
இன்று திருநீறு அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம். இது பாவத்தை நினைத்து பரிதவிக்கும் பாவத்தின் காலமோ, பூ வைக்காமல், பொட்டு வைக்காமல், முகச்சவரம் செய்யாமல், செருப்பு அணியாமல் இருக்கும் சோகத்தின் காலமோ அல்ல. இது ஒரு தயாரிப்புக் காலம். உயிர்ப்பின் மகிழ்ச்சியை நமதாக்கும் காலம். இந்தக் காலத்தில் ஆலயத்திலும் பூ வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். மேலை நாடுகளில் இந்தப் பருவத்தில் பூக்கள் பூக்காது. அதனால் அவர்கள் பூ வைப்பதில்லை. அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொண்டதை நாம் ஏனோ வெறும் சடங்காகவே மாற்றிக் கொண்டுவிட்டோம். நம் நாட்டின் பருவநிலை சமநிலையானது. எல்லா நாட்களிலும் இங்கு பூக்கள் பூக்கும். எல்லா நாளும் நமக்குத் திருநாளே. வருடம் எல்லாம் இறைச்சி, வெண்ணெய் எனச் சாப்பிட்டு கொழுத்துவிட்டு நாற்பது நாட்கள் தவக்காலத்தில் அவர்கள் நோன்பு இருப்பது உடல்நலத்திற்காகத்தான் அன்றி அதில் ஆன்மீகம் இல்லை. ஆனால் இங்கே நோன்பு என்பது வருடம் முழுவதும் ஒரு சில வீடுகளில் பட்டினி என்று தவம் கிடக்கிறது. ஆகையால் எக்காலம் போல தவக்காலத்திலும் இயல்பாக வாழ்வோம்.
தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று நாம் வாசித்த வாசகம் செபம், நோன்பு, பிறரன்புச் செயல் பற்றி இருக்கின்றது. இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் செபம் என்பது 'இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு', நோன்பு என்பது 'நமக்கும் நமக்கும் உள்ள உறவு', பிறரன்புச் செயல் என்பது 'நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு'. இந்த மூன்று உறவுகளையும் மறுஆய்வு செய்ய தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த மூன்றிலும் இயேசு முன்வைப்பது என்னவென்றால், 'நாம் செய்வது நமக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டும்'. நாம் செய்வது நம்மைப் பற்றிய தம்பட்டம் அடிக்கவோ, நம்மை நாமே நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது என்பதுதான். ஜென்னின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் இந்த மூன்று செயல்களுமே 'ஒரு கை எழுப்பும் ஓசையாகத்தான் இருக்க வேண்டுமே' தவிர 'இரு கை எழுப்பும் சப்தங்களாக இருக்கக் கூடாது'.
நோன்பு - நமக்கும் நமக்கும் உள்ள உறவு. நோன்பு என்பது எல்லா மதங்களிலும் முன்வைக்கப்படும் ஒன்று. நோன்பு என்பது ஆன்மீக மதிப்பீடு என்பதைவிட உடலியல் சார்ந்த மதிப்பீடே என்று சொல்லலாம். 'வாழும் கலை' என்ற தியான மையத்தின் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால் நம் உடலுள் நடக்கும் நிகழ்வுகளைச் சிந்திப்பது. நம் உடலின் வெளிப்புறத்தை நாம் பாதுகாக்கும் அளவிற்கு நம் உடலின் உட்புறத்தை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 'எல்லாம் நன்றாக நடப்பதால்' அதைக் கண்டுகொள்வது கிடையாது. சிறுநீரகக் கல் என்று ஒன்று வந்தால்தான் நம் உடலில் சிறுநீரகம் இருப்பதே தெரிகின்றது. மாரடைப்பு வந்தால்தான் இதயம் நினைவிற்கு வருகிறது. மூச்சுத்திணறல் வந்தால் தான் நுரையீரல் நினைவிற்கு வருகிறது. நம் பிறப்பு முதல் நம் இறப்பு வரை நம் உடன் வருவது நம் உடலில் உள்புறங்கள். நாம் பிறந்த அன்று நம்மில் தொடங்குகிற இரத்த ஓட்டம் நாம் இறப்பதற்குள் எத்தனையோ இலட்சம் மைல்கள் பயணம் செய்கின்றன. நோன்பு நம் உடலைப் பற்றி நினைக்க நமக்கு அழைப்பு விடுகிறது. உடலின் இயக்கத்திற்கு நாம் தரும் சிறு ஓய்வே நோன்பு. தவக்காலத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் நோன்பு நமக்கு மிகுந்த பயன் தருகிறது. மேலும் நோன்பில் நமக்கு நம் பசியும், நமக்கருகில் இருப்பவர்களின் பசியும் நினைவிற்கு வருகிறது.
இறைவேண்டல் - நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு. நம் உடலின் இயக்கமாக இருப்பவர் இறைவன். அவர் நம்மை இயக்குவதை நாம் உணரும் ஒரு வழியே இறைவேண்டல். 'எனக்கு அது வேண்டும், இது வேண்டும்' என்று கேட்கும் விண்ணப்பம் மட்டும் இறைவேண்டல் அல்ல. நன்றி, புகழ், மன்னிப்பு என அனைத்துமே இறைவேண்டல்தான். இயற்கைக்கும், இயற்கையைக் கடந்த இறைவனுக்கும் இடையே நடக்கும் உறவே இறைவேண்டல். எப்போதெல்லாம் நாம் இறைவேண்டல் செய்கிறோம்?
பிறரன்புச் செயல் - நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு. நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் செய்யும் உதவி மேலிருந்து கீழ் செல்லும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. நாம் செய்யும் உதவிகள் பல நேரங்களில் 'இருப்பவர் - இல்லாதவர்' என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் ஆபத்தும் இருக்கின்றது. உதவி என்றால் பொருளுதவி என்றே பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். நம் அனைவருக்குமே பொதுவாக இருக்கும் அறிவு, ஆற்றல், நேரம் என அனைத்தையும் பிறரோடு பகிர்வதும் பிறரன்புச் செயலே.