Saturday, February 11, 2017

லூர்த் அனுபவம்

இன்று (11 பிப்ரவரி) லூர்தன்னையின் திருநாள்.

கடந்த ஆண்டு மே மாதம் 10-12 வரை நான் பிரான்சு நாட்டின் லூர்து நகர் சென்றிருந்தேன். சென்று வந்து திரும்பிய என் அனுபவத்தை நான் என் டைரியில் பதிவு செய்தேன்.

அந்த டைரிக்குறிப்புகளின் சில வரிகளை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன்:

லூர்த் அனுபவம் மிக இனிய அனுபவமாக இருந்தது.

விமானம், பேருந்து, இரயில் என மூன்றிலும் பயணம் செய்து அன்னையின் ஆலயத்தை அடைந்தபோது இரவு 9 ஆகிவிட்டது. புதிய இடம்தான் என்றாலும் ஏதோ வந்து போன இடம் போலவே இருந்தது. நான் தங்க வேண்டிய ஓட்டலை நானே தேடி கண்டுபிடித்து அடைந்தேன். திருத்தலத்தின் மேல் ஐந்நூறு மீட்டரில் அது இருந்தது. இம்மாகுலேட் கன்செப்ஷன் அருட்சகோதரிகளில் அது நடத்தப்படுகிறது. பாவப்பட்ட இடம். ஆனால், இனிமையான வரவேற்பு.

ஐந்து முக்கிய வாழ்க்கைப் பாடங்களை இந்த திருப்பயணத்தில் நான் கற்றுக்கொண்டேன்:

1. வேற்று ஊரில் இருக்கும்போதுதான் நம் சொந்த ஊரின் இனிமை புரிகிறது. வேற்று இல்லத்தில் இருக்கும்போதுதான் நம் சொந்த இல்லத்தின் இனிமை புரிகிறது. தங்கும் இடம், உணவு, தட்பவெப்பநிலை எதுவும் பிடிக்கவில்லை. ஆனால், எனக்கே ஆச்சர்யம். ஒரு நொடி கூடி நான் அவற்றின் அசௌகரியம் உணரவில்லை. 'இல்லை' என்பதை ஏற்றுக்கொண்டாலே அங்கே அதனுடனான போராட்டம் மறைந்துவிடும்போல. 

2. லூர்து மாதா ஊற்றில் குளித்தபோது உடையில்லாமல் மற்றவர் முன் நின்றபோது, ஒரு கட்டத்தில் நம் வாழ்வில் நம்மையே விரித்துக் கொடுக்கும், நம்மேல் நமக்கே உரிமை இல்லாமல் போகும் நிலை வரும் என்று உணர்ந்தேன். எந்தவித தயக்கமோ, எந்தவித வருத்தமோ இன்றி நான் தண்ணீருக்குள் இறங்கினேன். 'உங்கள் கருத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என்றார் அங்கிருந்தவர். அந்த நேரத்தில் என் மனத்தில் ஒரு கருத்தும் தோன்றவில்லை என்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம்.

3. பணம், படிப்பு, பெயர், புகழ், அம்பிஷன் - இவை மட்டும் வாழ்க்கை அல்ல. சொல்லப்போனால் இவை வாழ்க்கை அல்ல. இந்த எந்தவொரு நோக்கத்திற்கும் அல்லாமல் தங்கள் வாழ்வை அந்த ஆலயத்திற்காக தன்னார்வமாக அர்ப்பணித்த நிறையப் பேரைச் சந்தித்தேன். 'எப்படி அவர்களால் இப்படி இருக்க முடிகிறது?' என்ற ஆச்சர்யம்தான் எனக்கு இருந்தது.

4. முழுவதும் அடுத்தவரை நம்பியிருந்த அனுபவம் இனியதாக இருந்தது. மொழி தெரியாது, நபர்கள் தெரியாது, ஒரு ஃபோட்டோ எடுக்கக் கூட அடுத்தவர்களின் துணையை நாட வேண்டி இருந்தது. எல்லாவற்றிற்கும் அடுத்தவரைச் சார்ந்து நின்ற அந்த ஒவ்வொரு நொடியும் தாழ்ந்து போவதற்கும், உதவி கேட்பதற்கும்கூட துணிச்சல் வேண்டும் என உணர்ந்தேன்.

5. மாதா அங்கே தோன்றினார்கள், அல்லது தோன்றவில்லை என்ற தயக்கம் ஒரு பக்கம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை போக்குவது என் திருப்பயணத்தின் நோக்கமில்லை. ஆனால், இந்தத் தயக்கத்தையும் தாண்டி அங்கு நம்பிக்கையோடு வரும் திருப்பயணிகள்தாம் என் நம்பிக்கையைத் தட்டி எழுப்புகின்றனர். கேள்வி கேட்பதற்குத் துணிச்சல் தேவையில்லை. கேள்வி கேட்காமல் நம்புவதற்குத்தான் துணிச்சல் அதிகம் தேவை. 

என் அருட்பணி வாக்குறுதிகளைப் புதுப்பித்தேன். நான் தவறிழைத்த எல்லாரிடத்திலும் மனதளவில் மன்னிப்பு வேண்டினேன். என் அர்ப்பணத்தின் புதுப்பித்தலின் அடையாளமாக பின்வரும் இறைவாக்கை எடுத்தேன்:

'ஆகையால் நீங்கள் உங்கள் 
நம்பிக்கையோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும்,
அறிவோடு தன்னடக்கமும்,
தன்னடக்கத்தோடு மன உறுதியும்,
மன உறுதியோடு இறைப்பற்றும்,
இறைப்பற்றோடு சகோதர நேயமும்,
சகோதர நேயத்தோடு அன்பும்
கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்'
(2 பேதுரு 1:5-7)


இந்த எட்டு பண்புகள்தாம் என்னிடம் தேவை என்பதை உணர்கிறேன்.

2 comments:

  1. அழகான பதிவு.லூர்து நகர் சென்று வந்த அனைவருமே இந்த ஒரு அனுபவத்தைத் தான் உணர்ந்திருப்பார்கள்.....இப்படி மனத்தில் உள்ளதை வார்த்தை வடிவில் பிரதிபலிக்கும் திறமை இல்லாதோரும் கூட.இத்தனை நேர்மறையான உணர்வுகளையும் பட்டியலிட்ட பிறகு " மாதா அங்கே தோன்றினார்கள்,அல்லது தோன்றவில்லை என்ற தயக்கம் ஒரு பக்கம் இருந்தது" என்று கூறுவது அவரது வெளிப்படைத்தன்மையைக் காட்டுகிறது.இன்னுமொரு முறை போய்வந்தால் இருக்கும் தயக்கம் பூரணமாகத் தீர்ந்துவிடும் என்பது என் தீர்க்கதரிசனம்.தந்தை தன் அர்ப்பணத்தின் புதுப்பித்தலின் அடையாளமாக எடுத்த இறைவாக்கின் வரிகள்
    " ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும்,நற்பண்போடு அறிவும்,அறிவோடு தன்னடக்கமும்,தன்னடக்கத்தோடு மன உறுதியும்,மன உறுதியோடு இறைப்பற்றும்,இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்".. ....அன்னையின் அடிச்சுவட்டைப் பற்றிக்கொள்ள நினைக்கும் அனைவரின் அர்ப்பண வார்த்தைகளாக இருக்க வேண்டும்.இன்று மாலை புதூர் லூர்தன்னையின் திருத்தலத்திற்குச் செல்லவிருக்கும் நான் இந்த வரிகளை வாழ்வாக்க அன்னையின் அருளை வேண்டி வருவேன்.பல நேரங்களில் எனக்கு கிரியா ஊக்கியாக நின்று செயல்படும் தந்தைக்கு என் நன்றியும்! வாழ்த்துக்களும்!! அனைவருக்கும் அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous2/11/2017

    Happy Feast Day Dr Yesu

    ReplyDelete