாதிரி ஒரு கதை இருக்கும். இந்தக் கதையில் கண்ணீர் இருக்கும்.

ஆனால், பாபேல் கோபுரம் பாதியில் நின்றாலும் மானுடம் தன் கிளைகளைப் பரப்பி வளர்கின்றது. மக்கள் மீண்டும் சேர்ந்து வாழ்கின்றனர். நிறைய கோபுரங்களைக் கட்டுகின்றனர்.

நாம் கட்டும் கோபுரங்களை, நாம் காணும் கனவுகளை, நாம் எழுதும் திட்டங்களை, மொத்தத்தில் நமது பாபேல்களை சில நேரங்களில் கடவுளே கலைத்துவிடுவார். அந்த நேரங்களில் கவலை வேண்டாம். ஏனெனில், நாம் மற்ற இடத்தில் சென்று நம்மையே பரப்பிக்கொள்ள அவர் இடத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார்.

கண்ணாடியின் முன் நின்று நானும் 'பெபெபெ' என்று மழலை பேச ஆசை.

வாழ்க்கை முழுவதும் மழலை மொழி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருந்தால் எத்துணை நலம். மழலை மொழி யாரையும் காயப்படுத்துவதில்லை. மழலை மொழியை யாரும் தவறாகப் புரிந்துகொள்வதில்லை. மழலை மொழியால் சண்டைகள் வருவதில்லை.

மானிடத்தின் மழலை மொழி பாபேல். என் வாழ்வின் பாபேல்களுக்கும் அதுவே மருந்து.

4 comments:

  1. எத்தனையோ முறை வாசித்தும்,கேட்டும் பழக்கப்பட்ட ஒரு நிகழ்வுதான்.ஆனால் அதற்கு இப்படியெல்லாம் கூட விளக்கம் கொடுக்க முடியும் என்பதைத் தந்தையின் எழுத்துக்கள் நிருபிக்கின்றன.இந்தப்பதிவில் என் மனத்தைத் தொட்ட தந்தையின் வரிகளையே திருப்பித்தருவது தான் அவரின் எழுத்துக்கு நான் செய்யும் நியாயம் எனத்தோன்றுகிறது." நான் பயணம் செய்யும்போது நிறைய வீடுகள் மற்றும் கோவில்கள் பாதியில் கட்டப்பட்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன். பணத்தட்டுப்பாடா,கட்டியவர் இறந்து விட்டாரா,அல்லது அபசகுணமா..ஏதோ ஒன்று காரணம்.பாதியில் நிற்கும் எல்லாவற்றுக்கும் பாபேல் மாதிரி ஒரு கதை இருக்கும்.இந்தக்கதையில் கண்ணீர் இருக்கும்.ஆனால் பாபேல் கோபுரம் பாதியில் நின்றாலும் மானுடம் தன் கிளைகளைப் பரப்பி வளர்கிறது.மக்கள் மீண்டும் சேர்ந்து வாழ்கின்றனர்.நிறைய கோபுரங்களைக் காட்டுகின்றனர்." உண்மைதான்.பாதியில் நின்றுபோன ஒரு காரியத்தை நினைத்து துவண்டு போகாமல் திரும்பவும் மனிதன் எழுந்து நிற்பது எத்துணை ஆரோக்கியமான விஷயம்! தந்தையே! தங்களது பதிவைக்கண்ட பிறகு எனக்கும் கூட " யாரையும் காயப்படுத்தாத" மழலை மொழி பேச ஆசையாக இருக்கிறது.ஆனால் நம் சமூகம் உடனே எனக்கு வேறு பெயர் சூட்டி விடுமே! என்ன செய்ய? மீண்டும்,மீண்டும் படிக்கத்தூண்டும் ஒரு பதிவைத்தந்த தந்தைக்கு என் பாராட்டுக்கள் பத்தாது.அதற்கும் மேலே.....என்ன தரலாம்? யோசிக்கிறேன்.....வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous2/16/2017

    Hi Yesu hats off to you

    ReplyDelete
  3. Anonymous2/16/2017

    Hi Yesu hats off to you

    ReplyDelete
  4. At a different perspective ... good fr..

    ReplyDelete