Tuesday, December 9, 2014

கழுகுகள் போல்

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார். (காண்க எசாயா 40:25-31)

இன்றைக்கு நம்ம திருப்பதி கோயிலுக்கு திரு. ராஜபக்சே அவர்கள் வந்து சென்றிருப்பதற்குப் பல தமிழக இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. நம்ம பாட்டுக்கு அமைதியா இருந்தா அவர் பாட்டுக்கு வந்துட்டுப் போயிருப்பாரு. இப்போ சும்மா சும்மா கத்துனதுனால யாருக்கு நஷ்டம்? அவருக்கா? நமக்குத்தான் நஷ்டம். நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர். நல்லா பாருங்களேன். எப்பல்லாம் இலங்கை கிரிக்கெட் டீக் இந்தியாவிடம் தோற்கிறதோ அப்பெல்லாம் நம்ம மீனவர்கள் பிடிபடுவாங்க. ஆக, அந்த நாட்டுக்காரர்களின் கோபத்துக்குப் பலியாவது நாம் தான். நம்ம வைகே, ராமதாஸ் குருப் எல்லாம் சும்மா ஏஸி அறையில உட்கார்ந்துகிட்டு அறிக்கை விடுறாங்க, ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரானவர் என்று. ஆனா இவங்க மட்டும் தமிழர்களுக்கு ஆதரவானவர்களா? எல்லாம் சும்மா வெட்டிப் பந்தா! எல்லாம் நம்மள வச்சி பொழப்பு நடத்துறாங்க அவ்வளவுதான். நாளைக்கே இலங்கையில் இருக்கிற தமிழர்கள் ஒன்னு சேர்ந்து நீ யாருடா என்று இவர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டால் அப்புறம் நம்ம சீமான், வைகோ, கலைஞர், ராமதாஸ், அம்மா எல்லாம் வேற ஏதாவது வேலை பார்க்க வேண்டியதுதான்.

தமிழ் பேசறதுதான் நம்ம அடையாளமா? இதுதான் என்னோட கேள்வி. ஆஸ்திரியாவிலும் ஜெர்மன் தான் பேசுறாங்க. ஜெர்மனியிலும் ஜெர்மன் தான் பேசுறாங்க. ஸ்விட்சர்லாந்திலும் ஜெர்மன் தான் பேசுறாங்க. அதுக்காக நாங்க மூணு பேருமே ஜெர்மன்காரங்க என்று சொல்வதில்லையே. ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் ஆங்கிலம் பேசுறாங்க என்பதற்காக எல்லாரும் ஆங்கிலேயர்கள் என்று சொல்லிட முடியுமா?

என்னதான் ஈழத்தமிழர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் இலங்கைக்காரர்கள் தாம். வேறு ஒரு நாட்டின் பிரச்சினைக்குள் தலையிடுவது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குத்தான் சமம். முதலில் நாம் இந்தியர்கள். பின் தமிழர்கள். இதுதான் என் நிலைப்பாடு. ஆனா அதுலயும் சிக்கல் இருக்கு. தண்ணி தரமாட்றான் சுத்தி இருக்குறவன். சரி கடல் தண்ணியைக் குடிக்கலாம்னா அங்கேயும் அணுஉலையை வைக்கிறான். ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்க நம்ம கத்தி விஜய் வீராணம் குழாய்க்குள்ள இறங்குன மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்க்க நாம கொஞ்சம் அணுஉலையை முற்றுகையிட்டா சரியாப் போகும். நம்ம பலத்தை விட்டுவிட்டு நம்ம பலவீனத்தையே நினைத்து கெஞ்சிக்கிட்டு இருக்கிறோம். ஒரு வருடத்திற்கு நம்ம ஊர்ல யாரும் ஐயப்ப சாமி கோவிலுக்கு போகலைன்னு வையுங்க. அப்புறம் சபரிமலையை மூட வேண்டியதுதான். ஏன்யா! நம்ம முருகன் சாமிக்கு என்ன குறைச்சல்! அவருக்கு மாலை போடுங்களேன். நான் சின்ன வயசில பழனிக்கும், திருச்செந்தூருக்கும் மாலை போட்டிருக்கிறேன். அப்பவே 'சாமி' 'சாமி' னு கூப்பிடுவாங்க.

சரி. எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்விட்டோம்.

'ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்களை' பற்றி இன்றைய இறைவாக்குப் பகுதி பேசுகின்றது. இன்னைக்கு நமக்கு யார்மேல நம்பிக்கை வைக்கிறதுன்னு தெரியாம இருக்கோம். ஆவின் பால நம்புனா அதுல தண்ணி. காவிரி ஆற்றை நம்பினா அதன் குறுக்கே அணை. முதல்வரை நம்பினா அவர் 'நான் அவன் இல்லை' மாதிரி பதில் சொல்றார். சரி கடவுளையாவது நம்புவோம்னா. அதுலயும் பிரச்சினை.

பகவத் கீதையை நம்ம தேசிய நூலாக்கணுமாம். ஏன்னா ஒபாமாவுக்கு அதைத்தான் மோடி கொடுத்தாராம். நாளைக்கே ஒபாமா தங்கியிருக்கிற ஓட்டல்ல பேஸ்ட் இல்லனு சொல்லி, அந்தப் பக்கம் பல் துலக்கிகிட்டு போன மோடி, 'தம்பி! இந்தாங்க கோல்கேட்! சும்மா பயன்படுத்துங்க!' அப்படின்னு சொன்னார்னு வச்சிக்குவோம். அப்போ கோல்கேட் நம் தேசிய பற்பசை ஆகிவிடுமா? என்னம்மா சுஸ்மா மா இப்படி பண்றீங்களேமா?

எங்க அம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி வாக்குவாதம் வருவது செபம் செய்வதில். 'உனக்காக ப்ரேயர் பண்ணினேன்' என்று சொன்னதற்காக எங்க அம்மாவிடம் நான் நிறைய நாட்கள் சண்டை போட்டதுண்டு. உனக்கு ஏதாவதுனா சொல்லு நான் பிரேயர் பண்றேன் என்று ஒருநாள் அவர்கள் கேட்க, நானும் 'நிரந்தர உலக அமைதிக்காக' ப்ரேயர் பண்ணுங்க என்றேன். ஏன்னா அது நிச்சயம் கிடைக்காது என்று தெரியும்.

ஆனா, அவங்க கோவிலுக்குப் போய்ட்டு வரும் போது அவங்களைப் பார்க்கும் போது பொறாமையா இருக்கும்.

இப்படி ஆண்டவரை மட்டுமே நம்புறவங்களைப் பற்றித்தான் இன்றைய வாசகம். ஆண்டவரை நம்புபவர்கள் கழுகுபோல இருப்பார்களாம். பறவைகளில் எனக்கு மிகவும் பிடித்தது கழுகு. அது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சின்னத்தில் இருப்பதால் அல்ல. அதன் குணங்களுக்காகத்தான். கழுகு இறந்ததை ஒருபோதும் திண்ணாது. கொன்றுதான் திண்ணும். ஆனா இப்ப இருக்கிற கழுகுங்க எப்படின்னு தெரியல!

அது ஓடும். ஆனால் களைப்படையாது. நடக்கும். ஆனால் சோர்வடையாது.

இப்படித்தான் இருப்பார்கள் ஆண்டவரை நம்புபவர்களும்.

ஆண்டவரை நம்பலாம் தான். ஆனா எல்லாம் இருட்டா இருக்கே. அவர் இருக்கா இல்லையான்னே தெரிய மாட்டுக்குதே.

இன்று ஒரு நாள் மட்டுமாவது முழுமையாக நம்பிப் பார்க்கலாமே!


1 comment:

  1. என்ன தந்தையே! அந்த காலத்து எம்.ஆர்.ராதா ஸ்டைல்ல பேச ஆரம்பிச்சுட்டீங்க...நம்முடைய அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதே வேஸ்ட் ஆஃப் டைம் என்பதே என் கருத்து.ஸ்திரமற்ற வார்த்தைகளை அள்ளி வீசும் சுயநலவாதிகள். நமக்கு ஸ்திரமளிக்கும் 'ஆண்டவரை' மட்டுமே நம்புவோம்; இறக்கைகளை விரித்து உயரே பறப்போம்.ஆண்டவர் இருக்காரான்னு டவுட்டு வந்தா 'விசுவாசம்'(faith) எனும் டார்ச் லைட்டை அடித்துப் பாருங்கள்; உங்கள் கண்முன்னே வந்து கைகொடுப்பார்....அத்த்தான் நாங்கள்ளாம் செய்றோம்....

    ReplyDelete